தற்காலத்தில் இரண்டு வயது தொடங்கி, கல்லூரி மாணவர்கள் வரை மொபைல் போனிலேயே விளையாடுகிறார்கள். ஆனால், நாற்பது வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சிறுவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில், விளையாட்டே அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது. விளையாட்டுகளின் மூலம் அவர்கள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம். அக்காலச் சிறுவர்கள் விளையாடிய சில விநோதமான விளையாட்டுக்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.
சிறுவர்கள் ‘க்ரீச்’ விளையாட்டை தினந்தோறும் விளையாடுவார்கள். ஒரு சிறுவன் பச்சைக்கலர் சட்டை போட்டிருக்கிறான். மற்றொரு சிறுவனும் அன்று பச்சைக்கலர் சட்டை போட்டிருந்தால் அவன் கையைப் பிடித்துத் திருகி ‘க்ரீச்’ என்று சொல்லுவார்கள். இந்த ஒற்றுமை விஷயத்தை யார் முதலில் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் மற்றொருவரின் கையைப் பிடித்துத் திருகி ‘க்ரீச்’ என்று சொல்லுவார்கள். ஒரு நாளில் நான்கைந்து முறை இந்த விளையாட்டு நடைபெறும். யாரை ‘க்ரீச்’ செய்யலாம் என்று சிறுவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். சமயம் வந்ததும் உடனே ‘க்ரீச்’ என்று சொல்லுவார்கள். ஒருவன் ‘க்ரீச்’ சொன்னதும், மற்றொருவன் ‘க்ரீச்’ சொன்னவனிடம் திரும்ப ‘க்ரீச்’ சொல்லக் கூடாது.
சூடுகொட்டை என்று ஒரு சிறிய கொட்டை உண்டு. அதை பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். இதை தரையில் சிறிது நேரம் தேய்த்து நம் உடலின் மீது வைத்து அழுத்தினால் நெருப்பு போன்று சுடும். அப்போதெல்லாம் தரையில் உட்கார்ந்துதான் பாடம் படிப்பார்கள். பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருக்கும்போது மெல்ல டிரவுசர் பாக்கெட்டிலிருந்து சூடு கொட்டையை எடுத்து தரையில் தேய்த்து பக்கத்தில் உட்கார்ந்திருப்பவனின் தொடையில் வைப்பார்கள். அவன் உடனே சூடு தாங்காமல் ‘ஆ’ என்று கத்துவான். அக்காலத்தில் சிறுவர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டு இது.
சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்த மற்றொரு விளையாட்டு கண்ணாமூச்சி. நான்கைந்து சிறுவர், சிறுமியர் இவ்விளையாட்டில் கலந்து கொள்ளுவார்கள். ஒளிந்து கொள்ளுபவர்களைக் கண்டுபிடிப்பவராக விளையாடுபவர் யார் என்பதை தேர்வு செய்ய, ‘சா பூ த்ரி’ போடுவார்கள். இதில் கடைசியாகத் தேர்வாகும் ஒருவர் சுவற்றின் மூலையில் இரண்டு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டு நிற்க மற்றவர்கள் ஓடிச்சென்று வீட்டிற்குள் மறைந்து கொண்டு ‘ஜூட்’ என்பார்கள். ஒளிந்து கொண்டிருப்பவர்களில் யாரையாவது ஒருவரைத் தேடிச்சென்று கண்டுபிடித்து அவரைத் தொட்டு ‘அவுட்’ என்று சொல்ல, ‘அவுட்’ ஆனவர் கண்டுபிடிப்பவராக விளையாடத் தொடங்குவார். இப்படியாக கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்.
கடைகளில் வட்ட வடிவ லென்ஸ் ஒரு சிறிய கைப்பிடியோடு விற்பனை செய்யப்படும். இந்த லென்ஸை வாங்கி ஒரு தீக்குச்சியை சூரிய ஒளி படும் தரையில் வைத்து லென்ஸை சூரிய ஒளிக்கு நேராகக் காண்பித்து அதன் ஒளியை தீக்குச்சியின் மருந்துப் பகுதியில் படும்படி அட்ஜஸ்ட் செய்து காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். சற்று நேரத்தில் தீக்குச்சி பற்றி எரியும். காகிகத்தைத் தரையில் போட்டு அதன் மீது லென்ஸ் வழியாக சூரிய ஒளியைக் குவிக்க சிறிது நேரத்தில் காகிதம் பற்றி எரியும். அக்காலச் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று.
இன்னுமொரு சுவாரசியமான விளையாட்டு குளிர்பான பாட்டிலின் மூடியை பெட்டிக்கடைகளிலிருந்து கேட்டு வாங்கி வந்து அதை தரையில் வைத்து சுத்தியால் அடித்து தட்டையாக்குவார்கள். அதன் நடுவில் ஆணியால் இரண்டு ஓட்டைகளைப் போட்டு அந்த ஓட்டைகளில் ஒரு ட்வைன் நூலை நுழைத்து நூலின் இரண்டு முனைகளையும் முடி போடுவார்கள். தட்டையின் இந்தப்பக்கம் ஒரு அடி அந்தப்பக்கம் ஒரு அடிக்கு நீள் வட்டமாக நூல் இருக்கும். பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு நடுவிரல்களிலும் நூலின் முனையை நுழைத்து வேகமாக சுழற்றத் தொடங்கி சுமார் இருபது முறை சுற்றியதும் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் இழுத்தால் அந்த வட்ட வடிவத் தட்டானது வேகமாக சுழலத் தொடங்கும். நூலினை இப்படியும் அப்படியுமாக இழுத்துக் கொண்டே இருந்தால் தட்டு சுற்றிக்கொண்டே இருக்கும். இதுவும் ஒரு பிரபலமான விளையாட்டு.
அக்காலச் சிறுவர்கள் ஒன்றாகக் கூடி கள்ளம் கபடம் இன்றி விளையாடி மகிழ்ந்தார்கள். கூடி விளையாடியதால் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது. பாசப்பிணைப்பும் பந்தமும் உருவானது.