ராமபிரானுக்கே புரியாத புதிர்! அந்தத் துறவி ஏன் சாம்பலைக் கரைத்துக் குடித்தார்?

Aanmeegam  Article
Aanmeegam Article
Published on

யோத்தியை ஆட்சி புரிந்த ஸ்ரீ ராமபிரான் தன்னுடைய நாட்டு மக்களின் மனநிலையை அறிய விரும்பி, அரச கோலத்தை தவிர்த்து, சாதாரண மனிதனைப்போல தம்பி லட்சுமணனை அழைத்துக்கொண்டு ஊரை வலம் வந்துகொண்டிருந்தார்.

பசுமை நிறைந்த காட்டின் ஓரத்தில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. பல நாடுகள் கடந்து வந்த வெளியூரைச் சேர்ந்த துறவி ஒருவர் அங்கே புதிதாக வந்திருந்தார்.

துறவி ஆற்றில் நன்றாக அமிழ்ந்து ஸ்நானம் செய்து ஆசார - அனுஷ்டானங்களை முடித்த பிறகு, சமித்துக்களை பையில் இருந்து எடுத்துத் தீ வளர்த்தார். இவர் ஹோமம் செய்யப்போகிறார் என்று ஸ்ரீராமபிரான் நினைத்தார்.

ஆனால், அவர் ஹோமம் வளர்க்கவில்லை. இரண்டு பாத்திரங்களை எடுத்து அவற்றில் ஒன்றில் நீரை நிறைத்து மற்றொன்றில் மாவைப் போட்டு நீரைத் தெளித்துப் பிசைந்து, அந்த மாவில் ஆறு ரொட்டிகளைச் செய்தார்.

முதல் இரண்டு ரொட்டியில் நெய்யைத் தடவியும், அடுத்த இரண்டில் தேனைத் தடவியும், மீதி இருந்த இரண்டில் ஊறுகாயைத் தடவி விட்டு, தீயில் வாட்டினார்.

பிறகு கரையில் அமர்ந்து ஜபம் செய்தார். சிறிது நேரம் கழித்து கண்விழித்தார். துறவி ரொட்டித் தட்டை எடுத்தார்.

அந்த நேரத்தில் அவ்வழியாக ஓர் ஊனமுற்றவர் சென்று கொண்டிருந்தார். துறவி அவரை அழைத்து ஊறுகாய் தடவிய இரண்டு ரொட்டிகளைக் கொடுத்தார். அடுத்து நான்கு ரொட்டிகளில் தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த சிறுமிக்குக் கொடுத்தார்.

அடுத்து நெய் தடவியதை எடுத்தார். ஆற்றில் மீன்களுக்கு இரண்டு ரொட்டிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப் போட்டுவிட்டு, மூட்டையை பழையபடியே கட்டி வைத்துவிட்டு அடுப்பில் இருந்த சாம்பலை எடுத்துத் தண்ணீரில் கரைத்து மடமடவென்று அருந்திவிட்டு, அந்தக் கிண்ணத்தை பையில் வைத்துவிட்டு யாத்திரைக்குப் புறப்பட்டார் துறவி.

இந்தக் காட்சியைக் கண்ட ஸ்ரீராமபிரான் ஆச்சரியப்பட்டு, விவரம் புரியாமல் அவரை நெருங்கி "சுவாமி' நீங்கள் செய்த மூன்று வகையான ஆறு ரொட்டிகளையும் மூன்று விதமாகத் தானம் செய்து விட்டீர்களே, பிறகு அடுப்புச் சாம்பலை நீரில் கரைத்து அருந்திவிட்டு பயணம் செய்யப்புறப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று புரியவில்லை? விளக்கம் தருக என்றார்.

இதையும் படியுங்கள்:
சகுன சாஸ்திரம்: பூ விழுதல் முதல் பல்லி சத்தம் வரை... ஆன்மீக அறிகுறிகள்; பலன்கள்!
Aanmeegam  Article

"ஆமாம் அப்பா! நான் ஸ்நானம் செய்த பின் ஜபம் செய்ததைப் பார்த்தாய் அல்லவா! அப்போது என் மனம் ஜபம் செய்யும்போது இப்படி ஓடியது. இரண்டு ரொட்டியைத் தேன் தடவியும், இரண்டை நெய்த் தடவியும் சாப்பிட வேண்டும் என்று மனம் விரும்பியது. அதைத் திருப்திப்படுத்தவே அந்த ரொட்டிகளை செய்தேன்" என்றார் துறவி.

"பிறகு ஏன் சுவாமி நீங்கள் அவற்றை உட்கொள்ளவில்லை?" என்றார் ஸ்ரீராமபிரான்.

துறவியாகிய நான் எல்லா புலன்களையும் அடக்கிவிட்டேன். ஆனால் மனதை மட்டும் வெல்ல சிறிது சிரமப்படுவேன். அதன் விளைவாகவே ரொட்டி செய்து மனதை சமாதானப்படுத்தினேன்.

"சாம்பலாகப் (மண்ணாக) போகும் இந்தச் சரீரத்திற்குள் இருந்துகொண்டு உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப்போல் நான் கூறுவதைச் கேட்காமல் இருந்த என் பாழ் மனமே, இன்று உனக்கு இந்தச் சாம்பல்தான் ஆகாரம் என்று மனத்திற்கு தண்டனை அளித்தேன்" என்றார் துறவி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com