
வாழ்க்கையில் மிகவும் விரும்பிய விஷயங்களை அடைந்த பிறகு கூட, அது மகிழ்ச்சியைத் தருவதில்லை. மாறாக, மனதில் வெறுமை தோன்றுகிறது. அது ஏன் என்பதற்கான காரணங்கள் குறித்து பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மனிதர்களுக்கு வாழ்வில் லட்சியம், குறிக்கோள், ஆசைகள், கனவுகள் என பலவும் இருக்கும். அவற்றை அடைவதற்காகப் போராடி, பல தடைகளைத் தாண்டி, முயற்சி செய்து, விரும்பிய விஷயங்களை அடைந்த பின்பு அவை மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. மனதில் ஒருவிதமான வெறுமை தோன்றுவது மிகவும் வியப்பான விஷயமல்லவா? கீதையில் இதைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் என்ன மாதிரியான விளக்கம் தருகிறார் தெரியுமா?
வெற்றி என்பது மாயை: வெற்றி என்று நாம் நினைப்பது உண்மையில் தற்காலிகமானது. அது ஒரு மாயை என்கிறது கீதை. செல்வம், அதிகாரம், உறவுகள், அங்கீகாரம் போன்ற வெளிப்புற விஷயங்களை நாம் துரத்துகிறோம். நீடித்த மகிழ்ச்சி தரும் என்று நம்புகிறோம். ஆனால், இவற்றை அடைந்த பிறகும் பெருமை அடைவதில்லை. மாறாக, வெறுமைதான் உருவாகிறது. ஒரு இலக்கை அடைந்ததும், உடனே புதிய இலக்கை நிர்ணயித்து விடுகிறோம். பின்னர் அதைப் பற்றிய ஏக்கங்கள் முளைத்து மகிழ்ச்சியைப் பறிக்கின்றன.
பலன்களின் மீதான பற்று: பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்ய கீதை வலியுறுத்துகிறது. முயற்சியில் தோல்வி அடைந்தால் துயரமும், வெற்றியடைந்தால் மகிழ்ச்சியும் அடைகிறோம். ஆனால், அந்த இன்பம் சில நாட்கள்தான். செயல்களின் பலனாகக் கிடைக்கும் விளைவை விட, அதைச் செய்யும்போது மனம் ஒன்றி தூய்மையாக அதில் ஈடுபடுகிறோமா என்பதைத்தான் கவனிக்க வேண்டும் என்று கீதை சொல்கிறது. வெற்றி பெற்றால்தான் மகிழ்ச்சி என்று அதைத் துரத்தும்போது அதிர்ச்சிதான் கிட்டுகிறது.
‘எனக்கு வேலை கிடைத்த பின்புதான் சந்தோஷமாக இருப்பேன். எடை குறைந்த பின்புதான் என்னையே எனக்குப் பிடிக்கும்’ என்று விளைவுகளைப் பற்றி அதிகமாக யோசித்து தற்காலிகமாக இருக்கும் மகிழ்ச்சியையும் தொலைக்கிறோம். ‘மக்கள் மகிழ்ச்சியாக இல்லாததற்குக் காரணம் எதிர்ப்பார்ப்பு. அதைத் தவிர்த்து விட்டால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்’ என்கிறது கீதை.
ஆசையின் தன்மை: கீதையின் கூற்றுப்படி ஆசை என்பது ஒரு அணையாத நெருப்பு. ஒரு ஆசையை நிறைவேற்றிய பின்பு இன்னொரு ஆசையைத் தூண்டுகிறது. இன்னும் இன்னும் என்ற அந்த முடிவில்லாத நாட்டம் அதிருப்தியின் சுழற்சியில் சிக்க வைக்கிறது. போதும் என்ற மனநிறைவைப் பெற்றுவிட்டால் வெறுமை தோன்றாது. மகிழ்ச்சியும் நிலைக்கும். மகிழ்ச்சி என்பது சாதனை அல்ல. அது ஒரு பயிற்சி.
மகிழ்ச்சி உங்களுக்குள் இருக்கிறது: ‘நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சி வெளியே இல்லை; உங்களுக்குள்ளேயே இருக்கிறது‘ என்கிறது கீதை. ஏனென்றால், நமது ஆத்மா தூய்மையானது, அமைதியானது. மனிதர்கள் உடலை சுயமாகவும், உணர்ச்சியை அடையாளமாகவும், அந்தஸ்தை மகிழ்ச்சியாகவும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அது சிறந்ததாக இல்லாவிட்டாலும் கூட மகிழ்ச்சி பிறக்கும். யாருடனும் தன்னை ஒப்பிடுவது கூடாது. நிபந்தனை இன்றி அன்பாக இருக்க வேண்டும். இதுதான் கீதை சொல்லும் நிறைவான வாழ்க்கைப் பாடத்தின் சாரம்.