சில பொருட்களை குறிப்பிட்ட நாட்களில், அதுவும் குறிப்பிட்ட சில நேரத்தில் வாங்கும்போது செல்வம் பெருகும். உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மிக்கு உகந்த கல் உப்பை வாங்குவதால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். அதைப்போல ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பொருட்கள் வாங்குவதால் எண்ணற்ற பலன்களை அடையலாம். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
திங்கட்கிழமை: திங்கட்கிழமை சந்திர பகவானுக்கும், சிவபெருமானுக்கும் உகந்த கிழமையாகும். இந்த நாளில் சந்திரனை வழிபடுவதால் அதிர்ஷ்டம் பெருகும். இந்த நாளில் வெள்ளை நிற பொருட்களை வாங்குவதால் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். திங்கட்கிழமையில் அரிசி, இனிப்புப் பொருள், தானியங்கள், மின் சாதனப்பொருட்கள், பால் பொருட்கள் வாங்குவது நமக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தரும்.
செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க்கிழமை முருகனுக்கும், ஆஞ்சனேயருக்கும் உகந்த நாளாகும். இந்த தினத்தில் நிலம் வாங்குவதும், விற்பதும் நல்லதாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் சொத்து சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் செய்வது அதிர்ஷ்டத்தைத் தரும். பால், மரம், சருமம் சம்பந்தமான பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நலம்.
புதன்கிழமை: புதன்கிழமை புத பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகச் சொல்லலாம். இந்த நாளில் பச்சை காய்கறிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், கல்வி சம்பந்தமான பொருட்கள் வாங்குவதன் மூலம் வீட்டில் அது சேர்ந்துகொண்டேயிருக்கும். ஆனால், இந்த தினத்தில் அரிசி, வீடு மனை, பாத்திரம், மருந்துப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
வியாழக்கிழமை: வியாழக்கிழமையில் குரு பகவானையும், பிரஹஸ்பதியையும் வணங்கி வர நன்மைகள் பல கிடைக்கும். இந்தக் கிழமையில் மின் சாதனங்கள், நவீன உபகரணங்கள், அசையும் சொத்துக்கள் வாங்குவதற்கு சிறந்த நாளாக இருக்கிறது. இந்த நாளில் கண்ணாடி சம்பந்தமான பொருட்களையும், மிகவும் கூரான பொருட்கள் வாங்குவதையும் தவிர்ப்பது நலம்.
வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்த தினத்தில் அழகு சாதனப்பொருட்கள் வாங்குவதும், மங்கலகரமான பொருட்கள், வாசனை திரவியம் வாங்குவது அதிர்ஷ்டத்தை தரும். வெள்ளிக்கிழமையில் கல் உப்பு, சமையல் எண்ணெய், விளக்கேற்றும் எண்ணெய், கருப்பு எள், மரம் சார்ந்த பொருட்கள், துடைப்பம் வாங்குவது நல்ல பலனைக் கொடுக்கும். இந்த தினத்தில் மசாலா பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், இரும்பு சார்ந்த பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
சனிக்கிழமை: சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய கிழமையாகும். இந்த தினத்தில் அதிக எடை உள்ள பொருட்கள், வீடு மனை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். சனிக்கிழமை இந்தப் பொருட்களை வாங்கினால், கடன், வறுமை, நோய் ஏற்படும். சனிக்கிழமையில் தண்ணீர் குவளை, பூச்செடிகள், ஆடைகள், தோட்டம் சார்ந்த பொருட்கள் வாங்குவது சிறந்தது.
ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபடுவதால் கண் பார்வை குறைபாடு நீங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நாளில் கண்ணாடி பொருட்களை வாங்குவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும் பொருட்கள், கோதுமை தானியம், வண்டி வாங்குவதற்கு சிறந்த நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.