

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வய்ந்ததாகும். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். இக்கோவிலில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும் சுகவனேஸ்வரரும், தாயார் சொர்ணாம்பிகாவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
சுகவனேஸ்வரர் கோவிலின் தலபுராணம் பற்றி தெரியுமா? ஒருமுறை பிரம்ம தேவன் படைப்பின் ரகசியத்தை பற்றி சொல்லிக் கொண்டிருப்பதை கேட்ட சுகமமுனிவர் அதை சரஸ்வதியிடம் சொல்லிவிட்டார். இதனால் கோபம் கொண்ட பிரம்ம தேவன், சொன்னதையே சொல்லும் கிளியின் இயல்பு உடையதால், சுக முனிவரைக் கிளியாக மாறும்படி சாபம் விட்டார். பிறகு சாபம் நீங்க பாபநாசத்தில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிப்பட சொன்னார். அந்த சாபத்துடன் கிளியாக மாறிய முனிவர் இன்றைய சேலத்தில் சுகவனத்திற்கு வந்து சிவலிங்கத்தை தவமிருந்து வணங்கினார்.
சுக முனிவர் எண்ணற்ற கிளிகளுடன், ஒரு ராஜக் கிளியாக இருந்து இத்தலத்தில் சிவனை வழிபட்டு வந்தார். அந்த நேரத்தில் அங்கே வந்த வேடன் கிளிகளை விரட்டிக் கொண்டிருந்தார். கிளி வடிவில் இருந்த சுகமுனிவர், தன்னை காப்பாறிக்கொள்ள சிவலிங்கத்தின் மீது இறங்கி ஒளிந்துக் கொண்டார்.
அந்த வேடன் அதை கிளி என்று நினைத்து வாளால் வெட்டியதும் சிவலிங்கம் சாய்ந்தது. அந்த தாக்கத்தால் லிங்கத்தில் ஒரு வெட்டும் விழுந்தது. பிறகு சிவபெருமான் தோன்றி சுகமுனிவருக்கு பழைய உருவையும், மகிமையையும் அளித்தார். அந்த நிகழ்வுக்கு பிறகு அவ்விடம் சுகவனம் என்று அழைக்கப்பட்டு, அங்குள்ள இறைவர் சுகவனேஸ்வரர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இன்றைக்கும் சேலத்தில் உள்ள சிவலிங்கம் சாய்ந்த நிலையில் வேடன் வாளால் ஏற்பட்ட வெட்டு தழும்புடன் காணப்படுகிறது.
பல்லி நம் மீது விழுவதால் ஏற்படும் கெட்ட சகுணம் நீங்க இக்கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்து அதை போக்கிக் கொள்ளலாம். இங்குள்ள நவக்கிரக சன்னதியில் ராகுவும், செவ்வாயும் இடம் மாறி அமைந்துள்ளனர். மேலும் திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தைபேரு போற்றவற்றிற்காக இக்கோவிலில் வேண்டுதல் வைத்தால் நிறைவேறுவதாக சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் வைகாசி, திருகார்த்திகை போன்ற பண்டிகைகள் வெகுவிமர்சியாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள விகட சக்கர விநாயகரை வேண்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை போக்கி குணமாக்குவார் என்பது நம்பிக்கை. மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடைப்பெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசித்து அவன் அருளைப் பெருங்கள்.