பர்வதவர்த்தினி தாயார் பிறந்த வீடு: கந்தமாதன பர்வதத்தின் புராண வரலாறு!

Gandhamadhana Parvatham
Gandhamadhana Parvatham
Published on

ராமேஸ்வரத்தில் உள்ள கந்தமாதன பர்வதத்தை அருள்மிகு ராமநாத சுவாமியின் மனைவியான பர்வதவர்த்தினியின் பிறந்த வீடாகச் சொல்வார்கள். இத்திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் ராமநாதர் கோயிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனை ‘கெந்தமாதன பர்வதம்’ என்று வடமொழியில் சொல்வார்கள். ‘கெந்தம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு சந்தனம் என்று பொருள். பர்வதம் என்றால் மலை.

ஸ்ரீராமர் சீதையை தேடி வந்தபோது ராமேஸ்வரத்தில் உள்ள இந்த மலை மீது ஏறி நின்று இலங்கையை நோக்கினார் என்று புராணங்கள் சொல்கின்றன. ஆனால், கந்தமாதன பர்வதம் மலையாக இல்லாமல், மணற்குன்றின் மேல் கோபுரத்துடன் கூடிய ஒரு மண்டபக் கோயிலாக இருக்கிறது. படிகள் ஏறித்தான் மேலே செல்ல வேண்டும். இந்தக் கோயிலுக்குச் செல்ல 25 படிகள் ஏற வேண்டும். கருவறையில் உள்ள சக்கரத்தில் ஸ்ரீராமரின் பாதங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே’ ஸ்லோகத்தின் ரகசியம் தெரியுமா?
Gandhamadhana Parvatham

வருடம்தோறும் ஆடி மாதம் ஆஷாட பகுள கிருஷ்ணாஷ்டமியில் அருள்மிகு ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி திருக்கல்யாண உத்ஸவம் 17 நாட்கள் ராமேஸ்வரம் திருக்கோயிலில் நடைபெறும். அப்பொழுது இங்கே ராமநாத சுவாமி மறு வீடு வருவார். அவர்களுடன் ராமபிரானும் உடன் இருந்து அருள்வார். பிரம்மோத்ஸவம் நடக்கும்போது மூன்றாவது நாள் இறைவன் கந்தமாதன பர்வதத்திற்கு தனது பத்தினியுடன் வந்து அருள்பாலிப்பார். அப்போது இங்கே சிறப்பான வழிபாடுகள் நடைபெறும்.

இப்படி வருடத்திற்கு இரண்டு முறைகள் மட்டுமே ராமநாத சுவாமி எழுந்தருளும் புண்ணியமான இடமாகும் இது. ராமபிரான் சீதையைத் தேடி வரும்பொழுது இந்த மணல்மேட்டில் ஏறி இலங்கையை பார்த்ததாகக் கூறுவது போன்றே, அனுமன் கடலை கடக்கும்போது இத்தலத்திலிருந்துதான் இலங்கைக்குத் தாவினார் என்றும் கூறுவார்கள். இந்த இடத்தில் ஸ்ரீராமரின் பாதம் பட்டதால் அவரது நினைவாக அவரது திருப்பாதங்களை கல்லில் பொறித்து இங்கு பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீராமர் பாதம் உள்ள இந்த இடத்தின் மேல் பகுதியில் பதினான்கு தூண்கள் கொண்ட அழகிய கோபுரத்துடன் கூடிய மண்டபம் இந்த இடத்தின் அழகை மிகைப்படுத்திக் காட்டுகிறது. இங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் கடல் சூழ்ந்த அழகையும் ராமேஸ்வரம் நகரின் எழிலையும் கண்டு களிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அவசியம் அறிய வேண்டிய 6 முக்கிய விரதங்கள்!
Gandhamadhana Parvatham

அருள்மிகு ராமநாத சுவாமியும் இறைவி பர்வதவர்த்தினியும் இங்கு வரும்போது இந்த கோபுரம் மண்டபத்தில்தான் எழுந்தருள்வார்கள். ராமேஸ்வரத்தின் பழைய பெயர் கந்தமாதன பர்வதம் என்பதே ஆகும். ஸ்ரீராமன் வரலாற்றுக்குப் பின்தான் பெயர் மாறியதாகக் கூறப்படுகிறது. ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ராமநாத சுவாமியை விட, ஸ்ரீ ராமரின் திருவடிக்கே மிகுந்த சிறப்புள்ளது.

ராமேஸ்வரத்தின் மிக உயரமான பகுதி இதுவாகும். இந்த இடத்தின் உச்சியில் இருந்து முழு தீவு மற்றும் கடலில் தோற்றம் மயக்கும் அழகு தரும். அனுமன் கோயில் மற்றும் சுக்ரீவ தீர்த்தம் போன்ற மற்ற சிவாலயங்களும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன. அழகான நிலப்பரப்புகளில் ஒளிரும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை இங்கு   காலையிலும் மாலையிலும் கண்டு மகிழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com