சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் மாளிகைபுரம் கோயில் அருகே சபரிமலை போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் மட்டுமே இது செயல்படுகிறது. சுவாமி ஐயப்பனுக்கு பெரும்பாலான பக்தர்கள் கடிதம் அனுப்புகிறார்கள். பக்தர்கள் அனுப்பும் கடிதங்கள் பெரும்பாலும் வேண்டுதல் தொடர்பாக இருக்கும். சிலர் தங்கள் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி எழுதுவர். இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழை அனுப்புவர். சிலர் தங்களின் கஷ்டங்களை எழுதி அனுப்புவார்கள். சில பேர் தன்னுடைய காணிக்கையை மணியார்டர் மூலமாக அனுப்புவார்கள்.
இப்படித் தாங்கள் அனுப்பும் கடிதத்தை சுவாமி ஐயப்பனே பிரித்துப் படித்து தங்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. இவற்றை ஐயப்பன் முன்வைத்துவிட்டு பிறகு நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவார். 1963ம் ஆண்டு முதல் சபரிமலையில் இந்த போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து ஐயப்பன் படம் மற்றும் பதினெட்டு படிகளுடன் கூடிய முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முத்திரை பதித்த கடிதம் தங்கள் வீடுகளுக்கு வருவதை பக்தர்கள் புண்ணியமாகக் கருதுகின்றனர்.
சபரிமலைக்கு 68 97 13 என்ற பின்கோடும் உண்டு. நம் நாட்டில் சபரிமலை ஐயப்பனுக்கும் ஜனாதிபதிக்கும் மட்டுமே தனி பின்கோடு உள்ளது. 1974ம் ஆண்டு சபரிமலை அஞ்சல் முத்திரை அமலுக்கு வந்தது. நாட்டில் வேறு எந்த தபால் நிலையத்திலும் இதுபோன்ற தனி அஞ்சல் முத்திரை பயன்படுத்தப்படுவதில்லை. இந்திய அஞ்சல் துறையும் அதற்கு அனுமதிப்பதில்லை. மண்டல மகர விளக்கு பூஜை முடிந்ததும் இந்த சிறப்பு அஞ்சல் முத்திரை பந்தனம் திட்டா அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பாதுகாக்கப்படும்.
மண்டல மகர விளக்கு பூஜை நடைபெறும் காலத்தில் மட்டுமே இந்த தபால் எண் செயல்பாட்டில் இருக்கும். அறுபத்திரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அஞ்சல் குறியீடு எண் செயலிழப்பு செய்யப்படும். மீண்டும் அடுத்த ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை சமயத்திலேயே பயன்படுத்தப்படும். ஐயப்பனுக்கான தபால் குறியீட்டு எண்ணிற்கு வரும் கடிதங்களை படிக்க ஓராண்டு கூட போதாது என்னும் அளவிற்கு அவ்வளவு கடிதங்கள் தினமும் வருவதாக தபால் நிலைய அலுவலர்கள் கூறுகின்றனர்.
இன்று வரை இந்தத் தபால் நிலையத்திற்கு வரும் கடிதங்கள் தலைச்சுமையாக மட்டுமே கொண்டுவரப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து இதைப் பெற்றுச் செல்கிறார்கள். இந்தத் தபால் அலுவலகத்தில் ஒரு போஸ்ட் மாஸ்டர் மற்றும் இரண்டு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.