
சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீராமருக்கு நாய் ஒன்று குரைக்கும் சத்தம் கேட்டது. என்னவென்று அறிந்துகொள்ள காவலனை அனுப்பினார் ஸ்ரீராமர். அவனும் நாயை விரட்டி விட்டு வந்தான். சிறிது நேரத்தில் மீண்டும் அந்த நாய் குரைக்கவே, காவலன் மறுபடியும் அதைத் துரத்த சென்றான். இந்நிலை தொடரவே, ‘தம்பி லட்சுமணா நீ போய் காரணத்தை அறிந்து வா’ என்றார்.
லட்சுமணன் அந்த நாயிடம் வந்து, ‘உனது துயரத்திற்குக் காரணம் என்ன?’ எனக் கேட்டார். ஈனக் குரலில் அந்த நாய், ‘பிரபோ... கோயில், யாகம் செய்யும் இடம், பிருந்தாவனம், சபை மடம், புண்ணிய தீர்த்தம், சமையல் கட்டு ஆகிய இடங்களுக்கு நாங்கள் போகக்கூடாது என்பதால் சபைக்கு என்னால் வர முடியவில்லை. அதனால் ஸ்ரீராமரை எனக்காக இங்கு அழைத்து வாருங்கள்’ என்றது.
விஷயத்தை அறிந்த ஸ்ரீராமரும் அங்கு வந்தார். உடனே அந்த நாய், ‘தங்களின் வருகைக்கு நன்றி பிரபு. துறவி ஒருவர் கல்லால் அடித்து எனது காலை உடைத்து விட்டார். அதற்கு நியாயம் கேட்டுத்தான் வந்தேன்’ என்றது.
‘அதற்காக வருந்தாதே. இப்போதே விசாரிக்கிறேன்’ என்றார் ஸ்ரீராமர். நாயை அடித்த துறவி உடனே அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டர். ‘எதற்காக இந்த நாயை கல்லால் அடித்தீர்’ எனக் கேட்டார் ஸ்ரீராமர்.
‘பிரபு, இந்த நாய் என்னுடைய உணவில் வாய் வைத்தது. பசியுடன் இருந்த எனக்கு கோபம் வரவே, கல்லால் அடித்தேன்’ என்றார்.
‘வேடிக்கையாக இருக்கிறது. ஐந்தறிவு ஜீவன் மீது கல்லை எறிதல் பாவம் அல்லவா? அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும்’ என்றார் ஸ்ரீராமர். பிறகு அந்த நாயை பார்த்த ஸ்ரீராமர், ‘இந்தத் துறவையை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன்’ என்றார்.
அதைக் கேட்ட அந்த நாய், ‘நன்றி பிரபு. இவரை ஒரு சிவன் கோயில் நிர்வாக அதிகாரியாக ஆக்குங்கள். இதுவே இவருக்கான தண்டனை’ என்றது. ஸ்ரீராமரும் அதற்கு சம்மதித்தார். தனக்கு ஒரு நல்ல பதவி அளிக்கப்பட்டதால் துறவியும் மகிழ்ந்தார். நாயும் நிம்மதியுடன் புறப்பட்டது.
இதையறிந்த அயோத்தி மக்கள், ‘நாய் ஏன் இப்படி தீர்ப்பு சொன்னது’ என வியந்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் அந்த நாயை அழைத்து வரும்படி ஸ்ரீராமர் உத்தரவிட, மறுபடியும் அந்த நாய் அங்கு வந்தது.
அதனிடம் அந்தத் தீர்ப்பு குறித்து ஸ்ரீராமர் கேட்டபோது, ‘சிவன் கோயிலில் அதிகாரியாகப் பணிபுரிவது என்பது முள்ளின் மீது நிற்பது போல, சிரமமான வேலை. சிவன் கோயில், மடம், கிராம நிர்வாகத்தில் தவறு செய்யும் அதிகாரிகள், பசு மற்றும் அந்தணர், அனாதைகளின் செல்வத்தை அபகரிப்பவர்கள், அரசரிடம் இருந்து கொண்டு அவரிடம் வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள், அந்தணரின் போஜனப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு பிறவியில் நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் ஒரு மடாதிபதியாக இருந்தேன் அப்போது செய்த தவறுக்காக இப்போது நாயாகப் பிறந்துள்ளேன். எனவேதான் துறவிக்கு இப்படி ஒரு தண்டனை தீர்ப்பை வழங்கினேன். இந்தப் பிறவியின் பாவத்தை ஏற்றுக்கொண்ட துறவி, சிவன் கோயில் நிர்வாகியாக இருந்தாலும் தீவினை காரணமாக மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார்’ என்றது.
சிவன் கோயிலில் பொறுப்பேற்ற துறவி, தனது நேர்மையற்ற செயலால் மறுபிறவியிலும் நாயாகப் பிறந்தார். அவருக்கு தண்டனை அளித்த நாய் தனது பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்த பிறகு மறுபிறவியில் நற்கதியை அடைந்தது.