
வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது லலிதா நவராத்திரி என்றும் சைத்ர நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது இரண்டாவதாக மிகப்பெரிய நவராத்திரியாகும். பல மாநிலங்களில், இந்த நவராத்திரி விழா வசந்த கால அறுவடைக்குப் பிறகு வருகிறது. சிலவற்றில் அறுவடையின் போது வருகிறது.
வசந்த நவராத்திரி, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ காமாக்ஷி, ஸ்ரீ மீனாக்ஷி, ஸ்ரீ விசாலாக்ஷி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சாகம்பரி, ஸ்ரீ மஹாலக்ஷ்மி புஷ்ப அலங்காரம், ஸ்ரீ புவனேஸ்வரி ஆகிய அன்னை பராசக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான திருவிழா. இந்த ஒன்பது நாட்களும் தேவியின் வெவ்வேறு அம்சங்களை போற்றி துதிப்பதால், வாழ்வில் வளமும், நலமும் பெருகும், கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பிகைக்குப் பிடித்தமான நைவேத்தியங்களைச் செய்து படைத்து வழிபடுவார்கள்.
வசந்த காலம் புதிய தொடக்கத்தையும், வளர்ச்சியையும் குறிப்பதால், இந்த நேரத்தில் அம்பிகையை வழிபடுவது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைத் தரும் என்பது ஐதீகம்.
ஆன்மீக ரீதியாக, வசந்த நவராத்திரி மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தவும், ஆன்மாவை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த நாட்களில் விரதம் இருப்பது, மந்திரங்கள் ஜெபிப்பது, தேவி ஸ்தோத்திரங்களை பாடுவது ஆகியவை மன அமைதியை அளிக்கும்.
வசந்த நவராத்திரியின் கடைசி நாளில் ராமரின் பிறந்த நாளான ராம நவமி அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, வசந்த நவராத்திரியின் கடைசி நாளை ராம நவராத்திரி என்றும் அழைக்கிறார்கள்.
வசந்தகால நவராத்திரி, காஷ்மீரில் நவ்ரே என்றும், மகாராஷ்டிராவில் குடி பத்வா என்றும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் உகாதி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நவராத்திரி பெரும்பாலும் வீடுகளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக சில கோயில்களில் மட்டுமே அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 7 வரை வசந்த நவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அம்பிகையை வழிபடுவதன் மூலம் நாம் புதிய நம்பிக்கையையும், மன உறுதியையும் பெறுவோம்.
எனவே, இந்த வசந்த காலத்தில் வசந்த நவராத்திரியை பக்தியுடன் கொண்டாடி, அன்னையின் அருளைப் பெற்று வாழ்வில் வசந்தத்தை வரவேற்போம்.