அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர். பழனியில் நவபாஷான முருகன் சிலையை நிறுவிய போகர், ஒரு மிகச்சிறந்த அருமருந்தினையும் நமக்கு அளித்துச் சென்றுள்ளார்.
மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம்தான் அது. பக்தி, உணவு என அனைத்தும் அந்நாளில் வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவே இருந்தது என்பதற்கு பஞ்சாமிர்தம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. பண்டைய தமிழ் நூல்களில் பஞ்சாமிர்தம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரசாதம் கி.பி. 9ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. தமிழில் 'பஞ்ச' என்றால் ஐந்து என்றும் 'அமிர்தம்' என்பது தெய்வீகப் பொருள் என்பதையும் குறிக்கிறது.
முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம் பல நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்டது என பக்தர்கள் நம்புகின்றனர். பல இடங்களில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டாலும் பழனி பஞ்சாமிர்தம் தனி ருசி கொண்டது. நாட்டு சர்க்கரை, மலை வாழைப்பழம், பசு நெய், தேன், ஏலக்காய் ஆகிய ஐந்து இயற்கையான பொருட்களைக் கொண்டு இந்த பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. மேலும், கற்கண்டு பேரிச்சை, உலர் திராட்சை ஆகியவை கூடுதல் சுவைக்காக சேர்க்கப்படுகின்றன.
இந்த பஞ்சாமிர்தத்தில் ஒரு சொட்டு நீர் கூட கலக்காமல் சுத்தமான நெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தற்போது முழுக்க முழுக்க இயந்திரங்கள் மூலமே பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. பழனி பஞ்சாமிர்தம் 2016ம் ஆண்டு GI அங்கீகாரத்தைப் பெற்றது. GI பயன்பாட்டின்படி, பஞ்சாமிர்தம் உணவுப் பொருட்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் அதிக அளவில் தயாரிக்கப்பட்டாலும், எந்தவித செயற்கைப் பொருட்களும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. பழனி பஞ்சாமிர்தம் முதலில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி தண்டாயுதபாணியின் சிலைக்கு அபிஷேகம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது. இது பின்னர் பெரிய பகுதியுடன் கலக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மரபு சார்ந்த பாரம்பரிய உணவு வகைகளின் மீதான அறிவியல் பூர்வமாக நடைபெற்ற ஆய்வில் ஒரு முறை பழனி பஞ்சாமிர்தமும் இடம் பெற்றது. இந்த ஆய்வில் பஞ்சாமிர்தம் உடலுக்கு அனைத்து வகையிலும் நன்மை தரக்கூடியது என்பது தெரியவந்தது. பஞ்சாமிர்தத்தில் கலக்கப் படும் பால் பொருட்கள் உடலுக்கு இன்றியமையாத உணவாகக் கருதப்படுகிறது. இது செரிமானத் தன்மையை அதிகம் கொண்டது.
பஞ்சாமிர்தத்தில் கலக்கப்படும் நெய்யில் எளிதில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, டி, ஈ, கே நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு செயல்பாட்டை சீராக்குகிறது. அதேபோல், தேனில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. தேன் மலட்டுத்தன்மையை நீக்கும். பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் வாழைப்பழம் முழு விகித உணவாகும். பஞ்சாமிர்தத்தை காலையிலும், மாலையிலும் ஒரு சிட்டிகை எடுத்துக் கொண்டாலே உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவிற்கு உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்தாண்டை விட இந்த ஆண்டு ஐயப்ப சீசன் காலத்தில் பஞ்சாமிர்த விற்பனை 15 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்து உள்ளதாக பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.