பக்தனுக்காக சமையல் செய்த மதுரை மீனாட்சி அம்மனின் திருவிளையாடல்!

Meenakshi amman
Meenakshi amman
Published on

மதுரை மீனாட்சியம்மனின் திருவிளையாடல்களைப் பற்றி நிறைய கேட்டிருப்போம். ஆனால், மீனாட்சியம்மன் தன் பக்தனுக்காக வந்து சமையல் செய்த கதையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

மதுரை மீனாட்சியம்மனின் கோவிலில் உள்ள மடப்பள்ளியில் பணிப்புரிந்து வந்தவர் தான் சீனிவாசர். இவர் மீனாட்சியம்மனின் தீவிர பக்தர் ஆவார். ஒருநாள் அதிக வேலையின் காரணமாக மிகவும் களைப்பாக இருக்கிறது என்று மடப்பள்ளியை உட்புறமாக தாழ்ப்போட்டு விட்டு, "அம்மா மீனாட்சி! எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. அதனால் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன். சிறிது நேரம் கழித்து என்னை எழுப்புங்கள். அப்போது தான் நான் பிரசாதம் செய்ய முடியும்" என்று மீனாட்சியம்மனுக்கு உத்தரவு போட்டுவிட்டு தூங்க செல்கிறார் சீனிவாசர்.

சிறிது நேரம் கழித்து மடப்பள்ளி கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. அதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சீனிவாசர், "அம்மா மீனாட்சி என்னை இப்படி எழுப்பாமல் விட்டுவிட்டாயே!" என்று நினைத்துக் கொண்டு மடப்பள்ளியின் கதவை திறக்கிறார். அங்கே ராஜாவின் சேவகர்கள் வந்து, "அம்பாளுக்கு தீபாராதனை காட்ட நேரமாகிவிட்டது. பிரசாதம் தயாராகிவிட்டதா?" என்று கேட்டனர். அதைத்கேட்ட சீனிவாசர் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தார்.  மடப்பள்ளிக்குள் சென்ற சேவகர்கள் அங்கே பிரசாதம் தயாராகியிருப்பதை பார்க்கிறார்கள்.

இதைப்பார்த்த சீனிவாசருக்கு ஒன்றுமே புரியவில்லை. ராஜாவுடைய சேவகர்கள் அதையெல்லாம் அம்பாளுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்.

குருக்கள் அம்பாளுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு தீபாராதனை காட்ட திரையை விலக்கும் போது மீனாட்சி அம்மனின் மாணிக்க முக்குத்தி காணாமல் போய் இருப்பதை கவனிக்கிறார். இதைப் பார்த்த குருக்கள், "அம்மா மீனாட்சி என்ன சோதனையிது?" என்று கத்துகிறார். சீனிவாசன் இதெயெல்லாம் பார்த்து பயப்படுகிறார்.

அச்சமயம் ஒரு அசரீரி ஒலிக் கேட்கிறது. "யாரும் பயப்பட வேண்டாம். என் பிள்ளை சீனிவாசன் மிகவும் களைப்பாக இருக்கிறது என்று கூறி தூங்க சென்றான். சிறிது நேரம் கழித்து எழுப்ப சொல்லியிருந்தான். ஆனால், அவன் களைப்பில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். குழந்தை அயர்ந்து தூங்கும் போது எந்த தாயாவது எழுப்பிவிடுவாளா? அப்போது நானே பிரசாதம் செய்யலாம் என்று மடப்பள்ளிக்கு சென்றேன். அங்கே வெளிச்சம் குறைவாக இருந்ததால், என்னுடைய மூக்குத்தியை வெளிச்சத்திற்காக மடப்பள்ளியில் கழட்டி வைத்திருக்கிறேன். அங்கே சென்று தேடிப் பாருங்கள் மூக்குத்தி கிடைக்கும்!" என்று அசரீரி கூறிவிட்டு நின்றது. இதைக்கேட்ட சீனிவாசன் மீனாட்சியம்மன் காலில் விழுந்து கதறி அழ ஆரம்பிக்கிறார். "அம்மா எனக்காக வந்து பிரசாதம் செய்தாயே! நான் என்ன புண்ணியம் செய்தேன்" என்று மீனாட்சியம்மனின் காலில் விழுந்து கதறி அழுதார். மீனாட்சியம்மன் தன் பக்தனுக்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு இந்த சம்பவமே சான்றாகும்.

இதையும் படியுங்கள்:
'நம்முடைய வேண்டுதல் நிறைவேறுமா இல்லையா?' - கனவில் வந்து சொல்லும் முருகன்!
Meenakshi amman

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com