சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய இத்தல ஆபத்சகாயேச்வரர் இழந்த செல்வத்தை மீட்டுத் தருவார். வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன் இத்தலநாயகனை வேண்ட, ராமரின் அருள் கிடைத்தது. வானரமாகிய சுக்ரீவனால பூஜிக்கப்பட்ட இத்தலம் தென்குரங்காடுதுறை ஆயிற்று.
ஞானசம்பந்தர் இடம் அவர் தந்தை யாகம் செய்ய பொருட்கள் கேட்க சம்பந்தர் இத்தலம் வந்து பதிகம் பாட பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை பலிபீடத்தில் வைத்தருளினார்.
தீரா கடன் தொல்லைகள் தீர, பில்லி சூன்யம் போன்றவற்றிலிருந்து விடுபட, மயிலாடுதுறை வழித்தடத்தில் அமைந்த திருபுவனம் சரபேஸ்வரரரை வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதன் என மூன்று வடிவங்கள் கொண்ட சரபர், சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு ஆகிய நான்கு கடவுள்களின் ஒருமித்த ரூபம். சூலினி, பிரத்யங்கிரா என்ற இரு தேவியருடன் காட்சி தரும் இவரை 11 விளக்கு,11சுற்று 11 வாரம் தரிசனம் செய்ய சங்கடங்கள் நீங்கும்.
திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். ருணவிமோசன லிங்கேஸ்வரரான இவரை இவரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக ஆராதனை செய்து பின் மகாலக்ஷ்மியையும், ஜேஷ்டா தேவி மற்றும் பைரவரையும் வணங்க, வறுமை கடன் தீரும்.
கும்பகோணம் அருகே வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில். இறைவி பங்கஜ வல்லி, வசிஷ்டமுனிவரால் சாபம் பெற்ற காமதேனு இந்த இறைவனை பூஜித்து விமோசனம் பெற்றதால் ஆவூர் ஆயிற்று. இத்தலத்தின் மற்றோர் சிறப்பு அம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். இவரை தரிசித்தால பித்ரு தோஷம் நிவர்த்தியாகும்.
ஆடுதுறையில் அமைந்த இத்தலத்தில் பிராணவரதேஸ்வரர் காட்சி தருகிறார் குலோத்துங்க சோழனின் மந்திரி வரிப்பணத்தைக் கொண்டு இக்கோவில் கட்டினான். இதனால் சினமுற்ற அரசன் மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டான். மந்திரியின் மனைவி இத்தல மங்களாம்பிகை விடம் வேண்டினாள்.
மந்திரி தன் உடலை திருமங்கலக் குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் ஒப்புக் கொண்டான். மந்திரியின் உயிரற்ற உடலை இத்தலத்தில் எடுத்து வர இத்தல நாயகி மந்திரியை உயிர்ப்பித்தாள். இவள் மங்களாம்பிகை என்றும், பிராணனை திருப்பி கொடுத்ததால் பிராணவரதேஸ்வரர் என்றும் பெயர் வந்தது.