திருவண்ணாமலைக்கு வந்த முதல் சித்தரை புலிகள் காவல் காத்த அதிசயம்!
திருவண்ணாமலையில் எத்தனையோ சித்தர்களும், மகான்களும் வந்து தவம் புரிந்து பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், திருவண்ணாமலைக்கு வந்த முதல் சித்தர் யார் என்று தெரியுமா? இங்கு வந்த முதல் சித்தருக்கு அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் புலிகளாக வந்து காவல் காத்தார்கள் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1750ல் ராயவேலூர் என்ற கிராமத்தில் பிறந்தார் கந்தப்பன். சிறுவயதிலேயே சிவபெருமானின் அருளால் சகல சித்திகளையும், ஞானத்தையும் பெற்றார். ஒரு கட்டத்தில் துறவரம் பூண்டு பல சிவஸ்தலங்களுக்கு சென்று சிவபெருமானை தரிசித்தவர், கடைசியாக திருவண்ணாமலையை அடைந்தார்.
திருவண்ணாமலையில் இவர், அருணாசலேஸ்வரர் கோயிலின் கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய லிங்கத்திற்கு அருகில் நெடுங்காலம் ஈசான்ய பகுதியில் தங்கி தவம் செய்தார். இதனால் கந்தப்பனை அனைவரும் ஈசான்ய ஞானதேசிகர் என்று அழைக்கத் தொடங்கினர்.
அச்சமயம் திருவண்ணாமலை கலெக்டராக இருந்த ஐடன் துரையுடைய காசநோயை குணமாக்கினார். இதற்கு பிரதிபலனாக ஈசான்ய ஞானதேசிகர் கேட்டுக்கொண்டப்படி ஐடன் துரை தன்னுடைய சொத்துக்களின் பெரும்பகுதியை அண்ணாமலைக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதுமட்டுமில்லாமல் பல பக்தர்களின் குறைகளையும் தீர்த்து வைத்தார் ஈசானியர். இதனால் அண்ணாமலையாரின் அன்பிற்கினியவராகிவிட்டார்.
ஈசானியர் திருவண்ணாமலையில் தன்னையும் மறந்து பலகாலம் தவமிருப்பார். அப்போது அவருக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படக்கூடாது என்று அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் புலிகளாக வந்து இவருக்கு காவலுக்கு இருப்பார்கள். பக்தர்கள் இவரை தரிசிக்க வந்தால் புலிகள் வழிவிடுமாம்.1829 ஆம் ஆண்டு பத்மாசனத்தில் சின் முத்திரை காட்டியப்படி மகாசமாதி அடைந்தார் ஈசான்யர்.
இவர் தினமும் திருவண்ணாமலையில் ஈசான்யமுலையில் வில்வமரத்தடியில் நின்றப்படி அண்ணாமலையாரை அழைத்து தரிசிப்பது வழக்கம். அந்த இடத்திலேயே மகானுடைய சமாதியை அமைத்தார்கள் சீடர்கள். இவரது ஜீவசமாதி ஈசான்ய மடத்தில் அமைந்துள்ளது. 18 சித்தர்கள் பட்டியலில் ஈசான்ய ஞானதேசிகர் சேர்க்கப்படவில்லை.
அவர் பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு பிரம்ம ஞானி ஆவார். இன்றைக்கும் அரூபமாக வந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் ஈசான்யர்.
திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய முக்கியமான தலங்களில் இதுவும் ஒன்றாகும். இதுப்போன்ற சித்தர்கள் வாழும் புண்ணிய பூமி தான் திருவண்ணாமலை.

