மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு விருதுநகர் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து செல்வது எளிமையான பாதையாகும். இங்கு மலைக்கோயிலில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என இரண்டு சுயம்பு லிங்கங்கள் உள்ளன. மூலிகைகள் நிறைந்த மலைக்குன்று ஒன்றும் இங்குள்ளது. அதற்கு 'சஞ்சீவி மலை' என்று பெயர். அத்துடன் சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்களுக்கும் கோயில் உள்ளது.
தல சிறப்பு: இந்த வனப் பகுதியில் 18 சித்தர்களும் தவம் செய்ததாகவும், இன்றும் சித்தர்கள் அங்கு சூட்சும ரூபத்தில் உலா வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4500 அடி உயரத்தில் சதுரகிரி மலை கோயில் அமைந்துள்ளது. 'தென் கயிலை' என சிறப்பாகப் போற்றப்படும் சதுரகிரியில் மூலவர் சுந்தர மகாலிங்கம், அம்மன் பெயர் ஆனந்தவல்லி. இங்கு ஈசன் சுயம்பு மூர்த்தியாக சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். சிவராத்திரி, மகாளய அமாவாசை, அடி, தை அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இங்கு அதிகக் கூட்டம் காணப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்கிறார்கள். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க என பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
பெயர் காரணம்: திசைக்கு 4 மலைகள் வீதம் 16 மலைகள் சமமாக, சதுரமாக அமைந்துள்ள காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. இந்த மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு அணியாமல் இம்மலை ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சிறப்புகள்: பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கி இருந்தபொழுது செய்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள. ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் ஒளிரும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்தப் புல்லை உபயோகப்படுத்தியுள்ளனர். இங்கு அமாவாசை நாட்களில் தேனும் தினை மாவும் பிரசாதமாக தரப்படுகிறது. மலையடிவாரத்தில் மலையேறும் முன்பு ஆசீர்வாத விநாயகரை வணங்கி யாத்திரையை தொடங்க வேண்டும். வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பண்ணசாமி கோயில்கள் உள்ளன.
அத்ரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசித்து மேலே செல்ல வழியில் கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் காணப்படுகின்றன. பச்சரிப்பாறை, வனதுர்கை கோயில், பெரிய பசுக்கிடை பிலாவடி கருப்பு கோயிலை தரிசித்து விட்டு மகாலிங்கம் கோயிலை அடையலாம். இக்கோயில் தமிழக அரசு அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது.
தல பெருமை:
சுந்தர மகாலிங்கம்: அகத்தியர் சதுரகிரி மலையில் தங்கி லிங்க வழிபாடு செய்து அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கமாகும். இங்கு அகத்தியர் தங்கி இருந்த குன்றை 'கும்ப மலை' என்று அழைக்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்ததால் இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது.
1950 ம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்துவரும் சுந்தர மகாலிங்கம் கோயிலில் இருந்து சற்று மேடான பகுதியில் 'சந்தன மகாலிங்கம்' கோயில் உள்ளது. இம்மலையில் மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் என ஐந்து கோயில்கள் உள்ளன.
சந்தன மகாலிங்கம்: ஈசனின் உடலில் பாதியை கேட்டு பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்த அம்பாள் தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். இதனால் மகிழ்ந்த ஈசன் பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என்று தல வரலாறு கூறுகிறது. தான் அமைத்த லிங்கத்திற்கு தினமும் அபிஷேகம் செய்ய ஆகாச கங்கையை வரவழைத்தாள். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். சந்தன மாரியம்மன் சன்னிதி, சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன் என இங்கு எல்லாமே சந்தன மயம்தான். இங்கு செண்பகப் பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.
அபூர்வ மூலிகைகள்: சதுரகிரி மலையில் பல அற்புதமான மூலிகைகள் உள்ளன.. பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம், கருநெல்லி போன்ற அற்புதமான மரங்களும், மூலிகை செடிகளும் இங்கு நிறைந்துள்ளன. கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் சுனையும் ஒன்றுள்ளது. மிகுந்த மருத்துவ குணம் நிறைந்த இந்நீர் குழம்பிய சேற்று நீர் போல் காணப்படும்.
இரட்டை லிங்கம்: மலையேறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் உள்ளது. இதற்கு எதிரே இரட்டை லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்த ராமதேவ சித்தர் என்பவரின் குகை உள்ளது. சதுரகிரி மலையில் உள்ள கல்லால மரம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை: சிவனைப் போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாகத் தங்கி அருள வேண்டும் என்று விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்ததைக் கண்டு, 'ஆனந்தவல்லி' என்ற திருநாமத்துடன் அம்மன் லிங்க வடிவில் சுந்தர மகாலிங்கம் சன்னிதிக்கு பின்புறம் எழுந்தருளி அருள்புரிகிறாள்.
இக்கோயில் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை நான்கு முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.