

கைலாயத்தில் நந்தி பெருமானிடம் உபதேசம் பெற்ற சிவயோகி ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமான் மீது மிகுந்த பக்தியும் அளப்பரிய காதலும் கொண்டவராக இருந்தார். அவர் ஒர் நாள் வான் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் காவிரி ஆற்றைக் கடக்கும் பொழுது காவிரி ஆற்றங்கரையில் பசுக்கள் கூட்டமாக நின்று கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தன.
பசுக்களின் அழுகுரலைக் கேட்ட அந்த சிவயோகி அதனை நன்கு கவனித்தபோது பசுக்களை மேய்க்கும் மேய்ப்பாளன் மூலன் என்ற இடையன் இறந்துகிடந்தான்.
பசுக்களின் துயர் துடைக்க 'கூடு விட்டு கூடு பாய்ந்த' சித்தர் திருமூலர்:
அவன் இறந்ததை அறிந்த பசுக்கள் மனம் நொந்து அவனது உடலைச் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தன. இதனால் அந்த பசுக்களின் துயரைக்கண்டு மனம் நொந்த சிவயோகி தன்னுடைய உடலை ஒரு புதருக்கு அடியில் பாதுகாப்பாக வைத்துவிட்டு அந்த மூலன் என்ற இடையனின் உடலுக்குள் தன்னுடைய ஆன்மாவை கூடுவிட்டு கூடு பாயச் செய்து அவனுக்கு உயிர் கொடுத்தார்.
அவன் உறக்கத்திலிருந்து எழுவதுபோல இறப்பிலிருந்து எழுந்தான். பசுக்கள் அனைத்தும் அவன் உயிருடன் வருவதைக் கண்டு மிகுந்த ஆனந்தம் கொண்டது. சிவயோகி மூலன் உடம்பில் இருந்து கொண்டு பசுக்களை அவருடைய வீட்டிற்கு மேய்த்துக்கொண்டு சென்றார். இருப்பினும் மூலனின் மனைவி அவருடைய செயல்பாடுகள் சற்றே விசித்திரமாக இருந்ததை அறிந்தால். சிவயோகி மூலனின் உடம்பில் இருந்து கொண்டு முழுவதுமாக மனைவியை தவிர்த்து விட்டு தியானத்தில் அமர்ந்தார்.
பின் காலையில் எழுந்து அவர் தான் மறைத்து வைத்திருந்த உடம்பை பார்த்த பொழுது அந்த உடம்பு அங்கு இல்லை. அப்பொழுதுதான் சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அவர் சிவயோகியின் உடலை மறையச் செய்தார். சிவயோகி இதனை நன்கு புரிந்துகொண்டு கருணை கடலான சிவபெருமான் உலகிற்கு உன்னதமான சிவ தத்துவங்களை இந்த மூலனின் உடம்பில் வலியாகவே அருள நினைத்துள்ளார் என்று நினைத்துக்கொண்டு பழைய உடம்பு கிடைக்காத காரணத்தினால் சிவயோகி மூலனின் உடம்பிலேயே வாழத்தொடங்கினார்.
அன்று முதல் அவருக்கு திருமூலர் என்று பெயர் வந்தது. இவரே தமிழில் சைவ சமயத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்கினார். பதினொன் சித்தர்களின் முதன்மையானவராகவும் போற்றப்படுபவர் திருமூலர் ஆவார். இவர் திருவாவடுதுறையில் அமர்ந்து மூவாயிரம் பாடல்களை வழங்கினார்.
அந்த தொகுப்பே திருமந்திரம் ஆகும். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” மற்றும் “அன்பே சிவம்” போன்ற ஆழமான சிவ தத்துவங்களை உலகிற்கு உரக்கச் சொன்ன மகத்துவம் நிறைந்த புனிதமானது இந்நூல் ஆகும்.
இந்நூலே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாக போற்றப்படும் புனிதமான நூலாகும். இவர் வழங்கிய “அன்பே சிவம்” எனும் தத்துவத்திற்கு ஏற்ப பசுக்களின் கண்ணீரைத் துடைக்க தன்னுடைய ஆன்மாவை மூலன் என்ற இடையனின் உடம்பில் செலுத்தி தன்னுடைய உடலை இழந்த பின்பும் மூலனின் உடம்பிலேயே பல நல்ல தத்துவங்களை உலகிற்கு வழங்கினார்.
உண்மையான அன்பு மற்றும் பக்தியின் வெளிப்பாடு சமர்ப்பணம் ஆகும் தன்னுடைய உடல் கிடைக்காத போதிலும் மனம் வேதனை அடையாமல் ஆற்ற வேண்டிய காரியத்தை மூலனின் உடம்பிலேயே ஆற்றிய திருமூலர் மாமனிதர் ஆவார்.
இந்தத் தொகுப்பின் வாயிலாக, தமிழ் சைவ சித்தாந்தத்தின் அடித்தளமான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" மற்றும் "அன்பே சிவம்" ஆகிய தத்துவங்கள் தோன்றியதன் உண்மையான பின்னணியை உணர்ந்து, வாழ்வின் உன்னதமான ஆன்மீகத் தெளிவையும், சக உயிர்கள் மீதான பேரன்பின் ரகசியத்தையும் நீங்கள் முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.