நாய்களுக்கு பெயர் சூட்டும் கோவில்... நம் நாட்டில்தான் மக்களே! எங்கன்னு தெரியுமா?

Dog temple
Dog temple
Published on

இந்தியாவில் எலிகளை வழிபட உலகப் புகழ் பெற்ற கர்ணி மாதா கோயில் உள்ளது . அது போல இந்தியாவில் வவ்வால்களை வழிபடப்பட ஒரு கோயிலும் உண்டு. இந்த வரிசையில் நாய்களை கடவுளாக வழிபாடு செய்யும் கோயில்களைப் பற்றி காண்போம். இந்த கோயில்கள் முழுக்கவும் நாய்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை.

சன்னபட்னா நாய் கோயில்:

கர்நாடகா மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா கிராமத்தில் ஒரு நாய் கோயில் 2010 ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் இரண்டு நாய்களின் சிலைகள் நிறுவப்பட்டு , அவை தினசரி வழிபாட்டில் உள்ளன. சன்னபட்னா கிராம மக்கள் இங்குள்ள நாய்களுக்கு இயற்கையான சக்திகள் இருப்பதாக நம்புகிறார்கள். அவை அவற்றின் உரிமையாளர்களை எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள். எதிர்காலத்தில் நடைபெற உள்ள ஆபத்துகளிலிருந்தும் தங்களை காப்பாற்றும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோயிலுக்கு சென்று நாய்களை வழிபட்டால் கிராமத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் நாய் கடவுள் பாதுகாப்பார் என்று நம்புகின்றனர்.

குகுர்தேவா நாய் கோயில்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் மாவட்டத்தில், காப்ரி என்ற சிறிய கிராமத்தில் குகுர்தேவா நாய் கோயில் உள்ளது. இந்த கோயில் 14 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பானி நாகவன்ஷி அரசர்களால் கட்டப்பட்டது. இந்த கோயில் கருவறையில் நாயுடன் சிவலிங்கத்தின் சிலையும் உள்ளது. இந்தக் கோயில் ஒரு நாயின் கல்லறையின் மீது கட்டப்பட்டுள்ளது .

நாகவன்ஷி அரசர் ஒருவரின் செல்லப்பிராணியாக இருந்த நாய் அவரிடம் அன்பாகவும் விசுவாசமாகவும் இருந்துள்ளதாக உள்ளூர் கதைகளில் கூறப்படுகின்றது. அதனால் நாயின் நினைவாக நாகவன்ஷி அரசர் அந்த கோயிலை கட்டியுள்ளார். இக்கோயிலில் வழிபட்டால் நாய் உங்களை கடிக்காது. நாய் கடித்து இருந்தால், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

சிபியாஹிரியா பைரவர் கோயில்

கிரேட்டர் நொய்டாவில் உள்ள, சிபியா ஹிரியா கிராமத்தில் பைரவர் கோயில் ஒன்று உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் லகா என்பவர் ஒரு நன்றியுள்ள நாயை வளர்த்து வந்துள்ளார். அவர் ஒரு சேட்டிடம் கடன் வாங்கி திருப்பி கட்ட முடியாமல் தவித்து வந்தார். ஒரு கட்டத்தில் கடனுக்கு ஈடாக தனது நாயை சேட்டிடம் கொடுத்து விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு சேட்டின் வீடு கொள்ளையடிக்கப்பட்டது. அந்த நாய் கொள்ளைக்காரர்கள் பொருட்களை பதுக்கிய இடத்திற்கு சேட்டை இழுத்துச் சேர்ந்தது. திருடு போன பொருட்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியில் நாயை திரும்பவும் லகா வீட்டிற்கே அனுப்பினார் சேட். நாயை தன் வீட்டிற்கு வருவதை பார்த்தா லகா , சேட் வீட்டை விட்டு நாய் தானாக வருவதாக நினைத்து ஆத்திரத்தில் அதைக் கொன்று விட்டார். விஷயம் அறிந்த சேட், லகாவிடம் உண்மையைக் கூறி வருத்தப்பட்டார்.

அதன் பின்னர் மனம் வருந்திய லகா, நாய்க்கு ஒரு கோயில் கட்டினார். இந்த கோயிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டால் ரேபிஸ் நோய் குணமாகிறது. கோயில் அருகில் உள்ள குளத்தில் குளித்தால் நாய்க்கடி பாதிப்பில் இருந்து மீள முடியும் என்கிறார்கள்.

பாரிசினி கோயில்:

கேரளா மாநிலம் கண்ணூரில் பாரிசினி கோவில் உள்ளது. இங்குள்ள கடவுள் முத்தப்பா நாய்களை மிகவும் நேசிக்கிறார். நாய் முத்தப்பாவின் வாகனமாக கருதப்படுகிறது. இங்கு யாரேனும் நாய்களை துன்புறுத்தினால், அவர் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இந்த கோவிலில் நாய்களுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. பெயர் சூட்டும் விழாவிற்கு நாய் உரிமையாளர்கள் தங்கள் நாயுடன் இங்கு வருகிறார்கள். கோயில் பூசாரி நாய்களின் காதுகளில் மந்திரங்களை உச்சரித்து அதற்கு பெயர் சூட்டுகிறார்.

இதையும் படியுங்கள்:
தண்டனையோ வெகுமதியோ கொடுக்காமல் குழந்தையை ஒழுங்குபடுத்த முடியுமா?
Dog temple

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com