

நூறு வருடங்கள் வாழ்ந்த நாகப்பாம்பு விலை மதிப்பற்ற மாணிக்க கல்லை (Cobra pearl) கக்கும் என்று சொல்வது உண்மையா? இன்றைக்கும் நம் ஊர்களில் நாகமாணிக்கம், நாகரத்தினம் என்று பெயர் வைக்கிறார்கள். அதற்கு காரணம் பல ஆண்டுகளாக நம்மிடம் சொல்லப்படும் இதுப்போன்ற விஷயங்கள் தான்.
100 வருடங்கள் வாழ்ந்த பாம்பு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்திருந்த விஷத்தை எல்லாம் ரத்தின கல்லாக மாற்றும். அந்த கல்லுக்கு விலை மதிப்பே கிடையாது என்றும் அந்த கல் இருட்டில் ஒளிரும்; அந்த அபூர்வ கல்லை பாம்பு முழு நிலவு அன்று தான் கக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அப்படி அந்த நாகம் கக்கிய கல்லை யார் எடுத்து தன்னிடம் வைத்துள்ளார்களோ அவர்களுக்கு அளவற்ற செல்வம், அதிர்ஷ்டம், புகழ், வெற்றி, ஆரோக்கியம் இது எல்லாமே கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள புராணக் கதைகளில் நாக மாணிக்கம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்து மரபுகளில், நாகங்கள் தெய்வத்தன்மை கொண்டவையாகவும், புதையல்களின் காவலர்களாகவும் பார்க்கப்படுகின்றன.
ஆனால், அறிவியல் ரீதியாக பார்த்தால் எந்த பாம்பும் நூறு வருடம் வாழ்ந்ததாக இதுவரை பதிவு செய்யப்படவில்லை. எந்தவொரு பாம்பு இனமும் அதன் தலையிலோ அல்லது உடலிலோ இதுபோன்ற இயற்கையான இரத்தினக் கல்லை வைத்திருப்பதற்கான ஆதாரமும் இல்லை. இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அமேரிக்காவில் மிஸோரி மாகாணத்தில் உள்ள Saint louis உயிரியல் பூங்காவில் வாழ்கின்ற ஒரு பெண் மலைப்பாம்பு தான் அதிகமாக 62 வருடங்கள் வாழ்ந்திருக்கிறது.
இதனால் 100 வருடம் ஒரு பாம்பு வாழ்வதையே அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அதைப்போலவே நாகபாம்புடன் தொடர்புடைய ராஜநாகத்தின் அதிகபட்ச ஆயுட்காலமே 20 வருடங்கள் தான் என்று சொல்கிறார்கள். இந்த பாம்புகளின் உடல்கூற்றுப்படி கடினமான ரத்தினகற்களை உருவாக்கும் திறன் கிடையாது. நாக மாணிக்கம் என்று கூறி விற்கப்படும் பல கற்கள், ஏமாற்றும் நோக்கத்துடன் விற்கப்படுபவை ஆகும்.
நூறு வருடம் வாழ்ந்த பாம்பு தான் நினைத்த உருவத்தை எடுக்கும் என்ற கதைகளும் உண்டு. இது நம் கலாசாரத்தில் மட்டுமில்லாமல் பல்வேறு கலாச்சாரத்திலும் சொல்லப்படும் கதையாகும். இது நம்பிக்கையாக இருக்கலாமே தவிர அறிவியல் ரீதியாக இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.