நீங்கள் அறியாத இந்திர லோகப் பசு காமதேனுவின் ரகசியங்கள்!

Kamathenu, the cow of Indra's world
Kamadhenu Cow
Published on

காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரம் முதலானவை அள்ள அள்ளக் குறையாதவை, நம் மனதில் நினைக்கும் எதையும் அடுத்த நொடியில் தரக்கூடிய அபூர்வ சக்தி படைத்தவை. தெய்வீகப் பசுவான காமதேனுவை பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்ளுவோம்.

கேட்பதை உடனடியாகத் தரக்கூடிய அபூர்வ சக்தி படைத்த பசுவான காமதேனு இந்திர லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். காமதேனு, ‘சுரபி’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. காமதேனுவிற்கு நந்தினி, பட்டி என இரண்டு மகள்கள் உள்ளனர். காமதேனு பெண்ணின் தலை மற்றும் மார்பையும், பசுவின் உடலையும், மயில் தோகையையும் உடையது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து பல்வேறு வஸ்துக்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் காமதேனு பசு.

இதையும் படியுங்கள்:
வீட்டில் நேர்மறை சக்தியை அதிகரிக்க பூஜையறையில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்கள்!
Kamathenu, the cow of Indra's world

ஒரு சமயம் வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு தனது படையுடன் விஜயம் செய்தார் மன்னர் விஸ்வாமித்திரர். ஆசிரமத்தில் இருந்த காமதேனு பசு எதைக் கேட்டாலும் உடனடியாகத் தருவதைக் கண்ட விஸ்வாமித்திரர், காமதேனு தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி, அதைத் தருமாறு வசிஷ்டரிடம் கேட்க, அவர் தர மறுக்கிறார். இதனால் கோபமடைந்த மன்னர், தனது படையை ஏவி காமதேனு பசுவினைக் கவர்ந்து வருமாறு கட்டளையிட்டார். வசிஷ்டரோ, காமதேனுவை நோக்க, அது உடனே பெரும்படையினைத் தோற்றுவித்து விஸ்வாமித்திரரையும் அவருடைய படையினையும் துரத்தியடித்தது. காமதேனுவின் சக்தியை உணர்ந்த விஸ்வாமித்திரர் தனது ராஜ்ஜியத்தைத் துறந்து தவ வாழ்க்கை மேற்கொண்டு ரிஷியானார் என்பது புராண வரலாறு.

சிவபெருமான், முருகர், விநாயகர் முதலான தெய்வங்களுக்கு வாகனமாக காமதேனு திகழ்கிறது. இறைவன் வீதியுலா செல்லும்போது காமதேனு வாகனத்தில் காட்சி தருவது வழக்கம். இத்தகைய வாகனங்கள் மரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். சில கோயில்களில் தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட காமதேனு வாகனங்களும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
கால பைரவர் கட்டுப்பாட்டில் காசி மாநகரம்: வியப்பூட்டும் புராணக் கதை!
Kamathenu, the cow of Indra's world

காமதேனு மூவுலகிற்கும் தாயாகக் கருதப்படுகிறது. காமதேனுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவகிரகங்களும் அமைந்து ஆட்சி செய்கின்றனர். வாயு புராணத்தில் காமதேனு பசுவைப் பற்றி பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது. பசுவின் பற்களில் புயல், மின்னல் தேவதையான மருத்தும், நாக்கில் சரஸ்வதியும், குளம்பில் கந்தர்வர்களும், மூட்டுகளில் சத்வ ரிஷிகளும், இரு கண்களில் சூரிய சந்திரர்களும், திமிலில் நட்சத்திரங்களும், கோமியத்தில் கங்கையும், உடல் முழுவதும் ரிஷிகளும், சாணத்தில் மகாலட்சுமியும், மயிர்க்கால்களில் அனைத்து வித்தைகளும், காமதேனு நடக்கும்போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை, மன்னித்தல், புஷ்டி, புத்தி, நினைவாற்றல், மேதைமை முதலானவற்றிற்கு உரிய தேவதைகள் வந்துகொண்டே இருப்பதாகவும் அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. காமதேனுவின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள் என்பது ஐதீகம்.

காமதேனு காயத்ரி மந்திரம்:

‘ஓம் சுபகாயை வித்மஹே
காமதாத்ரியை சதீமஹி
தந்தோ தேனு: ப்ரசோதயாத்’

வீட்டின் பூஜை அறையில் காமதேனுவை வைத்து மேற்காணும் மந்திரத்தைத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் நிறையும் என்பது ஐதீகம். பசுவிற்கு அகத்திக்கீரையினைத் தருவது மிகச்சிறப்பு.

காமதேனுவின் உடலில் அனைத்து தெய்வங்களும் குடிகொண்டிருப்பதால் காமதேனுவை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com