சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தலைக்கு மேல் ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பிரச்னையை கையாளுகின்றனர். அந்த வகையில் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய பிரச்னையை சமாளிக்கும் 7 வழிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. உங்கள் பார்வையை மாற்றுங்கள்: நம்மை நோக்கி வரும் பிரச்னைகளை ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். பிரச்னைகள் வரும்போது அதை தடையாகப் பார்க்காமல் படிக்கல்லாக நினைத்து, முட்டுக்கட்டைகளை மோட்டிவேஷனாக மாற்றி கடினமான சூழலை கொஞ்ச நாளில் கடந்து விடலாம் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
2. நன்றியறிதல்: உங்கள் வாழ்வில் இருக்கும் சிறிய பாசிட்டிவான விஷயங்களைக் கூட நினைத்துப் பார்க்க வேண்டும். நாகேஷ் ஒரு படத்தில், ‘கல்லை கண்ணுக்கு கிட்ட வெச்சி பார்த்தா அது பெருசாதான் தெரியும். கொஞ்சம் தள்ளி வெச்சு பாரு. அது கடுகு சைஸ்ல தெரியும்’ என்பார். இதேபோல் பிரச்னைகளை பார்க்கும்போது அவற்றை எளிதாகக் கடந்து செல்ல முடியும்.
3. நிகழ்காலத்தில் இருத்தல்: கடந்த காலத்தை நினைத்து கலங்குவதும், எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்வதாலும் நிகழ் காலம் மாறிவிடாது என்பதால் இப்போது நம் கைகளில் என்ன இருக்கிறது என்பதனை மட்டும் வைத்து தெளிவாகக் கையாள வேண்டும்.
4. தீர்வுகள்: பிரச்னைக்கு மாற்றாக இருப்பது தீர்வு மட்டுமே என்பதால் மனதை வாட்டும் பிரச்னைகளை மட்டும் யோசிக்காமல், அதற்கான தீர்வினை யோசித்தால் முழுதாக பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை என்றாலும் பாதியாவது தீர்ந்துவிடும்.
5. கவலையை மறக்க கொஞ்சம் நகைச்சுவை: சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பிரச்னை தற்போது நமக்கு நகைச்சுவையாகத் தோன்றுகிறபோது, நிகழ்காலத்தில் தோன்றுகிற பிரச்னையை நகைச்சுவை உணர்வுடன் எதிர்கொள்வதால் கவலையை மறந்து, மனம் தெளிவடைவதற்கு வாய்ப்பாக அமையும்.
6. உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுதல்: உடலுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ளுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற அன்றாட உடல் ஆரோக்கியத்தை என்ன நடந்தாலும் பார்த்துக்கொண்டால், அதாவது ஆரோக்கியமான மனநிலையில் இருந்தால் எவ்வளவு பிரச்னை ஏற்பட்டாலும் மனம் தெளிவடையும்.
7. பாசிடிவான மனிதர்கள்: ‘இவரிடம் பேசினால் மனம் கொஞ்சம் இலகுவாகும்’ என நாம் நினைக்கும் நபரிடம் பேசினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும், மனதில் உள்ள குழப்பம் விலகி புத்துணர்ச்சியுடன் தீர்வு காண வழி பிறக்கும்.
மேற்கூறிய 7 வழிகள் மூலம் பிரச்னையை எதிர்கொண்டால் உங்கள் பிரச்னை அதுவே காணாமல் போய்விடும்.