

கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக இருந்து, பக்தர்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தவர் அனுமன் ஆவார். ராம பக்தியை, ராம நாமத்தின் பெருமையை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்பதற்காக நித்ய சிரஞ்சீவியாக இருந்து தம் பக்தர்களை காத்து வருபவர் அனுமன். அனுமன் ஒருவரை வணங்கி வழிபட்டாலே, பல தெய்வங்களின் அருளை நாம் பெற முடியும். அந்த ஆற்றல் அனுமனுக்கு மட்டுமே உண்டு. அதனாலேயே அனுமனை வழிபடும் பக்தர்கள் அதிகம். அனுமன், ஆஞ்சநேயர், மாருதி, வாயு புத்திரன் என பலவிதமான பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.
ராம பக்த அனுமன், சிவபெருமானின் ருத்ர அவதாரமாகக் கருதப்படுபவர். ராமாயணத்தில் மட்டுமின்றி, மகாபாரதத்திலும் மிகவும் முக்கியமான பணிகளை அனுமன் செய்திருக்கிறார். அனுமனின் பெருமைகளைக் கூறும் மந்திரத்தை, ‘அனுமன் சாலிசா’ என்றும், அனுமனின் வீரம், அழகு, சாகசங்கள், பலம் ஆகியவற்றை கூறும் நூலை, ‘சுந்தர காண்டம்’ என்றும் அழைக்கிறோம். இந்த இரண்டு நூல்களை மட்டும் படித்தாலே நமக்கு ஏற்படும் எப்படிப்பட்ட கஷ்டங்களும் நீங்கி விடும். அனுமனின் பரிபூரணமான அருளும் நமக்கு நிரம்பவே கிடைக்கும் என்பது அனுமன் பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும்.
தீவிர ராம பக்தனான அனுமனை தைரியம், வீரம், நட்பு உள்ளிட்ட பல செயல்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்வதுண்டு. இது தவிர, அனுமனை சிரஞ்சீவி என்றும் அழைக்கிறோம். எந்த ஓர் ஆயுதத்தாலும் தாக்கவோ, மரணத்தை விளைவிக்கவோ முடியாதவர் என விஸ்வகர்மாவால் ஆசீர்வாதிக்கப்பட்டவர் அனுமான். தன்னை என்றும் மரணம் நெருங்காமல், அழிவில்லாமல் இருக்கக்கூடியவர் என எமதர்ம ராஜாவிடம் இருந்து வாழ்த்து பெற்றவர் அனுமன். இந்த உலகத்தில் எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாதவர் என பிரம்ம தேவரிடம் வரம் பெற்றவர்.
வாயு தேவனுக்கு இணையான வேகம் பெற்றவர் இவர். அதனாலேயே இவரை ‘மாருததுல்யவேகம்’ என குறிப்பிடுவதுண்டு. புத்தி கூர்மையில் தலைசிறந்தவர். அதனால்தான் அனுமனை குறிப்பிடும்போது, ‘புத்திமதாம்வரிஷ்தம்’ எனவும் குறிப்பிடுகிறார்கள். இதற்கு அனைத்து புலன்களையும் வென்றவர் அல்லது புலன்கள் அனைத்தையும் தன்வசம் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் என்று பொருள்.
இரும்பு போன்ற உடலையும், பலம் வாய்ந்த ஆயுதமான கதாயுதத்தையும் தாங்கி இருப்பவர் இவர். அதனாலேயே இவரை ‘பஜ்ரங்கபலி’ என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள். நினைத்த நேரத்தில் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொள்ளவும், மறைக்கவும் கூடிய ஆற்றல் மிக்கவர் அனுமன். பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் துர்கையை வழிபட்ட பலனையும், இவர்கள் நான்கு பேரின் குணங்களையும் கொண்டவர் அனுமன். நரசிம்மர், ஹயக்ரீவர், கருடன், வராகர் ஆகியோரின் பலம், தைரியம், அற்புத சக்திகள், எதிரிகளை வெல்லுதல் ஆகிய பெருமைகளைப் பெற்றவர் அனுமன்.
மார்கழி மாதம் வரும் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சனேய பகவான் அவதரித்ததாக ஐதீகம். அதனால் அன்றைய தினம் அனுமன் ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல்லில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில் இன்று (19.12.2025) அனுமன் ஜயந்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக இங்குள்ள அனுமனுக்கு வருடா வருடம் பிரம்மாண்டமான மலர் அலங்காரம் செய்யப்படும். இந்த ஆஞ்சனேயர் சுவாமியின் உயரம் 18 அடி ஆகும்.
அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை சுமார் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் ஆஞ்சனேயர். காலை 11 மணிக்கு பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சனேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று ஆஞ்சநேயரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வடை பிரசாதம் வழங்கப்படும்.
அனுமன் ஜயந்தி விழாவை முன்னிட்டு கோயில் பிராகாரம் முழுவதும் இரண்டரை டன் எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறது. இந்நாளில் நாமும் நம் வீட்டின் அருகிலுலுள்ள அனுமன் கோயிலுக்கு சென்று அவரை மனதார வழிபட்டு அவர் அருளை பெறுவோமே!