
குழந்தைகளுக்கு வித்தியாசமான வெரைட்டி ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் எப்போதும் மேகி இருக்கும். இந்த மேகியுடன், பன்னீர் சேர்த்து இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்தலாம். பன்னீர் பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த தனித்துவமான ரெசிபியை ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால், நீங்கள் அடிமையாகிவிடுவது உறுதி. மிகவும் சுலபமான இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
மேகி பன்னீர் பாப்கார்ன் :
தேவையான பொருட்கள் :
மேகி - தேவையான அளவு
பன்னீர் - 150 கிராம்
மைதா - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம்மசாலா தூள்- அரை டீஸ்பூன்
மேகி மசாலா - 1 பாக்கெட்
ஷெஸ்வான் சாஸ் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மேகியை கைகளால் நன்றாக பொடியாக நசுக்கி ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும்.
பன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக வெட்டிய பன்னீரை போட்டு அதனுடன் மைதா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, மேகி மசாலா, கரம் மசாலா தூள், ஷெஸ்வான் சாஸ், சோயா சாஸ், கொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கொரகொரப்பாக நசுக்கிய மேகியில் நன்றாக பிரட்டி (மேகி பன்னீர் துண்டுகளில் நன்றாக ஒட்ட வேண்டும்) எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வறுக்கும் போது எண்ணெய் அதிக சூடாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
இப்போது சூப்பரான மேகி பன்னீர் பாப்கார்ன் ரெடி.
கிரீமி மயோனைஸ், தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். உங்களுக்கு அதிக மசாலா பிடிக்கும் என்றால், காரமான சட்னி அல்லது ஸ்கெஸ்வான் சாஸை எடுத்துக் கொள்ளுங்கள். மேகி பன்னீர் பாப்கார்ன் மிருதுவாக இருக்கும் போது மிகவும் சுவையாக இருக்கும்.
சுகர் ப்ரீ சாக்லேட் ஐஸ்கிரீம் :
ஐஸ்கிரீம் அனைவருக்கும் ரொம்பப் பிடிக்கும். டயட்டில் இருப்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் சுகர் ப்ரீ ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழங்கள் - 2
இனிப்பு சேர்க்காத கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
பாதாம் பால் - 1/4 கப்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வாழைப்பழத்தை முதல் நாள் இரவே பிரிட்ஜில் பிரீசரில் வைத்து விடவேண்டும். அப்போது தான் காலையில் ஐஸ்கட்டி போல் இருக்கும்.
ஒரு பிளெண்டரில், பிரீஸ்ஸான வாழைப்பழங்கள், கோகோ பவுடர், தேன் மற்றும் பாதாம் பால் ஆகியவற்றை சேர்த்து மென்மையாகவும் கிரீமியாகவும் கலக்கவும்.
அதனுடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து, எல்லாம் நன்றாக ஒன்றுசேரும் வகையில் மீண்டும் நன்றாக கலக்கவும்.
கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மூடி, குறைந்தது மணி நேரம் பிரிட்ஜில் வைத்து உறைய வைக்கவும். அரை மணிநேரத்திற்கு ஒருமுறை ஐஸ்கிரீமை வெளியே எடுத்து நன்றாக கலந்து விடவும்.
மீண்டும் பிரிட்ஜில் வைத்து ஐஸ்கிரீம் செட் ஆனதும், உங்கள் ஆரோக்கியமான சாக்லேட் ஐஸ்கிரீமை வெளியே எடுக்கவும். கூடுதல் சுவைக்காக அதன் மேல் சாக்லேட் சிப்ஸ் மற்றும் டார்க் சாக்லேட் ஷேவிங்ஸ் அல்லது பெர்ரிகளை தூவி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சுகர் ப்ரீ சாக்லேட் ஐஸ்கிரீம் ரெடி.