ஸ்ரீ கிருஷ்ணர் - ராதை ஊஞ்சல் உத்ஸவ மகோத்ஸவத்தில் நாரதர் செய்த கலகம்!

Sri Krishnar Radha Unjal Thiruvizha
Sri Krishnar Radha Unjal Thiruvizha
Published on

ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை அனுபவித்து ரசிப்பதற்காக,  நாரதர் முனிவர் அடிக்கடி வ்ரஜ பூமிக்கு வருகை புரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நாரதர் பிருந்தாவனத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசிக்கும்பொழுதெல்லாம் ராதையையும் தரிசிக்கத் தவறியதில்லை. ராதையின் மேல் அவருக்கு எப்பொழுதுமே ஒரு அபிமானம் உண்டு. கிருஷ்ணன் ராதையிடம், "ராதை, நாரதரை நம்பாதே. அவர் மிகப்பெரிய கலகக்காரர். அவர் உனக்கும் எனக்கும் இடையே பெரிய சண்டையை மூட்டிவிடுவார்" என்று கூறி இருந்தார்.

"உங்களுக்கு எப்பொழுதுமே நாரதரின் மீது ஒரு சந்தேகம் உண்டு. அவர் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் அப்படி சண்டை மூட்டிவிட்டாலும் உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள பிணைப்பு குறைந்து விடுமா என்ன? கவலைப்படாதீர்கள்" என்றாள் ராதை.

"எனக்கு என்ன வந்தது? பட்டால்தான் உனக்கு புத்தி வரும் என்றால் நான் என்ன செய்ய முடியும்?" என்று கிருஷ்ணன் தன் வழியே சென்று விட்டார். அப்படி ஒரு முறை, பிருந்தாவனத்துக்கு நாரதர் வருகை தந்தபொழுது, அவரை வீணை வாசிக்கும்படி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். நாரதரும் அவர் சொற்படி வீணையை மீட்டினார். நாரதரின் கானம் அனைவரையுமே கட்டிப்போட்டது. நாரதரின் வீணை கானத்தில் லயித்த கிருஷ்ணன், "உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்" என்றார்.

இதையும் படியுங்கள்:
பர்சில் பணத்தை ஈர்க்கும் ஏலக்காய் மந்திரம்: வீண் பண விரயம் இனி இல்லை!
Sri Krishnar Radha Unjal Thiruvizha

"எனக்கு வேண்டிய வரத்தை இப்பொழுது நான் கேட்டு வாங்கிக்கொள்ளப் போவதில்லை. தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன்" என்று நாரதர் பதிலளித்தார்.

ஒரு நாள், பிருந்தாவனத்தில், லலிதா குண்டத்துக்கு அருகில் அந்த இடமே கோலாகலமாகக் காட்சியளித்தது. காரணம், ஸ்ரீ கிருஷ்ணனையும் ராதையையும் ஊஞ்சலில் அமர வைத்து ஊஞ்சல் விழா எடுப்பதாக சகிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்காக ஒரு அழகான ஊஞ்சல் பிரமாதமாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கிருஷ்ணனும், ராதையின் ஏனைய சகிகளும் அங்கு குழுமி இருந்து நடக்கப்போகும் ஊஞ்சல் விழாவைப் பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார்கள். ‘அஷ்ட சகிகள்’ என்று கூறப்படும் ராதையின் முக்கியமான தோழிகளில் மூத்தவள் லலிதா என்பவள். அவள் மற்ற சகிகளிடம், "என்ன இன்னும் ராதையைக் காணவில்லை.  இன்னுமா அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்?" என்று தமாஷாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

லலிதா குண்டத்துக்கு அருகில் ஊஞ்சல் விழா நடப்பது, நாரதர் செவிகளுக்கு எட்டியது. அந்த விழாவைக் காணும் ஆவலில், நாரதர் லலிதா குண்டத்துக்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி விட்டு, சுற்றும் முற்றும் பார்த்தார்.  கிருஷ்ணனும், சகிகளும் இருப்பதையும்,  ராதை அதுவரை வருகை தராமல் இருப்பதையும் புரிந்து கொண்டார். அப்பொழுது நாரதர், ஸ்ரீ கிருஷ்ணனிடம், "பிரபோ, எனக்கு ஒரு வரம் தருவதாகக் கூறினீர்களே. அதை இப்பொழுது தாருங்கள்" என்றார்.

இதையும் படியுங்கள்:
ஐப்பசி பௌர்ணமியில் முருகனுக்கு இந்த இரு பொருளைப் படைத்தால் கோடீஸ்வரர் ஆவது உறுதி!
Sri Krishnar Radha Unjal Thiruvizha

"என்ன வரம் வேண்டும்?" என்றார் கிருஷ்ணன்.

"இந்த ஊஞ்சலில் நீங்களும் லலிதாவும் அமர்ந்து ஆட வேண்டும். அதை நான் கண் குளிரக் காண வேண்டும். இதுதான் அந்த வரம். கொடுக்க முடியுமா பிரபு?" என்றார் நாரதர்.

"இதுதானா? செய்துவிட்டால் போகிறது. ஊஞ்சலோ தயாராக உள்ளது. லலிதா, வா. ராதை வரும் வரை நாமிருவரும் ஊஞ்சலில் ஆடலாம். நாரத முனிவர் நாமிருவரும் ஆடுவதைக் காண ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறார். சீக்கிரம் வா" என்றார். கிருஷ்ணன் கூப்பிட்டதில் லலிதாவுக்கு சிறிதும் சம்மதம் இல்லை. கிருஷ்ணன் கூப்பிடக் கூப்பிட நகர்ந்து நகர்ந்து நின்றாள். கிருஷ்ணன் லலிதாவின் கையைப்  பிடித்து இழுத்து வந்து ஊஞ்சலில் தன் அருகில் அமர்த்திக்கொண்டு வேகமாக ஊஞ்சலில் ஆடலானார்.

நாரத முனிவரும், சகிகளும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தார்கள். பகவான் வரம் என்று ஒன்றைக் கொடுத்தபின், அதன்படி செயலாற்றுவதுதானே நியதி. மகோத்ஸவத்தைக் கண்டு திருப்தியடைந்த நாரதர் திடீரென்று அங்கிருந்து மறைந்துபோனார். நேராக ராதையின் இருப்பிடம் வந்து சேர்ந்தார் நாரதர். "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றார்.

இதையும் படியுங்கள்:
சந்திராஷ்டம தின அச்சத்தைப் போக்கும் ரகசிய வழிமுறை!
Sri Krishnar Radha Unjal Thiruvizha

"நான் கிருஷ்ணருடன் ஆடப்போகும் ஊஞ்சல் திருவிழாவுக்காக அலங்காரம் செய்து கொண்டிருக்கிறேன்" என்றாள் ராதை.

"என்னது ஊஞ்சல் திருவிழாவா? கிருஷ்ணனுடனா? அவர்தான் லலிதாவுடன் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறாரே. தெரியாதா உங்களுக்கு?" என்றார்.

"அப்படியா? அவர் அப்படிச் செய்பவர் கிடையாதே. லலிதாவும் அம்மாதிரி பெண் அல்லவே" என்றாள் ராதை.

"நான் என்ன பொய்யா சொல்லிவிடப் போகிறேன்? சந்தேகமாக இருந்தால் நேராகச் சென்று பாருங்கள்" என்றார் நாரதர்.

அடுத்த வினாடியே, ராதை மிகுந்த கோபத்துடன் லலிதா குண்டம் நோக்கிச் சென்றாள். தொலைவிலிருந்தே அவளுக்கு லலிதாவும் கிருஷ்ணனும் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. கோபத்துடன் அருகாமையில் இருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்து கண்ணீர் வடிக்கலானாள்.

ஊஞ்சல் விழாவுக்காகக் காத்துக்கொண்டிருந்த கிருஷ்ணனும் சகிகளும் வெகு நேரமாகியும் ராதை வரவில்லை என்பதால், ‘என்ன ஆயிற்று தெரியவில்லையே’ என்று கவலைப்படத் தொடங்கினார்கள். ஆனால், கிருஷ்ணனுக்குப் புரிந்து விட்டது. ராதை வரவில்லை. அங்கிருந்த நாரதரையும் காணவில்லை என்றவுடன் தான் அளித்த வரம் வேலை செய்யத் தொடங்கிவிட்டதை உணர்ந்தார்.

இதையும் படியுங்கள்:
ஐப்பசி அன்னாபிஷேகம்: ஒரு நாள் சிவ தரிசனம் உங்கள் பல ஜன்ம பாவம் போக்கி சொர்க்க பதவி தரும்!
Sri Krishnar Radha Unjal Thiruvizha

கிருஷ்ணன் அவ்விடம் விட்டு அகன்று, ராதையைத் தேடிக் கொண்டு சென்றபொழுது, அவள் ஒரு பாறையின் மீது அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டார். காரணத்தைக் கேட்டபொழுது, லலிதாவுடன் கிருஷ்ணன் ஊஞ்சல் ஆடிய விஷயத்தை நாரதர் கூறியதாகக் கூறினாள். எவ்வளவு சமாதானம் செய்தும் ராதை கிருஷ்ணனுடன் ஊஞ்சலாட வரவில்லை. அப்பொழுதுதான் நாரதரைப் பற்றி தான் கூறியவற்றை கிருஷ்ணன் நினைவு கூர்ந்தார். நாரதர் தம்மிடம் சூட்சுமமாக வரம் பெற்றுச் சென்றதையும், வரத்தினை நிறைவேற்றும் பொருட்டே, லலிதாவுடன் ஊஞ்சலில் ஆடியதையும் கிருஷ்ணன் ராதைக்குத் தெரிவித்தார். அதுமட்டுமல்ல, தன்னுடன் லலிதா ஊஞ்சல் ஆட வர மறுத்ததையும் தெளிவு செய்தார்.

நடந்த விஷயங்களை அறிந்த ராதை சமாதானம் ஆனவளாய், லலிதா குண்டத்தின் அருகில் ஊஞ்சல் திருவிழாவில் உல்லாசமாய் ஆட, ஸ்ரீ கிருஷ்ணனுடன் கைகோர்த்துச் சென்றாள். இதுவும் கண்ணனின் எண்ணப்படி, நாரதரால் அரங்கேறிய ஒரு விளையாட்டு என்பதைக் கூறவும் வேண்டுமோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com