பூதத்தை விழுங்கிய குறும்புக்கார கண்ணன்!

Sri Krishnan with Yasotha
Sri Krishnan with Yasotha
Published on

ண்ணன் தனது சிறு வயதில் செய்த குறும்புகள் ஏராளம். அவற்றைப் படிக்கப் படிக்க நம் மனதுக்குள் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். கண்ணன் தனது சிறு வயதில் செய்த ஒரு குறும்பினைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கண்ணனுக்கு வெண்ணை என்றால் கொள்ளைப் பிரியம். ஆயர்பாடியில் வெண்ணை எங்கிருந்தாலும், யார் வீட்டிலிருந்தாலும் அவனுக்குக் கவலையில்லை. அவனைப் பொறுத்தவரை வெண்ணை என்பது அவனுக்குச் சொந்தமான ஒரு பொருள்.

ஒரு நாள் யசோதை தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள். யசோதை தயிரைக் கடையக் கடைய அதிலிருந்து வெண்ணை திரண்டு வரத் தொடங்கியது. அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கண்ணனின் நாவில் நீர் ஊறத் தொடங்கியது. கண்ணன் வெண்ணையைத் தின்ன வேண்டும் என்று முடிவு செய்து விட்டான். உடனே கண்ணன், யசோதாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டான்.

“அம்மா, இந்தப் பெரிய பானைக்குள் ஏதோ சுற்றிச் சுற்றி வருகிறதே அது என்ன?”

வெண்ணைய் என்று சொன்னால் கண்ணன் அதைத் தின்று விடுவான் என்பது யசோதைக்குத் தெரியும். ஆகையினால், கண்ணனை பயமுறுத்த ஒரு பொய்யைச் சொன்னாள். “கண்ணா இது ஒரு பயங்கரமான பூதம். உன்னைப் போன்ற சிறுவர்கள் என்றால் இந்த பூதத்திற்கு கொள்ளை பிரியம். ஆதனால் நீ இங்கே இருக்காதே. அது உன்னைப் பிடித்து விழுங்கி விடும்” என்றாள்.

கண்ணன் ஒரு அவதாரப்புருஷன் என்றாலும் யசோதைக்குக் குழந்தைதானே? யசோதை இப்படிச் சொன்ன அடுத்த கணமே கண்ணன் அந்த பானைக்குள் எட்டிப் பார்த்தான்.

“அம்மா, பூதம் உன்னைப் பிடித்து விழுங்கி விடப்போகிறது. அது உன்னை விழுங்கி விட்டால் நான் என்ன செய்வேன் ?” என்றான்.

கண்ணன் ஏதுமறியாதவன் போல யசோதையிடம் இவ்வாறு கேட்க, கண்ணனின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று யசோதைக்குப் புரியவில்லை. அவள் சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பதிலுரைத்தாள்.

இதையும் படியுங்கள்:
கலாசார பண்டிகையாகக் கொண்டாடப்படும் பெட்ட பதுகம்மா மலர் திருவிழா!
Sri Krishnan with Yasotha

“இந்த பூதம் எங்களைப் போன்ற பெரியவர்களை ஒன்றும் செய்யாது. உன்னைப் போல சிறு குழந்தைகளைத்தான் அதற்கு மிகவும் பிடிக்கும்” என்றாள்.

இதைக் கேட்ட கண்ணன் சமாதானமாகவில்லை. “அப்படியெல்லாம் நம்ப முடியாது அம்மா. ஒருவேளை இந்த பூதம் உன்னைப் பிடித்து விழுங்கி விட்டால் என்ன செய்வது? உன்னைத் தனியே விட்டு விட்டு நான் போக மாட்டேன்” என்றான்.

தன் மீது கண்ணன் கொண்ட அன்பினை எண்ணி அவனை அப்படியே வாரியணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள் யசோதை.

இப்போது கண்ணன் தன் காரியத்தைச் சாதிக்க நினைத்தான். தனது தாயின் அரவணைப்பிலிருந்து மெல்ல விலகிச் சென்று அந்த தயிர் பானைக்குள் இரு கைகளையும் விட்டு உருண்டு திரண்டிருந்த வெண்ணையை அப்படியே எடுத்தான்.

இதைக் கண்ட யசோதை திகைத்து நின்றாள்.

“அம்மா, உன்னையும் என்னையும் மிரட்டும் இந்த பூதத்தை நான் விழுங்கப் போகிறேன்” என்று சொன்ன கண்ணன், திரண்ட வெண்ணையை தனது வாய்க்குள் போட்டு விழுங்கினான். அத்தோடு நில்லாமல் தயிர்ப்பானையை எட்டி உதைத்தான்.

தான் சொன்ன பூதக்கதையினைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வெண்ணையைத் தின்ற கண்ணனை என்னதான் செய்வது என்று புரியாமல் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் யசோதை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com