சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நிறைவாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அந்த ஐஸ்வர்யத்தை பெறுவதற்கு மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக தேவை. என்றென்றைக்கும் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக இருக்கும்பொழுது நம்மால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற முடியும். அப்படிப்பட்ட ஐஸ்வரியத்தை பெறுவதற்கு குத்து விளக்கை வைத்து எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு நபரோ அல்லது குடும்பமோ ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு பின்னடைவை சந்திக்க நேரிடும்பொழுது அவர்களிடம் இருக்கக்கூடிய ஐஸ்வரியம் குறைய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருப்பவர்களும் சரி அல்லது தொடர்ந்து ஏதாவது ஒரு தடங்கல்களையும் பிரச்னைகளையும் சந்தித்துக் கொண்டு இருப்பவர்களும் சரி வீட்டில் இருக்கக்கூடிய ஒரே ஒரு குத்து விளக்கை வைத்து பூஜை செய்தாலே போதும். அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை பெற முடியும்.
இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று செய்வது மிகவும் சிறப்புக்குரியது. வாராவாரம் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் இந்த பூஜையை செய்து வர வேண்டும். குத்து விளக்கை வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் இந்த பூஜையை செய்யலாம் அல்லது ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் இந்த பூஜையை செய்ய வேண்டும்.
குத்து விளக்கிற்கு பூக்களை சூடி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு குத்துவிளக்கில் நெய் ஊற்றி ஐந்து முகங்களுக்கும் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த குத்து விளக்கை நாம் மகாலட்சுமியாக பாவித்து வணங்க வேண்டும். அடுத்ததாக, ஒரு சிறிய தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சளையும் குங்குமத்தையும் சரிசமமாக கலந்து கொள்ளுங்கள். பக்கத்தில் உதிரி மல்லிகை பூக்களை வைத்துக் கொள்ளுங்கள். இந்த பூஜையை ஆரம்பிப்பதற்கு முன்பாக விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு பிறகு ஆரம்பிக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு மல்லிகை பூவையும் சிறிது நாம் கலந்து வைத்திருக்கும் மஞ்சள் குங்குமத்தையும் சேர்த்து எடுத்து குத்து விளக்கிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 16 முறையும் அதிகபட்சம் 108 முறையும் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது, ‘ஓம் சகல ஐஸ்வர்ய தாரணி நமஹ’ என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பிறகு இயன்றவர்கள் பால் பாயசம் நிவேதனம் செய்யலாம் அல்லது பாலை மட்டும் காய்ச்சி அதில் ஒரு ஏலக்காயை தட்டி போட்டு சிறிது கற்கண்டையும் சேர்த்து நெய்வேத்தியமாக வைக்கலாம். இந்த முறைப்படி நாம் வாராந்தோறும் குத்து விளக்கை மகாலட்சுமியாக பாவித்து பூஜை செய்யும்பொழுது சகல ஐஸ்வர்யங்களும் நம்மிடம் நிலையாக நிலைத்து நிற்கும்.