மனுக்களில் ஐந்தாவது மனு ரைவத மனு ஆவார். இருதவாக்கு என்னும் ஒரு அரசன் தனக்கு நெடுநாள் புத்திரன் இல்லாமை குறித்து வருந்தி கொண்டு இருந்தான். அப்போது அவனுக்கு ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து இளைஞனான பிறகு சில கூடாத செயல்களை செய்து அதன் பழி பாவங்களை தன் தாய் தந்தையருக்கு சேர்ப்பித்தான். இதனால் அவனது தந்தை மனவருத்தமடைந்து கர்க்க முனிவரிடம் தன் மகனின் குறைகளைக் கூறினார்.
அதைக் கேட்ட கர்க்க முனிவர் அரசனை நோக்கி இது உன் மகன் குற்றம் அல்ல. ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்த குற்றம் இது என்றார். அதனால் அரசன் அந்த நட்சத்திரத்தின் மீது கோபம் கொண்டு "அது பூமியில் விழுக" என சபித்தான். அவ்வாறே அந்த நட்சத்திரம் பூமியில் ஒரு மலை மேல் விழுந்தது. அம்மலை ரைவதம் எனப்பட்டது.
அந்த நட்சத்திரம் அம்மலையில் ஒரு குளமாக மாற அதிலிருந்து ஒரு கன்னிகை பிறந்தாள். அக்கன்னியை பிரமுச்சர் என்னும் முனிவர் கண்டெடுத்து அவளுக்கு ரேவதி என பெயரிட்டு வளர்த்து வந்தார். அவள் இளமைப் பருவம் அடைந்த போது தக்க நாயகன் வேண்டி அக்னியைப் பிரார்த்தித்தார். அக்னி அம்முனிவரை நோக்கி, "உன் குமரிக்குத் துத்தமன் என்னும் அரசன் நாயகனாவான் என்று கூறினார்.
அவ்வாறே சிறிது நாளில் அவளை அவ்வரசனுக்கு மணம் செய்விக்க நாள் பார்த்தபோது, ரேவதி தன் தந்தையிடம் சென்று "எனக்கு ரேவதி நட்சத்திரத்தில் மணம் செய்விக்க வேண்டுமே அன்றி வேறு நட்சத்திரத்தில் மணம் செய்து கொள்ள உடன்பட மாட்டேன்," என்று உறுதியாக கூறிவிட்டாள். பிறகு தந்தை குமரியை நோக்கி, "'அது இருதவரின் சாபத்தால் பூமியில் விழுந்தது. வானத்தில் இல்லாத ஒரு நட்சத்திரத்தில் எப்படி திருமணம் செய்து வைப்பது?" என்றார். அதற்கு ரேவதி தன் தந்தையிடம் "அப்படியாயின் அதை ஆகாயத்தில் மீண்டும் ஏற்றி மணம் செய்து வையுங்கள்," என கேட்டாள்.
அப்படியே முனிவர் அந்த நட்சத்திரத்தை மீண்டும் வானத்தில் ஏற்றி அந்த நட்சத்திரத்திற்கு மீண்டும் ஒரு அந்தஸ்து அளித்து அந்த நட்சத்திரம் வரும் நன்னாளில் தன் குமரிக்கு திருமணம் செய்து வைத்தார். பிறகு அரசன் துர்த்தமன் முனிவனை நோக்கி "நான் சுவாயம்பு மனு வம்சத்தில் பிறந்தவன். எனக்கு மன்வந்தர அதிபனாய் ஒரு குமரன் வேண்டும்" என வேண்டிட, முனிவர் அப்படியே அருள் செய்தார்.
சில நாள் கழிந்த பிறகு இந்த துர்த்தமனுக்கும் ரேவதிக்கும் ரைவதமனு பிறந்தான். மனுக்களில் இவன் ஐந்தாவது மனு ஆவான். பலராம கிருஷ்ணாவதாரம் இந்த ரைவதமனு என்பவர் மனுவின் ஆட்சி காலம் என்று சொல்லக்கூடிய மன்வந்தரத்தில் இருக்கலாம் என கருதப்படுகிறது.
ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்று ஒரு கருத்து நிலவுவதும் இதனால்தான். இதை இக்கதையின் மூலம் அறியமுடிந்தது.
சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.