இந்தியாவில் பலவிதமான கோயில்களையும், சிற்பக் கலைகளையும் நாம் பார்த்து, ரசித்து, வியந்திருப்போம். அதில் சில சிற்பங்களை நுணுக்கமாக கவனிக்கும்போதுதான் அதில் உள்ள உண்மையான அர்த்தத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். அப்படியிருக்கும் சிற்பங்கள் நமக்கு வரலாற்றையும், வாழ்க்கைப் பாடத்தையும் கற்பிக்கும். அத்தகைய வியப்பான சிற்பக் கலையை பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.
‘நவநாரிகுஞ்சரம்’ என்றால் என்னவென்று தெரியுமா? நவநாரிகுஞ்சரம் என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். இதில் நவ என்றால் ஒன்பது, நாரி என்றால் பெண், குஞ்சரம் என்றால் யானை.
இந்த சிற்பத்தில் ஒன்பது பெண்கள் வெவ்வேறு முகபாவனையை கொண்டு யானை போன்ற வடிவத்திற்குள் காட்சியளிப்பார்கள். இந்த அரிய வகை சிற்பத்தை தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் உள்ள ஸ்ரீ கனககிரீஸ்வரர் ஆலயத்தில் காணலாம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாத சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் உள்ளது.
இந்த சிற்பத்தில் முதலில் நம் கண்களுக்குத் தெரிவது யானை உருவமே! கொஞ்சம் சற்று உற்றுப் பார்த்தால் ஒன்பது பெண்களின் உருவம் இதில் தெரியும். ஒவ்வொரு பெண்களின் முகத்திலும் ஒவ்வொரு முகபாவனை தெரியும். நவரசத்தையும் தங்களது முகத்தில் வைத்து காட்சி தருகிறார்கள்.
நவரசம் என்பது நகை, அழுகை, இளிவரை, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவவை, அமைதி ஆகியவையாகும். இதை முகபாவனை மூலம் வெளிப்படுத்தலாம். அத்தகைய முகபாவனைகள் கொண்ட பெண்களே நவநாரிகுஞ்சர சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளனர் என்பதே இந்த சிற்பத்தின் சிறப்பாகும்.
ஆலயங்களில் அமைந்திருக்கும் இந்த நவநாரிகுஞ்சரம் சிற்பம் என்ன தத்துவத்தை சொல்ல வருகிறது? நம்முடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது இதுபோன்ற நவரசத்தையும் உணருவோம். அப்படி நடக்கும்போது வாழ்க்கையில் அது ஒரு பகுதி என்று எண்ணி அதை குஞ்சரமாகிய யானையை போல வலிமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே இந்த சிற்பத்தின் பொருளாகும்.
கோயில் சிற்பங்களில் எண்ணற்ற வாழ்க்கை தத்துவங்கள் அடங்கியிருக்கிறது. சற்று அமைதியாக இதை கவனித்துப் பார்த்தால் புரியும். கோயிலில் இந்த சிற்பங்களை அமைத்ததற்குக் காரணம், இங்கே வரும் மக்கள் இவற்றைப் பார்த்து அதன் அர்த்தத்தைப் புரிந்து வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும். எனவே, நீங்களும் அடுத்தமுறை கோயிலில் நவநாரிகுஞ்சரம் சிற்பத்தைப் பார்த்தால், இந்த விளக்கத்தை நினைவில் வைத்து அந்த சிற்பத்தைக் கண்டு தரிசித்து அனுபவியுங்கள்.