

தமிழர்களின் பாரம்பரியமான கொண்டாட்டங்களில் அறுவடைத் திருநாள் பொங்கல் மிகவும் முக்கியமானதாகும். இது உழவுத் தொழில் கால்நடை மற்றும் இயற்கைக்கு நன்றியும், மரியாதையும் செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. போகி முதல் காணும் பொங்கல் வரை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதுமே வெவ்வேறு மாநிலங்களில் அந்தந்த பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவில் தைப்பொங்கல்: தென்னிந்தியாவில் தைப்பொங்கல் கொண்டாட்டம் நான்கு நாட்கள் கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் பொங்கல் முதல் நாள் போகி பண்டிகை வீட்டை சுத்தம் செய்து, பழைய பொருட்கள் அகற்றப்பட்டு, ‘பழையன கழிதல், புதியன புகுதல்’ என்ற வகையில் புதிய மாற்றங்களை வரவேற்கும் விதமாக பழைய பொருட்களை அப்புறப்படுத்துவார்கள். தைப்பொங்கல் அன்று புதிதாக அறுவடை செய்த அரிசியில் புதிய பானை வெல்லம் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் பொங்கி இயற்கையை வழிபாடு செய்வது வழக்கம். மாட்டுப் பொங்கல் அன்று உழவுத்தொழிலுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவர். இன்று கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து கொண்டாடுவது வழக்கம்.
காணும் பொங்கல் மிகவும் பிரசித்திப் பெற்றது. காணும் பொங்கல் என்பது ஊர் சுற்றி பார்ப்பதை குறிப்பது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவதை குறிக்கிறது. கர்நாடகா, ஆந்திராவிலும் இதே முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
குஜராத் மகர சங்கராந்தி: குஜராத்தில் பட்டம் விடும் திருவிழா மகர சங்கராந்தியின் ஒரு அங்கமாக விளங்குகிறது. குழந்தைகள் முதல் பட்டம் விடுவதில் தேர்ச்சி பெற்ற வல்லுநர் வரை பலரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். பருப்பு வெல்லம் சேர்த்த பாரம்பரிய இனிப்பு வகைகள் செய்து உண்டு கொண்டாடுவர்.
பஞ்சாப்: கோதுமை அதிகம் விளையும் மாநிலமான பஞ்சாபில் பொங்கல் பண்டிகை 'லோஹ்ரி' என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. லோஹ்ரி என்பது அறுவடை திருவிழாவை குறிக்கிறது. பஞ்சாப் மக்கள் நெருப்பை தெய்வமாக வணங்கும் பண்டிகையாக லோஹ்ரி பண்டிகை உள்ளது. அன்று நெருப்பு மூட்டி குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றிணைந்து இப்பண்டிகையை கொண்டாடுவர்.
உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேச மாநிலத்தில் பொங்கல் 'கிச்சேரி' என்று அழைக்கப்படுகிறது. கிச்சேரி என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் முக்கியமாக கொண்டாடப்படும் ஒரு அறுவடை திருவிழா ஆகும். இந்த விழா, ‘கீர் சாவல் மேளா’ என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை, யமுனை, சரயு போன்ற புனித நதிகளில் புனித நீராடுவது இந்த திருவிழாவில் அடங்கும். மக்கள் கீர் அரிசி மற்றும் பாலில் செய்யப்பட்ட இனிப்பு உணவை பக்தர்கள் மற்றும் ஏழைகளுக்கு பிரசாதமாக தயாரித்து விநியோகிப்பர்.
மத்தியப்பிரதேசத்தில் அறுவடைத் திருவிழா ‘ஹரேலி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
ஹரியானாவில் அறுவடைத் திருவிழா ‘ஜிதியா’ என்று அழைக்கப்படுகிறது. இது ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
அஸ்ஸாமில் தமிழர்களைப் போன்று அறுவடை திருநாளாக ‘மாக் பிஹீ’ என கொண்டாடுகிறார்கள். அன்று வைக்கோல் போரில் வீடு போல செய்து எரிப்பார்கள். இது தீமையை அழித்து மகிழ்ச்சி மற்றும் செல்வத்தின் வரவை குறிக்கிறது. அடுத்த நாள் ‘மாக் பிஹீ’ அன்று பாரம்பரிய உணவுகளான டீல் பிதாக்கள் மற்றும் பிற உணவு வகைகளை மகிழ்ச்சியுடன் தயார் செய்து இறைவனுக்குப் படைத்து கொண்டாடுவார்கள்.
பீகார் மற்றும் ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் இப்பண்டிகை ‘சக்ராத்’ அல்லது ‘கிச்சடி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இன்று மக்கள் நதிகளில் நீராடி விட்டு வெல்லம் சேர்த்து எள் உருண்டைகளை செய்து மற்றவர்களுக்கும் வழங்கி கொண்டாடுவார்கள். இரண்டாம் நாள் ‘மக்ராத்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பருப்பு, அரிசி, பட்டாணி போன்றவற்றை கொண்டு கிச்சடி சமைத்து இப்பண்டிகையை கொண்டாடுவார்கள்.
மராட்டியம் மற்றும் கோவாவில் இப்பண்டிகை ‘ஹல்டி குங்கும்’ அல்லது மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. நாட்டியத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது மகர சங்கராந்திதான். இந்த நாளில் எள்ளுருண்டை, அல்வா, போளி போன்றவற்றை செய்து சாப்பிடுவார்கள். இங்கு முதல் நாள் போகி என்றும் இரண்டாம் நாள் சங்கராந்தி, மூன்றாம் நாள் கிங்ராண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் அறுவடை பண்டிகை ‘போயூஸ் சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையின் ஸ்பெஷல் என்றாலே இனிப்பு வகைகள்தான். இங்கு மால்போவா, நர்கெல்நாடு, டில்நாடு ஆகிய இனிப்புகள் பண்டிகையின்போது செய்யப்படும் இனிப்பு உணவுகள் ஆகும்.
இமாச்சல பிரதேசத்தில் ‘மகா சாஜி’ என்ற பெயரிலும் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அறுவடை திருநாள் மிகவும் சிறப்பாக இந்த தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது.