இராமநாதபுரம் குண்டுக்கரை என்ற திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுவாமிநாத சுவாமி ஆலயம். இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் 11 தலைகளுடனும் 22 கரங்களுடனும் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.
சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமான் இந்தத் தலத்திற்கு வந்து தங்கியதாக தல புராணம் சொல்கிறது. இங்கு முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் தருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
இராமநாதபுரம் பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கர சேதுபதி என்பவர் வாழ்ந்து வந்தார். தினமும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலுக்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவது வாடிக்கை. ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான் தற்போது குண்டுக்கரையில் இருக்கும் முருகன் சிலையை எடுத்துவிட்டு புதியதாக ஒரு சிலையை பிரதிஷ்டை செய்யும்படியும், இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு நன்மை விளையும் என்றும் கூறி மறைந்தார்.
அதன்படியே குண்டுக்கரை சென்ற பாஸ்கர சேதுபதி, அந்த ஆலயத்தில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றிவிட்டு, தற்போதுள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு சொல்கிறது.
இந்த ஆலயத்தில் முருகப்பெருமானைப் போலவே துர்கைக்கும் பிரம்மாண்ட சிலை வடிக்கப்பட்டுள்ளது. 18 திருக்கரங்களுடன் அருளும் இந்த துர்கா தேவி 7 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறாள். இந்த அன்னைக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
தைப்பொங்கல் தினத்தன்று துர்கா தேவிக்கு சாகம்பரி அலங்காரம் செய்யப்படுகிறது. அதாவது, அந்த தினம் காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் அம்பிகை காட்சி தருவாள்.
கந்த சஷ்டி விசேஷத்தின்போது திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இந்த தினத்தில் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.