
பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், பக்தன் பட்டத்ரிக்கும் நடந்த சம்பாஷணை ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, நூறு நாட்கள் நடந்தன. எதற்காக இந்த சம்பாஷணை என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்!
கேரள மாநிலம், திருநாவாய் என்கிற இடத்தில், நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர் நாராயண பட்டத்ரி. இவர் சம்ஸ்கிருத இலக்கணம் பயில எண்ணினார். அச்யுத பிஷாரடி என்பவரை குருவாக ஏற்று, சம்ஸ்கிருத இலக்கணத்தைக் கற்றார். மிகச் சிறந்த குருவாகிய அச்யுத பிஷாரடிக்கு வாத ரோகம் இருந்தது. தன்னுடைய கை, கால்களைக் கூட அவரால் நகர்த்த முடியாத நிலைமை இருந்தது. இருந்தபோதும், அந்த நிலையிலேயே சிஷ்யர்களுக்கு பாடங்களை நடத்துவார். பட்டத்ரியின் குருகுல வாசம் முடிந்தது.
தனக்கு இவ்வளவு அருமையாக சம்ஸ்கிருத இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்த குருவின் மீது பட்டத்ரி அளவிலா பக்தி வைத்திருந்தார். குரு தட்சணையாக, அச்யுத பிஷாரடியின் வாத ரோகத்தை அவர் எத்தனை மறுத்தும், அவரிடமிருந்து வாங்கிக் கொண்டார் பட்டத்ரி. ‘நாராயணீயம்’ என்கிற பொக்கிஷம் நம் அனைவருக்கும் பக்தன் பட்டத்ரி மூலம் கிடைக்க பரந்தாமன் கிருஷ்ண பகவான் செய்த லீலை இது.
‘எழுத்தச்சர்’ என்ற பிரபலமான ஜோதிடர், நாராயண பட்டத்ரியின் வாத நோய் தீர, குருவாயூர் சென்று அங்கேயிருக்கும் குளத்தில் நீராடக் கூறினார். பின்னர், குருவாயூர் கோயிலின் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சன்னிதிக்கு வலப்பக்கத் திண்ணையில் அமர்ந்து மத்ஸ்யம் தொட்டுப் பாடுமாறு கூறினார்.
பரந்தாமனின் அருளைப் புரிந்துகொண்டார் பட்டத்ரி. ஜோதிடர் எழுத்தச்சர் கூறியபடியே, குருவாயூர் சென்று குளத்தில் நீராடி, கோயிலின் சன்னிதிக்கு வலப்பக்கமுள்ள திண்ணையில் அமர்ந்தார் பட்டத்ரி. மத்ஸ்ய அவதாரத்திலிருந்து, பரந்தாமனின் அவதாரம் வரை விரும்பிக் கேட்க, பகவான் தனக்கிட்ட கட்டளையாக இதைக் கருதி மகிழ்ந்தார்.
ஒரு நாள் இரு நாள் கிடையாது, மொத்தம் நூறு நாட்கள் பக்தன் பட்டத்ரி அந்தத் திண்ணையில் அமர்ந்தவாறே, பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமை, மகிமை, அழகு ஸ்வரூபம், வாத்ஸல்யம் போன்ற பலவற்றை ஆயிரம் ஸ்லோகங்களில் சுவைபட எழுதினார். பக்தன் பட்டத்ரியின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் குருவாயூர் கிருஷ்ணன் கேட்டு ரசித்து தலையாட்டுவானாம். பக்தன் பட்டத்ரிக்கும் பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் நூறு நாட்கள் நடந்த சம்பாஷணையே ‘நாராயணீயம்’ ஆகும்.
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் தனது பாடலை ரசித்துக் கேட்பதறிந்த பக்தன் பட்டத்ரி, ‘இப்பிறவி உய்ய இது ஒன்றே போதும்’ என்று மெய் சிலிர்த்து கண்ணீர் வடித்தார். நூறாவது பாடலை, அதாவது ‘தசகம்’ பக்தன் பட்டத்ரி எழுதி முடிக்கையில், குரு அச்யுத பிஷாரடியிடமிருத்து அவர் ஏற்றுக்கொண்ட வாத ரோகம் நீங்கியது. பக்தன் பட்டத்ரி, பரந்தாமனுடன் சம்பாஷணை செய்து எழுதிய ‘நாராயணீயம்’ அனைத்து வகை நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த மாமருந்தாகும்.
குருவாயூர் தலத்தில் பக்தன் பட்டத்ரி அமர்ந்து எழுதிய இடம், ‘பட்டத்ரி மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது. நாராயணீயம் எழுதி முடித்தது கார்த்திகை மாதமென்பதால், முடித்த தினம் ‘நாராயணீய தினமாக’ குருவாயூரில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணனின் மீது, பக்தர்களுக்குரிய பக்தி எண்ணிலடங்காதது. வடக்கில் பக்தை மீரா; தெற்கில் பக்தை ஆண்டாள். மேலும், ‘உண்கிற சோறும், தின்கிற வெற்றிலையும், அருந்தும் நீரும் கண்ணனே காண்!’ என பரந்தாமன் மீது கொண்ட பக்தி பரவசத்தால் தம்மை அர்ப்பணித்த ஆழ்வார்கள், அடியார்கள் ஏராளம். பரந்தாமனும், பக்தன் பட்டத்ரிக்கு அடிமையானவன் என்பதை ‘நாராயணீயம்’ நிரூபித்துள்ளது.