

இறைவனை நினைத்து தியானித்து ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்த இடங்களில் ஒருவித அதிர்வலைகள் இருக்கும். நாம் அங்கு ஒரு சில மணித்துளிகள் அமர்ந்து தியானம் செய்தாலே மிகுந்த நற்பலன் உண்டாகும். அத்தகைய தவசக்தி மிகுந்த இடத்தில், சர்வமும் நிறைந்த சிவபெருமானின் கோவிலும் அமைந்த இடம்தான் திண்டுக்கல் அருகே உள்ள தவசிமேடை ஒடுக்கம் மகாலிங்கேசுவரர் கோவில், இது திண்டுக்கல்லில் இருந்து 13 கி.மீ.தூரத்தில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் விராலிபட்டி அருகில் அமைந்துள்ளது.
இங்குள்ள மரகதவல்லி- மாணிக்கவல்லி சமேத மாகலிங்கேசுவரர் கோவில், பரத்வாஜ மகரிஷி வழிபட்ட கோவில் ஆகும். அதோடு ராமரும், பரசுராமரும் கூட இவ்வாலய இறைவனை வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலின் மூலவரான மகாலிங்கேசுவரருக்கு எதிரே சிறிய நந்தியும், வலதுபுறம் மரகதவள்ளி - மாணிக்கவள்ளி சன்னிதியும் அமைந்துள்ளது.
மகாலிங்கேசுவரர் கிழக்கு நோக்கியும், மரகதவள்ளி மற்றும் மாணிக்கவள்ளி அம்மன்கள் தெற்கு நோக்கியும் எழுந்தருளி உள்ளனர். கோவில் நுழைவு வாசலின் இருபக்கத்திலும் கணபதி, முருகன் வீற்றிருக்கின்றனர். மூலவர் சன்னிதியில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் ஆதிபைரவர் சன்னிதி உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, மகம் நட்சத்திரம் ஆகிய நாடகளில் இங்கே சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இந்தக் கோவிலில் உற்சவ மூர்த்தி இல்லை. கோவிலில் கொடிமரம், கோபுர கலசங்களும் இல்லை. ஆகமவிதி கடைப்பிடிக்கப்படாத காரணத்தால் இங்கே கும்பாபிஷேகம் நடத்தப்படுவது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆலயத்தில் எங்கும் உண்டியல் இல்லை.
இத்தல இறைவனை மனமுருகி வேண்டிக்கொண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். பரத்வாஜ மகரிஷி மற்றும் சித்தர்கள் தவம் செய்த கோவில் என்பதால் தியானம் செய்தவற்கு மிகவும் ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. மகாலிங்கேசுவரரை சுற்றி வந்து விளக்கேற்றி வழிபட்டு தியானம் செய்தால், அலைபாயும் மனம் கட்டுப்படும் என்கிறார்கள். இங்குள்ள இறைவனை வழிபட, சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. கடன் தொல்லை, திருமண தடை நீங்குவதற்கு பிரதோஷ வழிபாடு கைகொடுக்கிறது.
ஆதிபைரவர் சன்னிதியின் பின்னால் ஒரு துவாரம் உள்ளது. அந்த துவாரத்தின் வழியாக பார்த்தால் மகாலிங்கேசுவரரின் அருட்காட்சி கிடைக்கும். அதன்மூலம் ஒரே நேரத்தில் ஆதிபைரவர், மகாலிங்கேசுவரரை தரிசிக்க முடியும். இங்கு சிவராத்திரி சமயத்தில் மாசி மாதம் 20 நாட்களும், இங்கு புரட்டாசி மாதம் 20 நாட்களும், காலையில் மகாலிங்கேசுவரர் மீதும், மாலையில் ஆதிபைரவர் மீதும் சூரிய ஒளி விழுவது சிறப்பு.
பரத்வாஜ மகரிஷி, மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். எனவே மகாலிங்கேசுவரர் கோவில், மகம் நட்சத்திரத்துக்கு உரிய சிறப்பான ஆலயமாக கருதப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக்குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.இதுதவிர பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் மகாலிங்கேசுவரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்கிறார்கள். மகிரிஷிகள், சித்தர்களுக்கு பிடித்த பொரி உருண்டைகளை படைத்து அடியார்களுக்கு தானமாக வழங்கும் பக்தர்களின் துன்பங்கள் விலகுவதாக ஐதீகம்.
இந்தக் கோவிலின் தலவிருட்சம், திருவாச்சி மரம். இம்மரத்தின் இலைகளை கொண்டும் மகாலிங்கேசுவரருக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும் திருவாச்சி இலையை விபூதியோடு சேர்த்து கொடுக்கின்றனர். அந்த விபூதி மன அமைதியோடு, நோய்களை குணமாக்கக் கூடியது என்கின்றனர். கோவில் வளாகத்தில் பழமையான புற்று உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் அதற்கு பூஜை செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகிவிடுவதாக கூறுகின்றனர். கேது பரிகாரத்திற்கு தகுந்த ஆலயமாகவும் இது திகழ்கிறது.
இந்த திருத்தலத்திற்கு பரசுராமர் வந்து தவம் செய்துள்ளார்.அவர் தவம் செய்த இடம், ஆதி பைரவர் சன்னிதியில் இருந்து தென்கிழக்கு மூலையில் சுமார் 70 அடி தூரத்தில் இருக்கிறது. அதை அடையாளப்படுத்தும் வகையில் அங்கே ஒரு நினைவு கல் தூண் அமைந்துள்ளது. அதன் அருகில் நெய் தீபம், கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி மக்கள் வழிபடுகின்றனர். தலைவலியால் அவதிப்படுபவர்கள். இந்த நினைவு கல் தூணை மூன்று முறை சுற்றி வந்து, தலையால் லேசாக முட்டினால், தலைவலி குணமடைவதாக நம்பிக்கை. இதனால் இந்த கல் தூணை, 'முட்டுக்கல்' என்றும் அழைக்கின்றனர்.