திருவண்ணாமலை திருத்தலத்தின் அற்புதச் சிறப்புகள்!

Thiruvannamalai Sri Annamalaiyar Temple
Thiruvannamalai Sri Annamalaiyar Temple
Published on

லகின் பல்வேறு திருத்தலங்களில் மலை மேல் இறைவன் அருள்புரிகிறார். ஆனால், திருவண்ணாமலையில் மலையே இறைவனாக அருள்புரிவது அதிசயம். கயிலாய மலை ஈசனின் இருப்பிடமாக இருந்தாலும், இறைவனே சுயம்பு வடிவாய், மலையாய் காட்சியளிப்பது திருவண்ணாமலையில்தான். இந்த மலை 2748 அடி உயரம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 168 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மலையின் தென்மேற்கு திசையில் உள்ள அல்லிச்சுனை அருகில் அல்லி குகை உள்ளது. கிரிவலப் பாதை 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. அண்ணாமலையார் கோயில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி, அதாவது 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பழங்கால வரலாறு மற்றும் புவியியல் அமைப்பின்படி பார்த்தால் திருவண்ணாமலையின் வயது 260 கோடி ஆண்டுகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நான்கு யுகங்களிலும் இந்தத் திருவண்ணாமலை பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. கிருத யுகத்தில் அக்னி மலை, திரேதா யுகத்தில் ரத்தின மலை, துவாபர யுகத்தில் தாமிர மலை என்றும், கலி யுகத்தில் கல் மலையாகவும் காட்சி அளிக்கிறது.

‘அருணம்’ என்றால் சிவப்பு. அண்ணாமலை அக்னி மலையாக இருப்பதால் சிவப்பாக இருக்கிறது. கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்றிவிட்டு அங்கிருந்து கீழே பார்த்தால் மலையே தீப்பிழம்பாக, சிவப்பாகக் காட்சியளிப்பதாய் தீபம் ஏற்றுபவர்கள் கூறுகின்றனர். என்னதான் கோடையில் உஷ்ணமாக இருந்தாலும் மலை மீது இருக்கும் கந்தாச்ரமம் விருப்பாட்ச குகை போன்ற இடங்கள் மிக மிகக் குளுமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
காலை நேரத்தில் வெறும் காலில் நடப்பதால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Thiruvannamalai Sri Annamalaiyar Temple

கோயிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலதுபுறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம்பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும் அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் இது அமைந்துள்ளது. பாத தரிசன சன்னிதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுற்றி உள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர் சக்தி தேவியின் திருவடி உருவங்கள் காட்சி தருகின்றன. மேலும், மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. கிரிவலம் வரும்போது பாத தரிசனத்தை நாம் தரிசிக்கலாம்.

கார்த்திகை தீப கொப்பரையிலிருந்து கிடைக்கும் மை புனிதமானது. இது மார்கழி ஆருத்ரா திருவிழாவில் எழுந்தருளும் நடராஜ பெருமானுக்கே முதலில் அணிவிக்கப்படும் பின்னர்தான் மக்களுக்கு. திருவண்ணாமலையில் காணப்படும் அபூர்வ வகை மரங்களில் ஒன்று அழிஞ்சில். இந்த மரத்தின் பழம் பழுத்து கீழே உதிரும். இதில்  எதுவும் அதிசயம் இல்லை. ஆனால், அப்பழத்தின் விதைகள் மட்டும் எப்படியோ சென்று மரத்தின் வேர் தண்டு பகுதியில் ஒட்டிக்கொள்ளும்.

தீபத் திருநாள் அன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் பரணி தீபமும் மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். கார்த்திகை திருநாளில் நெல்பொரியுடன் வெல்லப்பாகும் தேங்காய் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து சுவாமிக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள். வெள்ளை நிற பொரி திருநீறு பூசிய சிவனையும் தேங்காய் துருவல் கொடை தன்மை கொண்ட மாவலியையும் வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன. பக்தர்களின் ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்னும் தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும் அப்பமும் ஈசனுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
தெய்வீக அம்சம் கொண்ட மலர்கள் வீட்டில் இருந்தால் என்ன பலன் தெரியுமா?
Thiruvannamalai Sri Annamalaiyar Temple

திருவண்ணாமலையில் மலையே லிங்கம் என்பதால் மலையிலிருந்து எவரும் கல்லை வெட்டி எடுக்க மாட்டார்கள். மலையின் அமைப்பு கீழ் திசையிலிருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். மலையை சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும். மலையின் பின்னால் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். மலையை சுற்றி முடிக்கும் தருவாயில் மலை ஐந்து முகங்களுடன் காட்சி தரும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, தில்லையை தரிசித்தால் முக்தி, காசியில் மரித்தால் முக்தி, ஆனால் திருவண்ணாமலையை மனதில் நினைத்தாலே முக்தியாம். காலையில் நீங்கள் எழுந்ததும், ‘அருணாச்சலா… அருணாச்சலா…. அருணாச்சலா’ என்று மும்முறை உரக்கச் சொல்லிவிட்டு அன்றைய தினத்தை துவக்கினால் அன்றைய தினம் உங்களுக்கு நல்ல தினமாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com