
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலை பல அதிசயங்களையும், ரகசியங்களையும் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பழனி மூலவர் முருகன் சிலை நவபாஷாணத்தால் உருவானது. இந்த நவபாஷாண சிலை 2500 ஆண்டுகளுக்கு முன் போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. மூன்றாம் படை வீடான இது 695 படிக்கட்டுகள் கொண்ட மலை. கோயிலுக்குக் கீழ் இருக்கும் திரு ஆவினன்குடிதான் பழனிமலைக் கோயிலுக்கு முந்தையது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் மூன்றாம் படை வீடாகக் கூறுவது திரு ஆவினன்குடியைத்தான்.
தண்டாயுதபாணி உருவான வரலாறு: 18 சித்தர்களில் ஓருவர்தான் போகர். இவர் பழனியில் தங்கி மக்களின் நோய்களுக்கு மருந்து கொடுக்கும் பணியை செய்து வந்துள்ளார். அந்த மருந்தினால் ஓருசிலர் பாதிக்கப்பட்டனர். இது ஏன் என அவர் ஆராய்ந்தபோது மூலிகை மருந்தில் உள்ள நச்சுத்தன்மையே என அறிந்தார்.
இதனால் அவர் பாஷாண மருந்துகளால் ஒரு சிலையை உருவாக்கி அதற்கு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்க, அவர்களும் குணமாயினர். இதன் பிறகுதான் போகர் நவ பாஷாணங்களைக் கொண்டு முருகர் சிலையை உருவாக்கி பழனிமலையில் பிரதிஷ்டை செய்து அங்கேயே தங்கி பணிகள் செய்திருக்கிறார் என தல வரலாறு கூறுகிறது.
நவபாஷாண சிலை: தவம் என்றால் ஒன்பது. ஒன்பது விஷயங்கள் கொண்டு ஒன்பது ஆண்டுகள் காலம் எடுத்து இந்த நவபாஷாண சிலை செய்யப்பட்டது. போகர் உருவாக்கிய இச்சிலையில் அறிவியல் தத்துவங்கள் அடங்கி உள்ளன. அதாவது, சித்தர்களின் கூற்றுப்படி அணுக்களைக் பிரித்து மீண்டும் சேர்க்கும் முறைக்குத்தான் நவபாஷாணம் முறை என்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் விஷத்தை விஷத்தால்தான் முறிக்க முடியும் என்பது போல்தான். ஆனால், இந்த நவபாஷாண சிலையை பழங்கால சித்தர்களால் மட்டுமே உருவாக்க முடியும்.
நவபாஷாணம் என்று குறிப்பிடப்படுவது சாதிலிங்கம், மனோசிலை, தான்பாஷாணம், வீரபாஷாணம், கந்தகபாஷாணம், பூரம், வெள்ளைபாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகும். இப்படி நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட சிலைகள் நவகிரகங்களின் சக்தியைப் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த சிலைக்கு பன்னீர, சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் மட்டுமே அபிஷேகம் செய்ய வேண்டும் என தல வரலாறு கூறுகிறது.
இதனால் சிலைக்கு அபிஷேகம் செய்த போருட்களை சாப்பிட்டால் நோய்கள் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இரவு நேரத்தில் தண்டாயுதபாணிக்கு வியர்க்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பழனி முருகனுக்கு இரவு நேரத்தில் சந்தனக் காப்பு சாத்துவது வழக்கம்.
அந்த நேரத்தில் வழக்கம் போல் சிலையிலிருந்து நீர் வெளியேறும். இரவில் சிலைக்குக் கீழ் ஒரு பாத்திரம் வைக்கப்படுகிறது. அந்த நீர் கௌபீன தீர்த்தம் என கூறப்படுகிறது. இரவில் சாத்தப்பட்ட சந்தானத்தின் நீர் உறிஞ்சப்பட்டு அதன் நிறம் பச்சையாக மாறியிருக்கும். அதனை காலை விசுவரூப தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர். இது நோய்களை தீர்க்கக்கூடியது. போகரின் அறிவாலும் தண்டாயுதபாணியின் அருளாலும் உருவாக்கப்பட்டதுதான் இந்த நவபாஷாண சிலை.