ஸ்ரீ ராமநவமி - விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமரின் பிறப்பை கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். ஏப்ரல் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ ராம நவமி அதிகாலை 1.08 முதல் ஏப்ரல் ஏழாம் தேதி அதிகாலை 12.25 வரை நவமி திதி உள்ளது. ராமபிரானின் புனர்பூச நட்சத்திரமும் நவமி திதியும் இணைந்து வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஸ்ரீ ராமநவமி கொண்டாடப்படுகிறது. அன்று ராம கதை படிப்பதும், பஜனை மற்றும் கீர்த்தனைகள் மூலமும் வழிபாடுகள் சிறப்பாக செய்யப்படும்.
ராம நாமத்தின் மகிமை:
ஒரு முறை நாரதருக்கும் இந்த சந்தேகம் வந்தது. ராம நாமத்திற்கு அப்படி என்ன மகிமை உள்ளது? அதை சொல்வதாலும், கேட்பதாலும் அப்படி என்ன பலன் கிடைக்கும்? என்ற சந்தேகம் எழ, வைகுண்டத்தில் வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவிடமே கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு அதோ பூமியில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கிறதே. அதன் காதில் போய் ராம நாமத்தை சொல் என்றதும், நாரதரும் சொல்ல உடனே புழுவின் உயிர் போய்விட்டது.
பதறிப் போனவர் விஷ்ணுவிடம் கேட்க, "சரி போகட்டும் அங்கு பறந்து கொண்டிருக்கிறதே அந்த பட்டாம்பூச்சியின் காதில் போய் ராம நாமத்தை சொல்" என்றதும் நாரதரும் சொல்ல அதுவும் இறந்துவிட பதறிப் போனவர், அடுத்து விஷ்ணு சொன்ன புதிதாக பிறந்த பசுவின் கன்றின் காதில் சொல்ல அதுவும் இறந்து விட, "இதுவா ராம நாமத்தின் மகிமை?" என்று கேட்க, மகாவிஷ்ணு, "குழப்பம் வேண்டாம் இந்த நாட்டின் மன்னருக்கு சற்று நேரத்தில் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. அதன் காதில் போய் ராம நாமத்தை சொல்" என்றதும் நடுங்கிக் கொண்டே சென்ற நாரதர், குழந்தையின் காதில் சொல்லிவிட்டு அங்கிருந்து மன்னரின் தண்டனைக்கு பயந்து தப்பி ஓட நினைக்க, நாரதரிடம் குழந்தை பேசியது!
இதைக் கண்டு வியந்த நாரதர் பிறந்த குழந்தை பேசுகிறதே! இது எப்படி நடக்கும்? யாருடைய கண்ணிற்கும் தெரியாத என்னை அடையாளம் கண்டு பேசுகிறதே என்று நினைக்க, குழந்தை, "நாரதரே என்னைத் தெரியவில்லையா? மண்ணில் புழுவாக நெளிந்த என்னிடம் நீங்கள் கூறிய ராம நாமத்தால் இன்று இந்த உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறேன்" என்றதும் நாரதர் நேராக மகாவிஷ்ணுவின் திருவடிகளை சரணடைந்து "ராம நாமத்தின் மகிமையை புரிந்து கொண்டேன்" என்றார்.
இவ்வளவு சிறப்பு மிக்க ராம நாமத்தை தினமும் ஜெபித்து வாழ்வில் சகல வளங்களையும் பெறலாம். ஜெய் ஸ்ரீ ராம்!