பொதுவாக கோவில்களில் அமைக்கப்படும் கோபுரத்தில் தெய்வங்களின் சிலைகளே அதிகமாக இடம்பெற்று இருக்கும். அதனோடு சேர்த்து மனித வாழ்வியலை விளக்கும் வகையிலான சிலைகளும் கோபுரங்களில் வைப்பர். ஆனால் இங்குள்ள கோவில் கோபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தி, அவருடைய மனைவி கஸ்தூரிபாய் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு போன்றவரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. இப்படிப்பட்ட கோவில் எங்குள்ளது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் இடம் பெற்றுள்ள கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோவிலே.
மிகவும் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலும் ஒன்று. சித்திரை மாதத்தில் இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் ஏராளமானோர் இத்திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.
தென் மாவட்டங்களில் பொதுவாகவே சித்திரை மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அக்காலங்களில் மக்கள் அதிகமாக அம்மை நோயால் பாதிக்கப்படுவதுண்டு. அவ்வாறு பாதிக்கப்படும் போது கவுமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக் கொண்டால் அம்மை போன்ற கோடை கால நோய்களிலிருந்து நிவர்த்தி கிடைக்கும் என்பது இங்குள்ள மக்களின் காலங்காலமான ஆழ்ந்த நம்பிக்கையாக பார்க்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாது குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டிக்கொண்டு, குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை தோளில் தொட்டில் கட்டிபோட்டு அதனோடு சேர்த்து அக்னி சட்டியை எடுத்து வருவார். இது இந்த கோவிலுக்கே உரிய தனித்துவமான வழிபாடு முறைகளில் ஒன்று என்று சொல்லலாம்.
மேலும் இந்த கோவிலில் அன்னதானமாக அதிகமாக அசைவ உணவுகளையே படைக்கிறார்கள். பொதுவாக எந்த அம்மன் கோவிலிலும் அசைவ உணவினை அன்னதானமாக படைப்பதில்லை. ஆனால் இக்கோவிலில் வேண்டுதல் முடித்த பக்தர்கள் ஆடு, கோழி வெட்டி சமைத்து அதனை பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குகிறார்கள். சித்திரை திருவிழாவின் போது இந்த வகையான அன்னதானம் எட்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
சித்திரை திருவிழாவானது சித்திரை மாதத்தில் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி வைகாசி மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று முடியும். கிட்டத்தட்ட எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவானது காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.