

மகாலட்சுமி தாயாரே தீப ஜோதியாக விளங்குபவள். வீடுகளை அழகாகவும் சுத்தமாக வைத்துக்கொண்டு மாலை நேரத்தில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வணங்கினால் அந்த வீட்டில் மகாலட்சுமி விஜயம் செய்வாள். இது கார்த்திகை மாதம். வீடு என்பது தெய்வ அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். வீட்டினை சுத்தமாக வைத்திருந்து விளக்கேற்றி வழிபட்டால் நம் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். தினமும் வீட்டில் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.
தீப திருநாளில் மட்டுமல்ல, கார்த்திகை மாதம் முழுவதும் தினசரி அகல் விளக்கேற்றி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது புண்ணிய செயலாகும். இதனால் செல்வ வளம் பெருகும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.
தீபத்தின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்வதாக ஐதீகம். தீபத்தில் முப்பெரும் தேவியரான மகாலட்சுமி தாயார், சரஸ்வதி தேவி மற்றும் பார்வதி தேவி ஆகியோர் உறைந்துள்ளனர். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
கார்த்திகை மாதம் ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் ஆறு மணிக்கு வீட்டின் முன் முகப்பில் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் புண்ணியம் உண்டாகும். முன் வினைப் பாவங்கள் விலகும்.
கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலை வேளையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபடுவது அக்னி பகவான் மூலமாக இறைவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன்களைப் பெற்றுத் தரக் கூடியது. கார்த்திகை மாதம் தினமும் வீட்டில் விளக்கேற்ற முடியாதவர்கள் இம்மாதம் வரும் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது அவசியம் வீட்டின் வாயிலில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.
வெள்ளி, தங்கம், பஞ்சலோகம் என எந்த விளக்கு வீட்டில் இருந்தாலும், மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதன் மகிமையே தனி. மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் அகலும். வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.