

‘அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்’ என்று சொல்கிறார்களே, அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா? ஆபத்தில் இறைவனின் திருவடி உதவுவதைப் போன்று உடன்பிறந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பதுதான் இதற்கான பொருள். ஆலயத்திற்குச் சென்றாலும் இறைவனின் திருவடியைத்தான் முதலில் தரிசிக்க வேண்டும். பக்தர்களின் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி இறைவனின் திருவடிக்கே உண்டு. இறைவனின் திருவடியை கிரீடம் போன்று செய்திருப்பார்கள்.
அது எத்தனை முறை நம் தலையில் வைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நம் தலையெழுத்து நன்றாக இருக்கும். தனது தாய் செய்த தவறுக்கு பரதன் ஸ்ரீராமனை காட்டில் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். ஸ்ரீராமனின் பாதுகைகளை வேண்டி பெற்று வந்து அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான். இராம ராஜ்ஜியத்தை விட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அதன் சக்தியை யூகித்துக் கொள்ளுங்கள்.
திருவரங்கத்தில் குடிகொண்டுள்ள இறைவன் திருவடிகளை மையமாக வைத்து 1000 சுலோகங்கள் அடங்கிய ‘பாதுகா சஹஸ்ரம்’ என்ற நூலினை வேதாந்த தேசிகர் எனும் வைணவ ஆசாரியர் இயற்றி இருக்கிறார். முழுக்க முழுக்க இறைவனின் திருவடிப் பெருமைகளையே உரைக்கும் இந்த சுலோகங்களின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. தினமும் காலையில் எழுந்தவுடன் அவரவர்களுக்குரிய சமயக் கடமைகளைச் செய்ய வேண்டும். பின்னர் இதை பாராயணம் செய்து மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். பின்னர் கீழே தரப்பட்ட சுலோகத்தை 108 தடவை ஜபிக்க வேண்டும்.
‘தாரஸ்பாரதர ஸ்வர்ரஸ பரரா ஸா பதாவநீ ஸாரா
தீரஸ்வைர சரஸ்திர ரகுபுர வாஸரதி
ராமஸவா’
பொருள்: கெட்ட தலையெழுத்தினை நல்ல எழுத்தாக மாற்றலாம். கெட்ட தலையெழுத்து என்றால் பிரம்மாவினால் ஒவ்வொருவர் நெற்றியிலும் எழுதியுள்ள எழுத்தாகும். ஜாதக ரீதியாக ஒருவருக்கு படிப்போ, கல்யாணமோ, தீராத வியாதியோ பிரச்னையாக இருந்தால் அரிசி மாவினால் பாதுகா யந்திர கோலம் போட்டு நெய் விளக்கேற்றி வைத்து குறைபாடுள்ள ஜாதகத்தை இந்த இயந்திரத்தின் மீது வைத்து ஜாதகத்தில் எந்த குறைபாடு இருந்தாலும் கீழ்க்கண்ட சுலோகத்தை ஜபித்து பிரார்த்தனை செய்தால் தோஷங்கள் நீங்கி சுக பாக்கியங்கள் ஏற்படும்.
கெட்ட தலையெழுத்தை நல்ல எழுத்தாக மாற்ற ஜபிக்க வேண்டிய சுலோகம்:
‘பரிணமயஸி சௌரே: பாதுகே த்வம் ஸுவர்ணம்
குஹகஜந விதூரே ஸத்பதே லப்த வ்ருத்தே:
க்வநு கலு விதித: தே கோப்யஸௌ தாதுவாத:’
பொருள்: ‘பாதுகையே! உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொண்டவர்களுக்கு நீ செய்வது என்ன? அவர்களின் தலைகளில் கெட்ட எழுத்துக்களால் எழுதப்பட்டவற்றை தங்கத்தால் எழுதப்பட்ட நல்ல எழுத்துக்களாக நீ மாற்றி விடுகிறாய். உன்னை தீய மக்கள் அண்ட விடாதபடி நீ வெகு தூரத்தில் உள்ளாய். இப்படிப்பட்ட ரஸவாதம் எனும் மாற்று வித்தையை நீ எங்கு கற்றாய்?’ என்பது இந்த ஸ்லோகத்தில் அர்த்தம்.
சாதாரண பொருள் ஒன்றை தங்கமாக மாற்றும் வித்தைக்கு ரசவாதம் என்று பெயர். மக்களின் தலையெழுத்துக்கள் சாதாரணமாக உள்ளன. ஆனால், பாதுகையை தங்கள் தலையில் ஏற்பவர்களின் தலையெழுத்து தங்கமாக மாறி விடுகிறது. இதனால் அவர்களும் தங்கம் போன்று போற்றத்தக்கவர்களாக ஆகிறார்கள். சுலோகங்களை ஜபிக்கும்போது மனதில் இறைவன் பாதுகைகள் மீதே நம் மனம் இருக்க வேண்டும். பக்தி சிரத்தையுடன் 48 நாட்கள் ஜபித்து வந்தால் வேண்டிய பலன் கிட்டும். யார் கைவிட்டாலும் ‘பாதுகா ஸ்லோகம்’ உங்களைக் கைவிடாது.
பாராயணம் முடிந்த பிறகு,
‘கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:’
என்று கூறி இந்த பாதுகா சஹஸ்ரத்தை அருளிய நிகமாந்த மகாதேசிகரை மனதால் நினைத்து சேவிக்க வேண்டும்.