
தமிழ் நாட்டில் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் 1370-ல் பிறந்தார். தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர்.
இவரது தந்தையார் திருவெங்கட்டாரும் தாயார் முத்தம்மையும் ஆவார்கள். இவர் பிறந்து சில தினங்களிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டதால், தமக்கையின் அரவணப்பில் வளர்ந்தார்.
அன்னார் அருணகிரி இளமையிலே தமிழில் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேறத் தேவையான முனைப்புகளை எடுத்துக் கொண்டார். உரிய வயதில் திருமணமும் செய்து வைத்தார். ஆனாலும், அருணகிரிநாதர் தீய பழக்கங்களில் ஈடுபட்டு, தனது இளமைக்காலத்தை மோசமான பழக்கங்களுடன் வாழ்ந்துள்ளார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாக தனது சொத்தை இழந்ததோடு தொழு நோயின் பாதிப்புக்கும் உள்ளானார்.
அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட்டதால், கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். அதனால் இவரது சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடன் கடிந்து கொண்டார். தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார் அருணகிரி.
அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி, கடைசியில் திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார். அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியவர், ’வடிவேலவன்’ என்பதை உணர்ந்தார். முருகன் “அருணகிரிநாதரே!“ என அழைத்துத் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினார்.
தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களையும், மெய்ஞ்ஞானத்தையும் அவருக்கு அருளினார். இதனால், அருணகிரியாரின் சித்தம் தெளிந்து, அவரது தொழுநோயும் குணமானது.
பின்னர், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க “முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியைக் கொண்டு திருப்புகழைப் பாடினார். இவர் எழுதிய திருப்புகழில் 16000 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-இக்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் புகழ்ப் பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளது.
அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று இயற்றிய 16,000 பாடல்களில், சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன.
அருணகிரிநாதரின் 'திருப்புகழ்' தேவாரத்திற்கு இணையாகவும், 'கந்தர் அலங்காரம்' திருவாசகத்திற்கு இணையாகவும், 'கந்தர் அனுபூதி' திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன.
அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல்கள் இருந்தன. அவை முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய 'சரவணபவ' எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறப்படுகிறது.
அருணகிரிநாதர் எழுதிய நூல்கள் கந்தர் அந்தாதி (102 பாடல்கள்), கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்), கந்தரனுபூதி (52 பாடல்கள்), திருப்புகழ் (1307 பாடல்கள்), திருவகுப்பு (25 பாடல்கள்), சேவல் விருத்தம் (11 பாடல்கள்), மயில் விருத்தம் (11 பாடல்கள்), வேல் விருத்தம் (11 பாடல்கள்) ஆகியன ஆகும்.
1964ம் ஆண்டில், ’அருணகிரிநாதர்’ வெளியான தமிழ் திரைப்படத்தில் புகழ் பெற்ற பின்ணணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அருணகிரி நாதரின் திருப்புகழை தினமும் பாடி இறையருள் பெறுவோம். இன்பமுடன் வாழுவோம்.