
"துன்பங்கள் அறுபட இறைவனின் காலடியில், எந்நேரமும் இறைவனின் நினைவிலேயே வாழுங்கள்" என்கின்றன எல்லா மதமும். துன்பங்கள் அறுபட்டால் இன்பங்கள் இதயத்தை நனைக்கின்றனவா? துன்பங்கள் அறுபடுவது இன்பத்தை அடைவதற்கா? நிம்மதியைப் பெறுவதற்கா?
இன்பத்தை விட நிம்மதி என்பது மேலானது. நாம் எல்லோரும் விரும்புவது நிம்மதியைத்தான். அந்த நிம்மதி பொருளாலோ, உறவாலோ, சுகபோக வாழ்வாலோ, புகழாலோ, பெரும் பதவியாலோ வருவதில்லை. நம் செயலால், பெறும் நிம்மதி, நம் மூளையை நிரப்பும்போது, மனம் மகிழ்வு கொள்கிறது. மனம் மகிழ்வு மூலம் இன்பம் இதயத்தை நிரப்புகின்றது. மொத்தத்தில் நம் செயல்கள் எல்லாம் இன்பத்தை விடவும் நிம்மதியை நாடித்தான் ஓடுகின்றன. பல கோடி செல்வங்கள் வசதி வாய்ப்புகள் இருந்தும் சிலர் நிம்மதியின்றித் தவிக்கின்றார்கள்.
ஒரு எழுத்தாளர் சொன்னார் "இன்று நான் பெரும் மகிழ்வும் நிம்மதியும் கொண்டுள்ளேன்" என்று. ஒருவேளை பெறும் பண வரவு வந்திருக்குமோ என்று அவரைப் பார்த்தபோது, நம் பார்வையை உணர்ந்த அவர், "இன்று ஒரு சிறந்த மன நிறைவான படைப்பைத் தயாரித்தேன்" என்றார்.
அன்று ஒரு ஆட்சியாளர் "இன்று நான் எல்லாப் பணிகளையும், அரசு நிர்ணயித்தபடி முடித்து அதற்கும் மேல் ஒரு படி முன்னேற்றம் காண்பித்தேன், என் பணியில் முழு திருப்தி அடைந்தேன், நிம்மதி கொண்டேன்" என்று கீழ்நிலைப் பணியாளர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆக ஒரே நினைவில், ஒரே செயலில், ஒருவர் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயலாற்றினால் துன்பங்கள் அறுபடும், இன்பங்கள் பெருகிடும், நிம்மதி நிலைபெறும் என்பது திண்ணம்.
வழக்கமாக வழிபாடு செய்ய வரும் அந்த நபர், அன்று என் உடன் வந்தும் அந்த கோவிலுக்குள் நுழையவில்லை. ஒரு வேளை, அவரது குடும்பத்தில் கோவிலுக்குள் நுழையக்கூடாது எனும் விதிமுறைகளின் கீழ் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். இறைவனை வழிபட்டு வந்தபின் அவரிடம் கேட்டேன் "ஏன் கோவிலுக்குள் வரவில்லை?" அதற்கு அவர் சொன்னார், "நான் மதம் மாறிவிட்டேன்".
காரணம் கேட்டபோது, "என் மனைவிக்கு ஒரு துன்பம் நேரிட்டு, மருத்துவர்களிடம் முறையிட்டும், கடவுள்களிடம் முறையிட்டும் என் மனைவியின் உடல் நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆனால் அந்த மதத்தவரின் போதனைகளை முழுமையாக நம்பி வழிபட்டேன், மனைவி குணமடைந்தார், நாங்கள் எல்லோரும் மதம் மாறிவிட்டோம்" என்றார். "துன்பங்கள் அறுபட்டனவா?" என்று கேட்டேன். "துன்பங்கள் அறுபட்டன, ஆனால், நிம்மதியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்," என்றார்.
ஆக துன்பங்கள் என்பது அவ்வப்போது அறுபடுகின்றன, அவ்வப்போது எழுகின்றன. எல்லா பொழுதுகளுமே ஒரே மாதிரியாய் விடிவதில்லை, எனவே எல்லா நாட்களுமே ஒரே மாதிரியாய் அமைவதில்லை. ஒரே மாதிரியான வேலையை ஒருவர் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் விரைவில் களைப்படைகிறார். மாறுபட்ட சிந்தனைகள், மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உண்ணும் பழக்கங்கள் என ஒவ்வொன்றிலும் அவ்வப்போது மாற்றிக் கொண்டு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டோமேயானால் மகிழ்ச்சி கை கூட வழி பிறக்கின்றன.
துன்பங்களே இல்லாமல் ஒருவர் வாழ்கிறார் என்றால் அவரால் இன்பத்தை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. இன்பங்களும், துன்பங்களும் மாறி மாறி வரும் காலநிலை மாற்றம் போன்றது. துன்பங்கள் வரும்போது வாழ்வில் நடந்த இன்பங்களில் மனதினைச் செலுத்தினால் நிச்சயம் துன்பங்கள் அறுபடும். துன்பங்கள் என்பது மலர் மேல் முகிழ்ந்த பனித்துளி போலானது. கதிரவனின் ஒளியிலும், காற்றிலும் அவை காணாமல் போதல் போல் துன்பங்கள் நிலையல்ல...