

சனிக்கிழமையும் அமாவாசையும் இணைந்து வருவதால் இது ‘சனி அமாவாசை’ என்று அழைக்கப்படுகிறது. சனி அமாவாசை நாள் நீதியின் கடவுளான சனி கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையில் வரும் அமாவாசை, கர்ம வினைகள் மற்றும் பாவங்களைப் போக்கி, வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இது சனிக்கிழமையில் வருவதால், சனி பகவானின் ஆற்றல் இந்த நாளில் மிகவும் அதிகமாக இருக்கும்.
வரும் மே 16-ம்தேதி சனிக்கிழமை (ஜ்யேஷ்ட மாதம்) அன்று வரும் அமாவாசை மிகவும் விசேஷமான ஒரு நாளாகும். அன்று (மே 16-ம்தேதி) காலை 5.11 மணி முதல் நள்ளிரவு (மே 17-ம்தேதி) 1.32 மணி வரை அமாவாசை திதி நீடிக்கிறது. இந்த நாளில் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த புண்ணியத்தை தரும். மேலும் சனி அமாவாசை பூஜை பித்ரு தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷத்தின் தீய விளைவுகளையும் தணிக்கிறது.
அதாவது இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகள் சனி பகவான், நம்முடைய முன்னோர்களை மட்டுமின்றி, செல்வத்திற்கு அதிபதியான மகாட்சுமியையும் மகிழ்விக்கும்.
"ஓம் சனீஸ்வராய நமஹ" அல்லது "ஓம் ஷம் சனீச்சராய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது சிறப்பான பலன்களை தரும்.
சனி அமாவாசை அன்று விரதம் இருந்து எள், தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் செய்வது, தானம் செய்வது முன்னோர்களுக்கு அமைதியை தரும். புனித நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்வது, ஏழைகளுக்கு உணவு தானம் வழங்குவது, பசு, காகம், நாய்கள் ஆகியவற்றிற்கு உணவு கொடுப்பது ஆகியன முன்னோர்களை மகிழ்விப்பதுடன் அவர்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.
சனி அமாவாசை என்பது வருடத்திற்கு ஓரிரு முறை மட்டுமே நிகழும் ஒரு அரிய நிகழ்வாகும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் இந்நாளில் சனீஸ்வரரை வழிபட, சனியின் பாதிப்புகள் கணிசமாகக் குறையும். அதாவது, சனி மகா தசையில் இருப்பவர் களுக்கும் அல்லது ஏழரைச் சதி காலத்தில் இருப்பவர்களுக்கும், சனி அமாவாசை என்பது சனி பகவானை வழிபட்டு, அவரை மகிழ்வித்து, அவருடைய ஆசீர்வாதங்களைப் பன்மடங்கு பெறுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த நாளாகும்.
சனி அமாவாசை அன்று மாலையில் அரச மரத்தடியில், வீட்டின் நிலை வாசலில் விளக்கேற்றுவதும் மகாலட்சுமியை ஈர்க்கும் விஷயங்களாகும். மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுவதும், வீட்டின் தெற்கு திசை நோக்கி விளக்கேற்றி வைப்பதும் முன்னோர்களின் மோட்சத்திற்கும், முன்னோர்களிடம் ஆசியை பெறுவதற்கு வழிவகுக்கும்.
இந்த அரிய நாளில், சனி ஜெயந்தி, அரிய புதாதித்ய ராஜயோகம் மற்றும் அமாவாசை இணைந்து வருவதால், இந்த நாளில் விரதம் இருந்து சனி பகவானை முறையாக வழிபட்டு, தான தர்மங்களை செய்வதன் மூலம், முன்னோர்களின் ஆசி, வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. புனித நதிகளில் நீராடுவது மிகவும் மங்களகரமானது.
சனி அமாவாசையன்று சனி பகவானுக்கு விருப்பமான பொருட்களை ஏழைகளுக்கு தானம் செய்வது சனி பகவானை மகிழ்விக்கும். அன்றைய தினம் காகத்திற்கு உணவிடுதல், கருப்பு எள், கருப்பு உளுந்தம் பருப்பு, கருப்பு காலணி, கருப்பு நிற ஆடைகள், கருப்பு குடை, கருப்பு துணி மற்றும் இரும்பு பொருட்களை தானம் செய்வது சனி பகவானின் மனதை மகிழ்ச்சி அடைய செய்யும். இதனால் சனியின் அருள் கிடைக்கும்.
இது வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும். மேலும் அன்றைய தினம் சனி பகவான் மற்றும் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் சனி தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
சனி பகாவனுக்கு உகந்த இந்தநாளில் இந்த திதி அமைவதால் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதும் சனி தோஷங்களின் தாக்கத்தை குறைத்து முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும். பகல் முழுவதும் திதி இருப்பதால் இது வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
குறிப்பாக சனி அமாவாசையில் சனி பகவானின் அருளை பெற சனி பகனுக்கு நல்லெண்ணெய் படைத்து வழிபட வேண்டும். இதனுடன் சனி அமாவாசையன்று குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளிப்பதால் சனியின் தீய தாக்கங்கள் குறையும்.
இந்த நாளில் அரிசி மாவுடன் வெல்லம் கலந்து எறும்புகளுக்கு உணவளிப்பதால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.
ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில், இந்த நாளில் வழிபாடுகள் மற்றும் தானங்கள் செய்வது பல மடங்கு புண்ணியத்தைத்தரும் என்று கூறப்படுகிறது.