
ராமர் சீதை லட்சுமணன் அனுமன் ஆகியோர் இணைந்த சன்னதிகளை கொண்டு ராமர் கோவில்களை பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் இவர்களுடன் பரதன் சத்ருக்கனனும் இணைந்த கோவிலை அயோத்தியில்தான் காண முடியும். அயோத்தி போலவே அனைத்து சகோதரர்களுடனும் ராமன் காட்சிதரும் சன்னதியைக் கொண்ட கோவில் கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருக்கிறது.
சகோதர ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ராம சகோதரர்கள். ஒரு கணம் கூட கண் மூடாமல் ராமரை பாதுகாத்தான் தம்பி லட்சுமணன். 'அண்ணனுக்குரிய நாட்டை நான் ஆளமாட்டேன்' என சொல்லி காட்டிலிருந்து அண்ணன் திரும்பி வரும்வரை அவரது பாதுகையை சிம்மாசனத்தில் நிறுத்தி வைத்தான் இன்னொரு தம்பி பரதன். பரதனுக்கு சேவை செய்தான் இன்னொரு தம்பி சத்துருக்கனன். பகவானுக்கு சேவை செய்தவர்கள் லட்சுமணனும் பரதனும். பகவானுக்கு செய்யும் சேவையை விட பகவானின் அடியவருக்கு செய்யும் சேவை மிகவும் மேலானது என்ற அடிப்படையில் பரதனுக்கு சேவை செய்தான் சத்ருகனன்.
அயோத்தியில் தன் தம்பிகளுடன் பட்டாபிஷேகத்தன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான் ராமன். 'வடக்கில் உள்ளவர்களுக்கே இந்த அருள் தரிசனம் கிடைக்கும். தென்னக மக்கள் இந்த தரிசனத்தை தினமும் காண வேண்டுமே' என்ற எண்ணம் தெற்கிலிருந்து சென்ற விபூஷணன் போன்றவர்களுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணம் பிற்காலத்தில் நிறைவேறியது. கோவில் நகரான கும்பகோணத்தில் இந்த அரிய காட்சியை சிலையாக வடித்து கோவில் அமைத்தனர். இங்கே ராமனுக்கு பட்டாபிராமன் என்று பெயர். ராமனுக்கு அருகே சீதை. சாமரம் வீசும் நிலையில் சத்ருகனன். வில்லேந்தி பாதுகாப்பு அளிக்கும் நிலையில் லஷ்மணன். குடை பிடிக்கும் நிலையில் பரதன். தும்புரா இசைத்து ராமனின் புகழைப் பாடும் நிலையில் ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.
பொதுவாக ராமர் கோவில்களில் ராமனும் சீதையும் ஒரே சன்னதியில் இருந்தாலும் தனித்தனி சிலைகள் தான் வடிக்கப்படும். ஆனால் இங்கு இங்கு மட்டும் தான் ராமனும் சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்துள்ளதைக் காண முடியும்.
ராமரின் சன்னதியைத் தவிர ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன. கோவில் சுற்றுச்சுவரில் வராக சுவாமி, விநாயகர் ஆகியோர் உள்ளனர். பிரகாரத்தில் ராமாயணத்தில் உள்ள அரிய காட்சிகள் மூலிகை வண்ணங்களால் வரையப்பட்டுள்ளன.
தஞ்சையை ஆண்ட நாயக மன்னர்கள் காலத்தில் தோன்றியது இந்த கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.