

மார்கழி மாதத்தை காலங்காலமாக தெய்வங்களுக்கு உரிய மாதமாகக் கொண்டாடுகிறார்கள். அதனால்தான் அந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு பூஜை, பஜனை போன்ற வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். பகவத் கீதையில் கூட கிருஷ்ண பகவான், ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கூறுகிறார். இந்த மாதத்தில்தான் தேவலோகத்தில் பகல் பொழுது ஆரம்பிக்கிறது.
மார்கழி மாதத்திற்கு 'தனுர் மாதம்’ என்ற பெயரும் உண்டு. இந்த மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மார்கழி மாதத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் புரிகிறார். இந்த மாதத்தில்தான் அங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீ ரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பு பெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் அவதரித்ததும் மார்கழி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில்தான். மார்கழி மாதத்தில்தான் மகாவிஷ்ணுவை மகாலட்சுமி மணந்து கொண்டார். திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்ததும் ஒரு மார்கழி மாதத்தில்தான். மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால், இந்த மாதம் முழுவதும் இறை வழிபாடுகளில் ஈடுபடுவது சிறப்பு.
மார்கழி மாதத்தில்தான் குளிர் அதிகமாக இருக்கும். அதிக குளிர் உடல் மற்றும் மூட்டு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் அந்த நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க அதிகாலையில் எழுந்து கோயில்களுக்குச் செல்ல அறிவுறுத்துகிறார்கள் நம் முன்னோர்கள். அதோடு, அந்த மாதத்தில் அதிகாலையில் பிராண வாயு சுத்தமானதாக இருக்கும். அதனை சுவாசிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதும் ஒரு காரணம். பெண்கள் இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து வாசலில் கோலமிடுவது அவர்களின் ஆரோக்கியம் நலனுக்கு உகந்தது என்பதால் அதனை வலியுறுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். இந்த நன்மைகள் பெறவே மார்கழியில் அதிகாலை வழிபாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள் தனது மணம் கவர்ந்த கண்ணனை மணக்க மார்கழி மாதம் முழுவதும் பாவை நோன்பு இருந்து அவரை அடைந்தார். இதன் அடிப்படையில்தான் தற்போதும் தங்களுக்கு நல்ல மணவாளன் அமைய வேண்டும் என்பதற்காக மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து வருகிறார்கள் கன்னிப்பெண்கள்.
ஆலயங்களில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் சூரிய ஒளி இறைவன் மீது விழுவது சகஜம். ஆனால், மார்கழி 30 நாளும் சுயம்பு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் கோயில் உலகிலேயே திருநெல்வேலி திசையன்விளை அருகிலுள்ள உவரி நகரில் உள்ள உவரிநாதர் ஆலயத்தில் மட்டும்தான்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் தாயார் கிரிஜகுஜாம்பிகை எனப்படும் பார்வதி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூவரும் ஒரே சன்னிதியில் காட்சியளிக்கின்றனர். பிருங்கி முனிவருக்காக இப்படி காட்சியளித்தனர். மார்கழி மாதத்தில் இந்த மூன்று தேவியருக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த தேவிகளை தரிசிக்க முடியாது. அந்நாட்களில் சன்னிதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடைபெறும். தை கடைசி வெள்ளிக்கிழமை சன்னிதி முன் மண்டபத்தில் அன்னம், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை படைக்கின்றனர். இந்த முப்பெரும் தேவியை வணங்கி வழிபட, குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காரிசேரியில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில் ஒரு அபூர்வமான பெருமாள் தலமாகும். இங்கு நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் லட்சுமி நாராயணர் அருள்பாலிக்கிறார். இது வேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய அமைப்பாகும். சுமார் 500 வருடங்களுக்கு மேல் பழைமையான இக்கோயிலில் மார்கழி மாதத்தில் 28 நாட்கள் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வர, தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிவபெருமான் நடனமாடும் ஐந்து சபைகளை குறிக்கும் வகையில் ஐந்து நடராஜ மூர்த்தங்கள் அமைத்துள்ளன.மார்கழி திருவாதிரை நாளில் இந்த ஐந்து நடராஜர்களும் ஒருசேர புறப்பட்டு ஆலயத்தை வலம் வருகிறார்கள். மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலையில் 3.30 மணிக்கு திறக்கப்படுகிறது. திருத்தணி முருகனுக்கு மார்கழி மாதத்தில் மட்டும் வென்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.