

நல்லெண்ணெயைப் போலவே இலுப்பை எண்ணெயும் ஆன்மிகம் மற்றும் ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் நாம் இலுப்பை எண்ணெயின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இலுப்பை எண்ணெய் மருத்துவ குணங்கள் பல வாய்ந்த ஒரு மகத்தான எண்ணெயாகும். நெய் போன்ற தன்மையும் அடர் மஞ்சள் நிறத்தையும் கொண்ட எண்ணெய். இதை முத்துக்கொட்டை எண்ணெய் என்றும் விளக்கெண்ணெய் என்றும் அழைப்பது வழக்கம். இந்த எண்ணெய் பல மருத்துவ குணங்கள் வாய்ந்தது. உடல்நலம் மற்றும் ஆன்மிகம் என இரண்டிலும் இந்த எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இலுப்பை மரத்தின் தாவரவியல் பெயர் Bassia Latifolia ஆகும்.
ஈசனுக்கு உகந்த ஒரு எண்ணெயாகவும் இலப்பை எண்ணெய் கருதப்படுகிறது. இந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி தினமும் ஈசனை வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பல சிவ தலங்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக உள்ளது. நல்லெண்ணெயைப் போல இந்த எண்ணெயில் ஏற்றும் தீபமானது புகையின்றி எரியும் தன்மை கொண்டது. இதனாலேயே இந்த எண்ணெய் பல கோயில்களில் தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படுகிறது.
கொத்துக் கொத்தான நீண்ட இலைகள் மற்றும் மலர்களை உடைய இம்மரத்தின் கனிகள் சதைப்பற்றுடன் முட்டை வடிவத்தில் காணப்படும். இதன் விதை நொறுங்கக் கூடிய ஒருவித உறையினால் மூடப்பெற்றது. லேசான கசப்புச் சுவையும் குளிர்காலத்தில் உறைந்து விடும் தன்மையும் இந்த எண்ணெய்க்கு உண்டு.
பொதுவாக, கோயில்களில் விளக்கேற்ற பசு நெய், நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூன்று எண்ணெய்களும் ஒவ்வொரு விதத்தில் சிறந்ததாகவும் சக்தி மிக்கதாகவும் கருதப்படுகிறது. முற்காலத்தில் கோயில்களுக்கு அருகில் இலுப்பை மரங்கள் வளர்க்கப்பட்டு அதிலிருந்து பெறப்படும் விதைகளிலிருந்து இலுப்பை எண்ணெயை எடுத்து கோயில்களில் விளக்கேற்ற பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பஞ்சமுக குத்துவிளக்கில் வெண்பஞ்சுத் திரியைப் போட்டு விளக்கில் இலுப்பை எண்ணெயை ஊற்றி தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம். காலை மாலை என இரண்டு வேளைகளிலும் வீட்டில் இலுப்பை எண்ணெயைப் பயன்படுத்தி விளக்கேற்றி இறைவனை வழிபடுவது நல்லது.
இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடாக்கி உடலின் மீது தடவி பின்னர் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் உடல் வலி, இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் குணமாகும். இந்த எண்ணெயில் சருமத்தை மிருதுவாக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
இலுப்பை எண்ணெய் மலச்சிக்கலைப் போக்கவும், வயிற்றுப் பகுதியில் ஏற்படும் எரிச்சலைப் போக்கவும், வயிற்று வலியை குணமாக்கவும் பெரிதும் உதவுகிறது. இலுப்பை எண்ணெயை உடலில் தேய்த்து பின்னர் குளித்தால் சரும நோய்கள் நீங்கி சருமம் பளபளப்பாகும். வயது மூப்பின் காரணமாக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும் ஆற்றலும் இந்த எண்ணெய்க்கு உண்டு.
பூச்சிகள் கடித்தால் இலுப்பை எண்ணெயை கடிபட்ட இடத்தில் நன்றாகத் தேய்த்துத் தடவி விட்டால் பூச்சிக்கடியினால் பரவும் விஷம் எளிதில் முறியும். மேலும், பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சலும் வீக்கமும் குணமாகும்.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக இலுப்பை எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முற்காலத்தில் கோயில்களிலும் விளக்கேற்ற இந்த எண்ணெய் பெரிதும் பயன்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.