தண்டிக்கும் தெய்வம் அல்ல, திருத்தும் தெய்வம் சனி: சனி ஜெயந்தி முக்கியத்துவம்!

ஏழரை சனி, அஷ்டம சனி பாதிப்புகளை குறைக்க விரதம், எள் விளக்கு, அன்னதானம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி போன்ற பரிகாரங்கள் மூலம் சனி பகவானின் கருணை, நீதியையும் கர்ம பலனையும் உணர்த்தும் சனி ஜெயந்தி.
sani-jayanthi
sani-jayanthi
ரேவதி பாலு

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சமீபத்தில் ஒரு நாடகம் மெரீனா தியேட்டர்ஸால் மேடையேற்றப்பட்டது. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

Updated on: 

சூர்ய பகவானுக்கும் சாயா தேவிக்கும் புதல்வராய் பிறந்த சனி பகவானின் பிறந்தநாளை குறிக்கும் சனி ஜெயந்தி எப்போதும் வைகாசி மாத ரோகிணி நட்சத்திரமும் அமாவாசையுகம் கூடிய நாளில்  வந்தாலும், இந்த வருடம் கூடுதலாக சனிக்கிழமையன்றே வருவது மிகவும் ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.  இதனை ஜோதிடர்கள் சனி குறித்த பரிகாரங்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதுகின்றனர்.  இன்று செய்யக்கூடிய பரிகாரங்கள், வழிபாடுகள் மூலம் ஏழரை சனி மூலம் ஏற்பட்டிருக்கும் கடினமான சூழ்நிலை மாற வழி உண்டு என்று சொல்லப்படுகிறது.

சிவனாக இருந்தாலும் சரி எவனாக இருந்தாலும் சரி சனி பகவானுக்கு பயப்பட்டே ஆகவேண்டும் என்று கூறுவர்.  ஏனென்றால் சனி பகவானின் தீர்ப்பு  எல்லோருக்கும் சமமாக ஒரே மாதிரிதான் இருக்கும். சனி பகவான் கர்மம் மற்றும் நீதியின் அதிபதியாக  செயல்படுகிறார்.

மனிதர்கள் செய்யும் செயல்களே அவர்களுக்குரிய நல்ல மற்றும் தீய வினைகளாக அமைகின்றன என்பதால்,  சனி பகவான் அவரவர் கர்ம வினைகளுக்கேற்ற பலன் களையே கொடுப்பார் என்பது நிதர்சனம். சனி பகவான் தண்டிக்கும் தெய்வம் அல்ல. இவர் திருத்தும் தெய்வம். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளாமல் இவரை கண்டு பயப்படுகிறார்கள்.  

சனி பகவான் நேர்மை, பொறுமை மற்றும் கடின உழைப்புக்கு வெகுமதி அளிப்பதோடு, போராட்டங்கள் மற்றும் தாமதங்கள் மூலம் முக்கியமான வாழ்க்கைப் பாடங்களையும் கற்பிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் சனி ஜெயந்தியன்று சனி பகவானை வழிபடுவதின்  மூலம் ஏழரை சனி, அஷ்டமத்து சனி போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும் என்று சனி ஜெயந்தி வழிபாட்டை சிறப்பித்து  கூறப்படுகிறது. கிரகங்களுக்குள் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் ஒருவரே.

பொதுவாக சனியின் விளைவுகள் தங்கள் வாழ்க்கையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருதுபவர்கள், இந்த சனி ஜெயந்தி  நாளில் விரதம் இருப்பது, சனீஸ்வரன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது, எள் விளக்கு ஏற்றுவது போன்றவை பெரும்பாலும் சனி தோஷம் மற்றும் சனி தொடர்பான விளைவுகளை குறைக்க உதவும் என்றும் கருதப்படுகிறது. சனி பகவானை வழிபடும்போது சற்று பக்க வாட்டில் நின்று வழிபட வேண்டும், என்றும் அவரது நேரடி பார்வை நம்மீது படக்கூடாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.  

இதையும் படியுங்கள்:
பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டுமா? சனி அமாவாசையில் தவற விடக்கூடாத தர்ப்பண முறைகள்!
sani-jayanthi

சனி ஜெயந்தியன்று  ஏழைகளுக்கு உதவுவது, குறிப்பாக  மாற்று  திறனாளிகளுக்கு உதவுவது, அன்னதானம்  மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது போன்றவை சிறப்பான செயல்களாக கருதப்படுகின்றன.  சனி ஜெயந்தி என்பது கர்மம், ஒழுக்கம், பொறுமை மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றை வலுவாக நினைவூட்டும் ஒரு நாளாக கருதப்படுகிறது.

இந்த நாளில் சனி பகவானை வழிபட்டால் மக்களை கஷ்டங்கள் மூலம் சோதித்தாலும், நேர்மை அர்ப்பணிப்பு மற்றும் நற்செயல்களுக்கு வெகுமதியும் அளிக்க கூடியவரும் அவரேதான்  என்பதை பக்தர்களுக்கு நினைவூட்டுகிறது.

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே!

மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

சச்சரவின்றி,  சனீஸ்வர தேவே!

இச் செகம் வாழ,  இன்னருள் தா! தா!

என்று சனி பகவானை மனமார துதித்து சனி ஜயந்தியன்று வழிபட்டால் அவர் இன்னருளால் வாழ்வில் துன்பங்கள் குறைந்து நன்மைகள் பெருகும்.

logo
Kalki Online
kalkionline.com