
திருநெல்வேலி - பாபநாசம் மார்க்கத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் உள்ளது புகழ் பெற்ற வேணுகோபால் கிருஷ்ணன் கோயில். இங்கே சுவாமி ருக்மணி, சத்திய பாமாவை எப்போதும் பிரியாமல் காட்சி தருகிறார். எனவே, இத்தலம் பிரிந்த தம்பதியர்களை சேர்க்கும் தலமாக விளங்குகிறது. கிருஷ்ண ஜயந்தியன்று சுவாமிக்கு கண் திறப்பு மற்றும் சங்குப்பால் தரும் வைபவம் நடைபெறுகிறது. அன்று ஒரு தேங்காயை சுவாமி பாதத்தில் வைத்து, அதன் மூன்று கண்களைத் திறக்கின்றனர். அதன் பின்பு சிறிய சங்கில் பால் எடுத்து அதை உத்ஸவ மூர்த்திக்கு புகட்டும்படியாக பாவனை செய்வர். அதன்பின்பு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெல் தானியத்தை பிரசாதமாகத் தருகின்றனர். கிருஷ்ணர் பிறந்த பிறகு உலகு செழிப்பாக இருந்ததை நினைவுறுத்தும் வகையில் நெல் தானிய பிரசாதம் இக்கோயிலில் வழங்கப்படுகிறது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ளது தெற்கு கிருஷ்ணன் கோயில். இங்கு ஒவ்வொரு ரோஹிணி நட்சத்திர நாளில் கிருஷ்ணர் தொட்டிலில் ஊர்வலப் புறப்பாடாவது விசேஷம். கிருஷண ஜயந்தி அன்று கிருஷ்ணர் பிறக்கும் வைபவத்தினை பாவனையாக நடத்திக் காண்பிக்கின்றனர். அன்று மாலை கிருஷ்ணர் தங்கத் தொட்டிலில் புறப்பாடாகி உறியடி உத்ஸவம் காண்பார். இத்தல விநாயகர், ‘வைஷ்ணவ விக்னேஸ்வர்’ என்ற பெயரில் இரண்டு தந்தங்களுடன் காட்சி தருகிறார். பொதுவாக, கோயில்களில் விநாயகர் ஒரு தந்தத்துடன்தான் காட்சி தருவார்.
மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ளது, நவநீத கிருஷ்ணன் கோயில். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயம் இது. மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வடக்கு கோபுர திசையில் இருப்பதால், ‘வடக்கு கிருஷ்ணன் கோயில்’ என்றும், ஆரம்பத்தில் கம்பத்தின் கீழ் வீற்றிருந்ததால் ‘கம்பத்தடி கிருஷ்ணன் கோயில்’ என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகில் சத்தியபாமா, ருக்மணி தாயார் வீற்றிருக்கின்றனர். தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணர் கோயில், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோயில்தான். கிருஷ்ண ஜயந்தியன்று இங்கே வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறும். அதனைக் காண நவநீதகிருஷ்ணன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்கிறார்.
மாமல்லபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் சுவாமி கோயில். கிருஷ்ண ஜயந்தி இங்கு 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் கிருஷ்ணன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். விழாவின் இறுதி நாளில் உறியடி விழா நடைபெறும். அப்போது உறியடியில் சிதறி விழும் முறுக்கு, அப்பம், பழங்கள், தேன் குழல் போன்றவற்றை பக்தர்கள் முந்தியடித்து ஓடி எடுப்பார்கள். இதனை எடுத்து ஒரு துணியில் கட்டி வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் கோயிலின் மடைப்பள்ளி பிரசாதமான புளியோதரை திருப்பதி லட்டுக்கு இணையானதாகும்.
திருவையாறிலிருந்து மேற்கே 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வரகூர் வேங்கடேசப் பெருமாள் கோயில். இத்தலத்தில், கிருஷ்ண ஜயந்தியின்போது, கோலாகலமாக நடைபெறுகிறது உறியடி உத்ஸவம். பத்து நாள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உத்ஸவத் திருநாளன்று, கிருஷணர் வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார். அப்படி உறியடிக் கண்ணனாக பெருமாள் வீதியுலா வரும் வேளையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டே கோயிலை அடைவார்கள். இடுப்பிற்குக் கீழே அங்கஹீனம் ஆனவர்கள் இன்று மூன்று முறை வீதிகளை உலா வருகிறார்கள். இதனால் அவர்களின் குறைகள் தீரும் என்று நம்பப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், திப்பிறமலையில் அமைந்துள்ளது கருமாணித்தாழ்வார் கிருஷ்ணர் கோயில். இத்தலத்தில் அருளும் கிருஷ்ணர் சிலையானது தென்னிந்தியாவிலேயே பெரிய கிருஷ்ணர் சிலை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அதாவது, இங்கே சுமார் 13 அடி உயரத்தில் கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். தாயின் வயிற்றில் இருந்தபடியே தந்தைக்கு காட்சியளித்ததால் ‘கருமாணித்தாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்’ என்ற பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. கிருஷ்ண ஜயந்தி அன்று கிருஷ்ணருக்கு செய்யப்படும் பூரண சந்தன காப்பு அலங்காரம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். அன்றைய தினம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள வடசேரி கிருஷ்ணன் கோயிலில் மூலவர் பாலகிருஷ்ணன், குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இரு கரங்களிலும் வெண்ணெயை ஏந்தி நிற்கும் இவரை, இரவு நேர பூஜையின்போது, வெள்ளி தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் வைபவம் நடைபெறுகிறது.
அதற்கு முன்பாக பாலகிருஷ்ணனுக்கு படைக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் நைவேத்திய பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்தல இறைவனை தொடர்ச்சியாக மூன்று அஷ்டமி தினங்கள் அல்லது ரோஹிணி நட்சத்திர நாளில் வழிபட்டு வந்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவில் என்பதால் இங்கு ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி அன்று நள்ளிரவில் பாலகிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.