
சுருளி வேலப்பர் கோவில் பல அதிசயங்களுக்கு பெயர் போன குகைக் கோவிலாகும். ஈர மண் விபூதியாகவும், நீரில் விழும் இலைகள் கல்லாகவும் மாறும் அதிசயம் இக்கோவிலில் நிகழ்கிறது. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் சுருளிமலையில் அமைந்திருக்கும் சுருளி வேலப்பர் கோவில் 2000 வருடம் பழமையானதாகும். இத்தகைய அதிசயம் வாய்ந்தக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பொதிகை மலையும், சதுரகிரி மலையும் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சுருளிமலை அமைந்துள்ளது. பழனி முருகனின் நவபாஷான சிலையை செய்வதற்கான இறுதி மூலிகையை போகர் சித்தர் இந்த மலையில் இருந்து தான் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
சுருளிமலையை சுற்றி 225 குகைகள் இருப்பதாகவும், இன்னும் பல சித்தர்கள் இக்குகையில் தவம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் விபூதி குகையில் ஈரமண் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயத்தை காணலாம். 48 நாட்கள் இங்குள்ள நீரில் விழும் இலைகள் பாறைப் போல மாறும் என்றும் சொல்லப்படுகிறது. இங்குள்ள பாறையின் மீது நீர் விழுந்தாலும் வழுக்கும் தன்மையின்றி இருப்பது அதிசயத்திற்குரியது.
இங்கிருக்கும் சுருளியாண்டவர் சன்னதியின் கிழக்கு பக்கம் அமைந்திருக்கும் இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இக்குகை ஒருவர் மட்டுமே படுத்துக் கொண்டு செல்லும் அளவிற்கே உள்ளது. இக்குகையில் சிவபெருமான் நுழைந்ததால், இது கைலாச குகை என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலுக்கு பின் பல புராணக்கதைகள் இருக்கின்றன. முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் திருமணம் முடிந்தப் பிறகு சிலக்காலம் இங்கு தான் தங்கியாருந்ததாக சொல்லப்படுகிறது. முன்பு ராவணனின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் சூழ, விஷ்ணுவின் தலைமையில் இங்கு தான் ஆலோசனை நடைப்பெற்றதாம்!
அதை அறிந்துக் கொண்ட ராவணன் தன்னுடைய அரக்கர் படையுடன் இங்கு வர, விஷ்ணு பகவான் பஞ்ச பூதங்களாக விண்ணுக்கும், மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.
சிவபெருமானுக்கு திருமணம் நிகழ்ந்தப்போது அகத்தியருக்கு சிவப்பெருமான் தன் திருமணக் கோலத்தை இந்த கைலாயநாதர் குகையில் தான் காட்டியருளியதாக சொல்லப்படுகிறது. இந்த குகைக்கு மேலே தான் சுருளி வேலப்பர் கோவில் அமைந்துள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வருவது நன்மைத் தரும்.