அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; காரணம் தெரியுமா?

The most beautiful of avatars is Azhagiya singar; Do you know the reason?
The most beautiful of avatars is Azhagiya singar; Do you know the reason?https://hampitourism.co.in

பெருமாளின் அவதாரங்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் அழகும் மதிப்பும் மிக்கதாக வணங்கப்படுகின்றன. பெருமாளின் அடியார்களாகிய ஆழ்வார்கள் சிலருக்குள் இத்தனை அவதாரங்களில் யார் அழகானவர் என்ற சிறு விவாதம் எழுவதும் உண்டு. இந்த சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசையாழ்வார், திருமாலின் பத்து அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தார்.

ஆழ்வாரின் அன்பு வேண்டுகோளை ஏற்று பெருமாளின் அவதாரங்களான மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனர். பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கல்கி ஆகியோர் பிரியத்துடனும் எதிர்பார்ப்புடனும் போட்டியில் கலந்துகொள்ள வந்தனர்.

முதல் சுற்றில் மத்ஸ்ய, கூர்ம, வராஹ மூன்று அவதாரங்களும் முறையே மீன், ஆமை, பன்றி ஆகிய விலங்குகளின் வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது என ஆழ்வாரால் நிராகரிக்கப்பட்டனர். ஆனால், நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருந்ததால் விதிகளின்படி அவரை நிராகரிக்க முடியவில்லை. ஆகவே, நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்கள். இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்து பெருமையுடன் நின்றார்.

அவரைப் பார்த்ததும், “மகாபலியிடம் சிறிய பாத்தைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டு பிறகு பெரிய பாதத்தால் மூவுலகையும் அளந்தவர் நீங்கள்.  அதைப்போல போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு! எனவே, உங்களை நிராகரிக்கிறேன்” என்றாராம் திருமழிசையாழ்வார். ஏமாற்றத்துடன் விலகினார் வாமனர்.

அடுத்து சினத்துடன் கர்ஜித்தார் பரசுராமர். எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார் ஆழ்வார்.  அதையடுத்து, சகோதரர்களான பலராமனும், கண்ணனும் குறுநகையுடன் ஆழ்வாரிடம் வந்தனர். இருவரையும் பார்த்து, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது. யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று ஆழ்வார் கூறவே, ‘தம்பி கண்ணனே இதில் வெற்றி பெறத் தகுதி உள்ளவன்’ என்று தம்பிக்கு பலராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

குதிரை மீதமர்ந்து கம்பீரத்துடன் வந்த கல்கி பகவானிடம், "நீங்கள் இன்னும் அவதாரமே எடுக்கவில்லை, நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கு பெறுங்கள்" என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார் திருமழிசையாழ்வார்.

நரசிம்மர், இராமர், கிருஷ்ணர் மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள். மூவரையும் வணங்கி, அவரவரின் அவதாரங்களை பரீட்சித்துப் பார்த்த திருமழிசையாழ்வார், சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? "உங்கள் மூவரில் நரசிம்மர்தான் அழகு" என்பதே.

அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார். "இராமர் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார் என்பதில் சந்தேகமில்லை. கிருஷ்ணரோ, அனைவரையும் மயக்கிய அழகர் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனாலும், ஆபத்தில் யார் நமக்கு ஓடோடி வந்து உதவி செய்கிறார்களோ, அவர்களே மிகவும் அழகானவர்கள். பக்தன் பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து வந்து, உடனே காத்தப் பெருமாள் நரசிம்மரே. எனவே அவரே அழகு” என்றார் திருமழிசையாழ்வார். அனைவரும் சிறப்பான தீர்ப்பு என நரசிம்மரை போற்றி நின்றனர்.

பெருமாளை வணங்கும்போது முதலில் அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம். ஏனெனில், நமக்குத் துன்பங்கள் நேரும்போது பரந்தாமனின் திருவடிகளைத்தான் பற்றுகிறோம். அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன. எனவே, அவைதான் மிகவும் அழகு. அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர் ஆகிறார்.

இதையும் படியுங்கள்:
பகீர் கிளப்பும் கடை இட்லி மாவு!
The most beautiful of avatars is Azhagiya singar; Do you know the reason?

இந்தக் கருத்தைத் திருமழிசைப்பிரான் தாம் இயற்றிய, ‘நான்முகன் திருவந்தாதி’ என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார். அதில், ‘அரி’ எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார். அதனால்தான் ‘அழகியசிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார் நரசிங்க மூர்த்தி.

தெய்வமே என்றாலும் அழகு என்பது புற அழகில் இல்லை என்பது அறிந்து நற்செயல் செய்து அழகியசிங்கர் தாள் பற்றி வழிபடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com