

ஆட்சி அதிகாரத்தை குறிப்பதை கொடியேற்றம் என்கிறோம். பழங்காலத்தில் ஒரு அரசன் பக்கத்து நாட்டின் மீது போர் தொடுத்து அந்த நாட்டை கைப்பற்றினால் முதலில் அவன் செய்யும் முக்கியமான செயல் அங்கு தனது ஆட்சி அதிகாரம் வந்து விட்டதை குறிக்கும் வகையில் அனைவருக்கும் உணர்த்த தனது கொடியை பறக்கவிடுவான். அதேபோல ஒரு ஊரில் திருவிழா வந்துவிட்டால் அந்த ஊர் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் ஆண்டவன் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் விழா (Temple festival) நடத்தப்படுகிறது.
கொடி ஏற்றும் முறை:
கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை வரவேற்று, அழைத்து,உள்ளே வரவழைத்தல் என்ற ஆவாகனம் போன்ற சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக மாறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரத்தில் கொடியேற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.
கொடி மரம் என்பது இறைவனையும்,, கொடிக் கயிறு சக்தியையும், கொடித் துணி ஆத்மாவையும், கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு பாசத்தையும் குறிக்கிறது.குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க தர்ப்பை கயிறுடன் வெள்ளை துணியை வளைத்து வளைத்து கொடி ஏற்றுவார்கள் .உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை இந்த செயல் வெளிக்காட்டுகிறது.
ஒரு ஊரில் உள்ள மக்கள் நன்மையடையவும், மழை பெறுவதற்காகவும், தீய சக்தியிலிருந்து விடுபடவும் , அந்த ஊரின் எல்லைக்கு உட்பட்டு அமைந்துள்ள கோவில்களை முறையாக பராமரித்து நாள்தோறும் தவறாமல் பூஜைகள் நடைபெறும் வண்ணம் உதவி புரிவதோடு திருவிழா என்ற ஒன்று உருவாக்கப்பட்டது.
இதனால் ஒவ்வொரு ஊரில் வசிக்கும் மக்களும் தங்கள் ஊர், தங்கள் கோவில் என்ற சொந்த உணர்வுடன் முழுமையாக ஆன்மீக ஈடுபாட்டுடன் கோவில்களை பராமரிக்க வேண்டும் . அதன் காரணமாகவே திருவிழா துவங்கும் நாளன்று கொடி மரத்தில் கொடியேற்றப் படுகிறது .அவ்வூரில் உள்ள பெரியவர்கள் அந்த ஊர் மக்களின் சார்பாக கையில் காப்பு என்னும் கயிற்றைக் கட்டி அனைத்து மக்களும் அந்த திருவிழாவிற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக விரதம் இருந்து அந்த திருவிழாவை நிவர்த்தி செய்கிறார்கள்.
கோவில்களில் திருவிழா நடைபெறப்போகிறது என்பதை கொடியேற்றத்தின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இதுவே முதல் அடித்தளமாகவும் இருக்கிறது.
கொடி சின்னங்கள்
எந்தக் கோவிலில் கொடி ஏற்றுகிறோமோ அந்த கோவிலின் மூலவருக்கு ஏற்ற வாகனமாகவே பொதுவாக கொடி அமைந்திருக்கும். இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக கொடிமர உச்சியில் அமைக்கப்படுகிறது. சிவன் கோவில்களில் நந்தியும், பெருமாள் கோவிலில் கருடனும், அம்மன் கோவிலில் சிங்கமும், விநாயகர் கோவிலில் எலியும், முருகன் கோவிலில் மயிலும், ஐயப்பன் கோவிலில் குதிரை உருவமும் கொடி மர உச்சியில் அடையாள சின்னங்களாக அமைக்கப்படுகின்றன.
கொடியேற்றத்தின் நன்மைகள்
கொடியேற்றம் என்றாலே பொதுவாக திருவிழாதான். கோவில் கும்பாபிஷேகம் என்றாலும் கொடியேற்றம் இருக்கும். ஆகவே எந்த ஒரு சுப காரியங்கள் நடக்கும் போதும் அங்கே கொடி ஏற்றம் நடைபெறுகிறது .மக்கள் மன அமைதியுடனும் ,மன மகிழ்ச்சியுடனும் சுற்றும் சூழ வந்து கொடியேற்றத்தின் போது மிக்க மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். மேலும் வீடு சுத்தமாக இருக்கும் என்பதால் அது உடல் நலத்திற்கும் மிகுந்த நன்மையை அளிக்கும்.
காய்கறி உணவுகளை சாப்பிட்டு அசைவத்தை தவிர்ப்பதால் உடலும் மனதும் சாத்வீக நிலைக்கு சென்று சத்துக்களை பெற்று ஆரோக்கியமாக இருக்கும். அதன் பிறகு திருவிழா நடப்பதால் மக்கள் முழுமையான இறை வழிபாட்டில் தங்களை அர்ப்பணித்து வேலைகள் செய்வதால் கடவுள் அருளால் அனைத்தையும் பெற்று வளமுடன் நலமுடனும் வாழ்வார்கள்.