தட்சனின் யாகத்தில் பங்கு பெற்று சிவனின் நிந்தனைக்கு உள்ளான தேவர்கள் அனைவரும் அதன் பலனாக சூரபத்மனால் கொடும் துன்பத்துக்கு ஆளானவர்கள். சிவ பார்வதி மைந்தனால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று அரிய வரத்தை சூரபத்மன் பெற்றிருந்தான்.
ஆனால் சிவ-பார்வதி மைந்தன் அவதரிப்பது எப்படி? 'ஈசன் கயிலையில் மீளாத நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். பார்வதி தேவியோ ஈசனை நோக்கிய தவத்தில் ஆழ்ந்திருக்கிறாள். சிவனின் தியானத்தை கலைத்து அவரது பார்வை சக்தியின் மேல் விழுந்தால்தான் நமக்கு விமோசனம் கிடைக்கும்... சிவநிஷ்டையை கலைக்க என்ன வழி?'
குழம்பிய தேவர்கள் இறுதியில் மன்மதன் மூலம் தங்கள் எண்ணத்தை சாதிக்க துணிந்தனர். அனைவரும் பிரம்மனிடம் சென்று தங்கள் எண்ணத்தை கூற, பிரம்மனின் ஆலோசனைப்படி காமனாகிய மன்மதன் தன் மலரம்புகளால் சிவனின் நிஷ்டையை கலைக்க கிளம்பினான்.
ஓங்கி உயர்ந்த கைலாயத்தில் ஆதி நாயகன் அமைதியே வடிவாய் வீற்றிருந்ததைக் கண்ட மன்மதன் தனது கரும்பு வில்லில் நாணேற்றி மலரம்பு தொடுத்து உமையொரு பாகனின் மேல் ஏவினான். மறுகணம் சிவனின் நிஷ்டை கலைந்தது. ஆனால் தியானம் கலைந்த கோபம் தலைக்கேற, ஈசனின் நெற்றிக்கண்ணும் திறந்து கொண்டது. எதிரே இருந்த மன்மதன் பிடி சாம்பலாகி போனன்.
செய்தி அறிந்து ஓடோடி வந்த ரதி, ஈசனிடம் 'தேவர்களின் நலன் பொருட்டே மன்மதன் இப்படி செய்தான்' என கதறினாள். மன்மதனை உயிர்பிக்க சிவபெருமானிடம் பலவாறு வேண்டினாள். தேவர்களும் தங்கள் பிழை பொறுத்தருள வேண்டினர். சிவபெருமானும் அவர்களுக்கு இரங்கி மன்மதன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று கூறி அவனை உயிர்ப்பித்தார்.
அதன் பின்னர் தேவர்களின் வேண்டுகோள்படி கந்தனை தோற்றுவித்து சூரபத்மனை அழித்தது தனிக்கதை. இப்படி சிவபெருமான் காமனாகிய மன்மதனை எரித்து மீண்டும் உயிர்பித்த திருநாளே காமன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.