பொதுவாக, நாம் காணும் கனவுகள் நமக்கு தெளிவாக ஞாபகம் இருப்பதில்லை. கனவுகள் நாம் தூங்கி எழுந்ததுமே மறந்துவிடும். இருப்பினும், சில குறிப்பிட்ட மங்கலகரமான கனவுகள் நம் நினைவில் தங்கிவிடும். அதிலும் கோயில் சம்பந்தமான கனவுகள் வரும்போது அதற்கான பலன்கள் என்னவென்று தெரிந்துக்கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கனவில் கோயிலைக் கண்டால், அன்று இரவு என்ன காரியம் நடக்க வேண்டும் என்று நினைத்துப் படுத்தீர்களோ? அது அப்படியே நடக்கும் என்று சொல்லப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம் நடப்பது போல கனவு கண்டால், ஆன்மிக சம்பந்தமான விஷயங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
கோயிலில் ஒருவருக்குக் காசு கொடுப்பது போல கனவு வந்தால், இதுவரை இருந்த துன்பங்கள் விலகி, பொருள் சேர்க்கை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. கோயில் திருவிழாவை சுற்றிப்பார்ப்பது போல கனவு கண்டால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். இதனால் கடனும் வாங்க நேரிடும். இருப்பினும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கோயில் திருவிழாவில் யாரையோ தேடுவது போல கனவு கண்டால், குடும்பத்தில் விரிசல், தொழில் பிரச்னை ஏற்படும்.
கோயில்களில் இருக்கும் பாம்பு புற்று கனவில் வந்தால், புதிய முதலீடுகளில் கவனம் தேவை என்பதைக் குறிக்கிறது. கோயிலில் யானையை கனவில் கண்டால் அரசாங்க உதவி கிடைக்கும், நீண்ட நாட்களாக இருந்த வழக்கில் தீர்வும் கிடைக்கும். கோயில் யானை மாலை போடுவது போல கனவு வந்தால் பிரிந்த கணவன், மனைவி உறவு மேம்படும், பதவி உயர்வு ஏற்படும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். கனவில் பாழடைந்த கோயிலைக் கண்டால், செய்யும் தொழிலில் நஷ்டமும், தோல்வியும் உண்டாகும்.
கோயில் குளத்தில் தலை முழுகுவது போல கனவு கண்டால், துன்பங்கள் அகலும் என்று பொருள். கோயிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக்கொள்வது போல கனவு கண்டால், எதிர்பாராத பிரச்னையில் மாட்டிக்கொண்டு தவிக்கப்போகிறீர்கள் என்று பொருள். சிவன் கோயில், பெருமாள் கோயிலை கனவில் கண்டால், எடுத்தக் காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது. கோயிலில் அமர்ந்திருப்பது போல கனவு கண்டால், செய்யும் செயலில் மேன்மை உண்டாகும்.
கோயிலில் தீபாராதனை காட்டுவது போல கனவு கண்டால் சுபச் செய்திகள் கிடைக்கும் என்று பொருள். கோயிலில் அம்மனின் மாங்கல்யத்தை கனவில் கண்டால் சுப நிகழ்ச்சிகள் நடக்கப்போவதாகப் பொருள். கோயிலில் வேப்ப இலை அல்லது வேப்பமரத்தை கனவில் கண்டால் குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று பொருள். கோயில் உண்டியலில் பணம் போடுவது போல கனவு கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும். இதுபோன்ற கனவுகள் உங்களுக்கு வந்திருக்கிறதா? என்பதைச் சொல்லலாமே.