நெல்லை மாவட்டம் களக்காடு என்ற ஊரில் ஒரு பெரிய சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் 12ஆம் நூற்றாண்டில் வீர மர்த்தாண்ட மன்னன் என்பவரால் கட்டப்பட்டது. 156 அடி உயரமுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பது நிலைகளிலும் ராமாயணம் மகாபாரதம் சிவபுராணம் தொடர்புடைய சிலைகளும் சிற்பங்களும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இந்த ராஜ கோபுரத்தின் விசேஷம் என்னவென்றால், இதன் நிழல் பூமியில் விழாது. அத்தகைய சிறப்பான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் நாங்குநேரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
பிரம்மாண்டமான மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள மணிமண்டபத்தில் அழகிய சிற்பங்களும், 21 இசை கல் தூண்களும் உள்ளன. இந்த 21 இசை தூண்கள் 21 இசைகளை ஒலிக்கும். ஆதிகாலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக களக்காடு விளங்கியது. பின்னர் பத்மநாதபரம் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் பகுதியில் ஒரு கலத்தில் தேவர்களை அசுரர்கள் தாக்கி வந்தனர். அவர்களிடமிருந்து உயிர் பிழைக்க தேவர்கள் இங்குள்ள சிவனை வணங்கினர். சிவனும் தேவர்களுக்கு அருள் புரிவதாக சத்தியவாக்கு கொடுத்தார்.
அதன்படி தனது பூத கண்ணங்களுடன் சென்று அசுரர்களை அழித்தார். சத்திய வாக்கு கொடுத்ததால் இவர் சத்தியவாகீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் களா மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் களக்காடு என பெயர் வந்தது.
ராமாயணத்தில் ராவணன் இங்கிருந்து சீதையை கடத்தியதாகவும் அப்போது அங்குள்ள புண்ணை வனத்தில் இருந்த சிவனை, ராமன் லட்சுமணன் மனம் உருகி வழிபட்டு சீதையை மீட்டு தருமாறு சிவனிடம் வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி சிவன் ராமருக்கு உதவி செய்ததாகவும், சத்தியவாக்கு அளித்ததால் சத்தியவாகீஸ்வரர் என்ற பெயரும், புன்னைவன நாதர் என்ற பெயரும் உள்ளதாக புராணம் கூறுகிறது. இங்குள்ள குளத்துக்கு சத்திய தீர்த்தம் என்று பெயர்.
திரும்பி வந்த சீதை, சிதையில் தீக்குளித்த பின்னர் கோவிலில் உள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டதாக வரலாறு உண்டு. எனவே இங்குள்ள கோவில் குளத்திற்கு சீதா தேவி குளம் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள வெளி பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 வகையான மரங்கள் உள்ளது. கோவில் காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரையும் மாலை 5:00 மணி முதல் 8:30 மணி வரையும் நடை திறந்து இருக்கும். மார்ச் 20, 21, 22 மற்றும் செப்டம்பர் 20, 21, 22 ஆகிய தினங்களில் சூரிய ஒளி சிவனின் மீது படும்படி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். கோமதி அம்பாளுக்கு தனி சன்னதியும், முருகனுக்கு தனி சன்னதியும் உள்ளது.
மேலும் பிரகாரங்களில் எண்ணற்ற சாமி சிலைகளை காண முடியும். வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெறும். ஐப்பசி கந்த சஷ்டி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் திருக்கார்த்திகை, நான்கு சோம வாரங்கள், நான்கு கட்டளைதாரர்கள் மூலம் சிறப்பாக நடைபெறும். தென்தமிழகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவில் செயல்பட்டு வருகிறது.